(வரைந்து கொள்வதற்கு முன் பிரிந்து சென்ற தலைவன், தலைவிபால் மீளும்போது வாடைக்குக் கூறுவானாகி, “வாடையே, அதோதெரிகின்றதே, அது தலைவியின் ஊர்; நீ அவளைப் பாதுகாப்பாயாக”என்று பாகனுக்கு உணர்த்தியது.)
 235.   
ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் 
    
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் 
    
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி 
    
மரையின மாரு முன்றிற் 
    
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. 

என்பது வரையாது பிரிந்து வருவான் வாடைக்கு (பி-ம். வாடைக்கண்) உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.

    (வருவான் - மீண்டு வரும் தலைவன்.)

மாயெண்டன்.

    (பி-ம்.) 1. ‘வாழிய’; 2. ‘தூங்குவெள்’; 3. ‘கல்லுயரண்ணி யதுவே’.

    (ப-ரை.)வாடை - வாடைக் காற்றே, நெல்லி - நெல்லிக்காயை, மரை இனம் ஆரும் முன்றில் - மரையின் திரள்உண்ணுகின்ற முன்னிடத்தை உடைய, புல் வேய் குரம்பை -புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய, நல்லோள்ஊர் - நல்ல தலைவியினது ஊரானது, பாம்பின் தூங்குதோல் கடுக்கும் - பாம்பின் நாலுகின்ற உரியை ஒக்கும்,தூ வெள் அருவி - தூய வெள்ளிய அருவியை உடைய,கல் உயர் நண்ணியது - மலையின் உயரத்திலே பொருந்தியது; ஓம்புமதி - அங்கேயுள்ள தலைவியை நீ பாதுகாப்பாயாக;வாழி - நீ வாழ்வாயாக!

     (முடிபு) வாடை, நல்லோள் ஊர் நண்ணியது; ஓம்புமதி; வாழி.

    (கருத்து) மலையின் உச்சியிலே தோன்றுவது தலைவியினதுஊராகும்.

    (வி-ரை.) ஓம்புதலாவது தலைவியைத் துன்புறுத்தாமல் பாதுகாத்தல்.தலைவி வாடைக்கு வருந்துதல் இயல்பு. துன்பம் செய்யும் இயல்பினதாகியவாடைக்குக் கூறுவான், அதனை வயப்படுத்துவான் போல வாழி என்றான்.வாழியோ: ஓகாரம் அசை நிலை. உயர் - உயர்ந்த இடம்; என்றது உச்சியை. நல்லோளென்றான் அவள் நல்லியல்புகளை என்றும் நினைந்த வனாதலின்.

    இதனால் தலைவி வாடைக் காற்றால் வருந்துவாள் என்பதைப்புலப்படுத்தி அவள் ஊர் உள்ள இடமும் உணர்த்திக் குறிப்பினால்பாகனை விரைந்து தேரைச் செலுத்தத் தூண்டினான்.

    மேற்கோளாட்சி மு. தலைவன் நெட்டாறு சேறலின்றி அணிமைக்கட் பிரிந்த வழிக் கூறியது ( தொல். களவு. 17, இளம்.); வரைவிடை வைத்துப் பிரிந்து போகும் தலைமகன் கூறியது (தொல். களவு. 12, இளம். ந.)

    ஒப்புமைப் பகுதி 1-2. அருவிக்குப் பாம்பின் உரி: “செவ்வரைக் கொழிநீர் கடுப்ப வரவின், அவ்வரி யுரிவை யணவரு மருங்கின்” (அகநா. 327:12-3.)

    3-4. நெல்லிக்காயை மரையினம் உண்ணுதல்: (குறுந். 317:1-2); “பராரை நெல்லி யம்புளித் திரள்காய், கான மடமரைக் கண நிரை கவரும்”, “பல்கா னெல்லிப் பைங்கா யருந்தி, மெல்கிடு மடமரை” (அகநா.69:7-8, 399:14-5); “மரைபிரித் துண்ட நெல்லி வேலி” (புறநா. 170:1.)

    5.புல்வேய் குரம்பை: மலைபடு. 439; அகநா. 87:3, 172:10, 200:2, 369:23; புறநா. 120:13.

    மு. குறுந். 233; அகநா. 94, 274, 284.

(235)