(தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, “அவர் இங்கேவந்தாலும் என்னோடு அளவளாவாமல் செல்வர். அவருக்கு என்பால் அன்புஇலதாயிற்று” என்று தலைவி கூறி வாயில் மறுத்தது.)
 231.   
ஓரூர் வாழினுஞ் சேரி வாரார் 
    
சேரி வரினு மார முயங்கார் 
    
ஏதி லாளர் சுடலை போலக் 
    
காணாக் கழிப மன்னே நாணட்டு 
5
நல்லறி விழந்த காமம் 
    
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே. 

என்பது வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ.

    (பி-ம்.) 1. ‘ஒராஅவாழினும்’, ‘ஒரூஉவாழினும்’; 4. ‘நாணிட்டு’, ‘நாணட’, ‘நாணிட’.

     (ப-ரை.) தோழி-, ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் -தலைவர் நம்மோடு ஓர் ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும்தெருவில் வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்- இத்தெருவில்வந்தாலும் நன்றாகத் தழுவிக் கொள்ளார்; நாண் அட்டு -நாணத்தை அழித்து, நல் அறிவு இழந்த காமம் - தக்கதிதுதகாததிது என்று எண்ணும் நல்ல அறிவை இழக்கச் செய்யும்காமமானது, வில் உமிழ் கணையின் - வில்லால் எய்யப்பட்டஅம்பைப் போல, சென்று சேண்பட - போய் நெடுந்தூரத்தில்அழியும்படி, ஏதிலாளர் சுடலைபோல - அயலாருடையசுடுகாட்டைப் போல, காணா - நம்மைக் கண்டும்வேறொன்றும் புரியாமல், கழிப - செல்லுவார்.

    (முடிபு) வாரார்; முயங்கார்; காமம் சேட்படக் கழிப.

    (கருத்து)தலைவர் என்பால் அன்பின்றி ஒழுகுகின்றார்.

    (வி-ரை.)ஆர - எனக்கு மன நிறைவு உண்டாகும்படி. ‘‘சுடலையையாரும் விரும்பார்; அயலார் சுடலையாயின் வெறுத்து ஒதுங்கிச் செல்வர்;அது போல என்னைக் கண்டும் விருப்பின்றி வெறுத்தொழுகினார்”என்றாள்.

    காமம் நாணை இழப்பதற்கும் நல்லறிவை இழப்பதற்கும் காரணமாதலின் நாணட்டு நல்லறிவு இழந்த காமம் என்றாள். விரைவில் நெடுந்தூரம் செல்லுதல் பற்றி வில்லுமிழ் கணையை உவமை கூறினாள். தலைவன் புறத்தொழுக்கினால் தலைவி தன் காமத்தை இழந்தாள். தலைவன்பால் விருப்பம் இல்லாள்போலக் கூறி வாயில் மறுத்தாள்.

    ‘நாணத்தை நீக்கி நல்லறிவு இழந்த தம் காமம் என்பால் அமையாமல் சேணிடத்தில் உள்ளாராகிய பரத்தையர்பால் அமைவதற்காக என்னைக் கண்டும் செல்லுவார்’ எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.

   
“நோதக் கன்றே காமம் யாவதும் 
   
 நன்றென வுணரார் மாட்டும் 
   
 சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே”          (குறுந். 78)  

என்பவாகலின், “நல்லறிவிழந்த காமம்” என்றாள்.

    மன், ஏ:அசை நிலைகள்.

    மேற்கோளாட்சி 1-2. சித்திர வண்ணம் வந்தது ( தொல். செய். 214, இளம்.)

    ஒப்புமைப் பகுதி 1. சேரி: குறுந். 258:1.

    1-4.குறுந், 203:1-5.

    4-5.நாணும் காமமும்: குறள், 1163, 1247.

    6.கணை வேகத்திற்கு: நற். 46:2: பெருங். 1. 48:8; சீவக. 502, 701.

(231)