நரிவெரூஉத் தலையார் (பி-ம். நரிவெருத்தலையார்.) (பி-ம்.) 1. 'விட்டுடன்'; 2. 'நொந்தனை'; 6. 'னலக்கே'.
(ப-ரை.) குன்றத்து அன்ன - குன்றைப் போன்ற,குவவு மணல் அடை கரை - குவிதலை உடைய மணல்அடைந்த கரையினிடத்து, நின்ற புன்னை நிலம் தோய் படுசினை - வளர்ந்து நின்ற புன்னை மரத்தினது நிலத்தைத்தோய்த்த தாழ்ந்த கிளையில், வம்ப நாரை சேக்கும் - புதியநாரை தங்கும், தண் கடல் சேர்ப்ப - தண்ணிய கடற்கரையைஉடைய தலைவ, விட்டென விடுக்கும் நாள் வருக -இவளை நீ கைவிட்டாய் என விடுக்கும் காலம் வருவதாக!அது நீ நேர்ந்தனையாயின் - அதற்கு நீ உடம்படுவாயாயின்,நீ உண்ட என் நலன் - நீ நுகர்ந்த என் பெண்மை நலத்தை,தந்தனை சென்மோ - தந்து செல்வாயாக.
(முடிபு) சேர்ப்ப, நாள் வருக; நேர்ந்தனையாயின் நலன் தந்துசென்மோ.
(கருத்து) இவளைப் பிரிந்து செல்லல் தகாது.
(வி-ரை.) விட்டென - முற்றும் கைவிட்டா யென்னும்படி. சென்மோ:மோ முன்னிலையசை. புதிய நாரையாதலின் மீனுணவு கொள்ளும்இடமறியாது மணற் குன்றிலுள்ள புன்னைச் சினையில் இருந்தது; நீஇவளியல்பறியாது பிரிய எண்ணினாயென்ற குறிப்பை உடையது.
படுசினை - தாழ்ந்த கிளை. என் நலனென்றாள் தனக்கும் தலைவிக்கும் உள்ள ஒற்றுமை பற்றி (தொல். பொருள்.27.)
தலைவனிடம் நலந்தாவெனத் தோழி கூறும் மரபு.
| “மாணலந் தாவென வகுத்தற் கண்ணும்” (தொல்.கற்பு.9.) |
என்பதனால் பெறப்படும்.
இதனால் தோழி, பிரிந்தால் தலைவி உயிர் வாழாள்ஆ என்பதைக்குறிப்பால் புலப்படுத்தினாள்.
மேற்கோளாட்சி மு. நீ கொண்ட நலத்தினைத் தந்து போவெனக் கூறுதற்கண் தோழிக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு.9, இளம்.)
ஒப்புமைப் பகுதி 3. குன்றத் தன்ன மணல்: (குறுந். 311:5); “குன்றத்தன்னகுவவுமண னீந்தி”, “குன்றிற் றோன்றுங் குவவுமண லேறி” (நற்.207:5,235:6); “குன்றிற் றோன்றுங் குவவுமணற் சேர்ப்ப” (அகநா. 310:10.)
3-4. மணற் குன்றிற் புன்னை: குறுந். 311:5.
5. வம்பநாரை: அகநா. 100:14, 190:8; தொல். உரி.30, இளம். சே.
4-5.புன்னையில் நாரை இருத்தல்: குறுந். 296:1-2; அகநா. 100:13-4, 190:7-8.
6.சேர்ப்பன் உண்ட நலன்: குறுந். 133:5, ஒப்பு.
2-6. என் நலத்தைத் தாவென்றல்: குறுந். 238:3-4, 349:3-4; நற். 395:9-10; ஐங். 159;5; கலி. 128:10-11; அகநா. 376:18, 396:19;ஐந். எழு. 64, 66; தொல். கற்பு.8.
(236)