பரணர். (பி-ம்) 4. ‘தெழுகளிறு’ 5. ‘குழையகக் கோட்டியோர்’, ‘கோடியோர்’ 6. ‘காதலர்க்கல்லென் றவ்வே’, ‘காதலர்க்கவ் வென்றவ்வே’, ‘நாம் வெங்காதலர்க்கவ்வென் றவ்வேய.
(ப-ரை.) கரு கால் வேம்பின் ஒள் பூ யாணர் -கரிய தாளை உடைய வேப்ப மரத்தின் ஒள்ளிய பூவின் புதுவருவாயானது, என்னை இன்றியும் - என்னுடைய தலைவன் இல்லாமலும், கழிவது கொல் - செல்வதுவோ? கொடியோர் நா- அயலாராகிய கொடிய மகளிருடைய நாக்கள், காதலர் அகல - என் காதலர் என்னை நீங்கிச் செல்ல, ஆற்று அயல் எழுந்த - ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த, வெள் கோடு அதவத்து - வெள்ளிய கொம்புகளை உடைய அத்தி மரத்தினது, எழு குளிறு மிதித்த - உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட, ஒரு பழம் போல - ஒற்றைப் பழமானது குழைவது போல, குழைய - நான் வருந்தும்படி, கல்லென்ற - அலர்கூறிக் கல்லென்று முழங்கின.
(முடிபு) ஒண்பூ யாணர் கழிவது கொல்லோ? காதலர் அகலுதலால் குழையக் கொடியோர்களின் யா கல்லென்றன.
(கருத்து) தலைவர் வாராமையின் ஊரினர் பழி கூறுதல் அடங்கவில்லை.
(வி-ரை.) வேம்பு இளவேனிலில் மலர்வது (ஐங். 350) தலைவனைத் தலைவி என்னையென்று கூறுதற்குரிய விதி, “அன்னை யென்னை யென்றலு முளவே, தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினும், தோன்றா மரபின வென்மனார் புலவர்” (தொல். பொருளியல், 52) என்பது; இந்நூலுள் பல இடங்களில் தலைவனைத் தலைவி என்னை என்றலுங் காண்க. கொல்: இரக்கக் குறிப்பு: இளவேனிலில் உடனிருக்க வேண்டிய தலைவன் சென்றான் என்று இரங்கியவாறு. அதவத்து: அதவென்னும் அகரவீற்றுப் பெயர் அத்துச் சாரியைப் பெற்று அச்சாரியையின் அகரம் கெடாமல் வந்ததுதொல்.புணர்.31) அத்திப் பழம் மென்மை உடைய தாதலின் நண்டுகள் மிதித்தலால் குழைவதாயிற்று; இங்ஙனம் குழைகின்ற பொருளுக்கு அத்திப் பழத்தை உவமை கூறுதல், “ அதம்பழத் துருவுசெய்தா ரவளிவ ணல்லூராரே” (தே.திருநா.) என்பதனாலும் விளங்கும். ஒன்றுக்கு ஏழு கூறுவது மரபு. இங்கே ஏழென்பது பலவென்பதைக் குறிக்க நின்றதொரு வாய்பாடு; ‘ஏழென்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது, ஒருவர் கூறை யெழுவ ருடுத்தென்றாற் போல’ (குறள். 1269 பரிமேல்); இவ்வாய்பாடுகளை அநந்தவாசி என்று கூறுவர் தக்கயாகப் பரணி உரையாசிரியர். கொடியோரென்பது உயர்திணை இருபாற் பொதுப் பெயரேனும் தொழிலால் ஆணொழித்து நின்றது; “ஊரவர் கௌவை யெருவாக” (குறள். 1147) என்பதன் உரையில் ‘ஊரவரென்பது தொழிலான் ஆணொழித்து நின்றது’ என்று எழுதியமை இங்கே அறியற்பாலது. கல்லென்றல்: தலைவன் பிரிவினால் தலைவி வேறுபட்டிருத்தலை எடுத்துக் கூறிப் பழித்தல்; இஃது ஒலிக் குறிப்பு. கல்லென்றவ்வே: விரிக்கும் வழி விரித்தல்.
ஓகாரமும் ஏகாரங்களும் அசை நிலைகள்.
(ஒப்புமைப் பகுதி)1. கருங்கால் வேம்பு: பொருந.143-4; புறநா.45:2, 338:5- 6.என்னை: குறுந்.27:3, 203:5, 223:7.
4. ஒன்றுக்கு ஏழு: "ஏழூர்ப்பொதுவினைக் கோரூர் யாத்த, உலைவாங்கு மிதிதோல்” (குறுந். 172:5-6): “ஒருநா ணம்மில் வந்ததற் கெழுநாள், அழுப வென்ப” (ஐங்.32:2-3): “ஒருநா ளெழுநாள்போற் செல்லும்” (குறள். 1269): “ஓவா தெழுமடங் குட்குவரத் தோன்றி” (பெருங்.1.43: 122); “பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி”(சீவக.116) 3-4 அதவத்துப் பழம்: “அதவத் தீங்கனி யன்ன செம்முகத், துய்த்தலை மந்தி” (நற்.95:3-4) நண்டுகள் பழத்தை விரும்பல்: “அகலிலை நாவ லுண்டுறை யுதிர்த்த, கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன், தாழை வேரளை வீழ்துணைக் கிடூஉம், அலவன்” (அகநா.380:4-7): “அலவன் றன் சீர்ப்பெடையின், வாய்வண் டனைய தொர் நாவற் கனிநனி நல்க” (திருச்சிற்.84).
6. கல்லென்றல்: குறுந்.179:1, 262:1; மலைபடு.549; நற்.111:9,163:3-4; புறநா.184:8.
(24)