(இரவுக் குறி வந்த தலைவன் சிறைப்புறத்தில் இருப்ப, தலைவி தோழியை நோக்கிக் கூறுவாளாய், "நேற்று இரவில் ஒரு தேர் ஈண்டுப் போந்து சென்றது என்று சிலர் சொல்ல, அது முதல் தாய் என்னை வருத்துகின்றாள்" எனக் காவன் மிகுதியை உணர்த்தி வரைவு கடாவச் செய்தது.)
 246.   
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை 
    
களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப் 
    
பனிக்கழி துழவும் பானாட் டனித்தோர் 
    
தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண் 
5
டோரு மலைக்கு மன்னை பிறரும் 
    
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர் 
    
இளையரு மடவரு முளரே 
    
அலையாத் தாயரொடு நற்பா லோரே. 

என்பது சிறைப்புறம்.

கபிலர்.

    (பி-ம்.) 1. ‘றிரையது’; 2. ‘மயக்கிய’; 3. ‘கழித்துழவும்’, ‘பானாணீத்தோர்’;4. ‘பெயருமென்ப’; 5. ‘மன்ன’; 8. ‘கற்பாலோரே’.

    (ப-ரை.) தோழி -, பெரு கடல் கரையது - பெரிய கடற்கரையின்கண் உள்ளதாகிய, சிறு வெள் காக்கை - சிறிய வெண்மையை உடைய காக்கை, களிறு செவி அன்ன - களிற்றினது காதைப் போன்ற, பசு அடை மயக்கி - பசிய இலையைக் கலக்கி, பனி கழி - குளிர்ச்சியை உடைய கழி நீரை, துழவும் - இரையின் பொருட்டுத் துழாவுகின்ற, பால் நாள் - பாதி இரவில், தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்ததுஎன்ப - தனியாக ஒருதேர் இங்கே வந்து மீண்டு சென்றதென்று அயலார் கூறுவர்; அதற்கொண்டு - அது தொடங்கி, அன்னை - தாய், அலைக்கும் - என்னைத் துன்புறுத்துகின்றாள்; பின்னு விடு கதுப்பின்- பின்னல் நாலவிடப்பட்ட கூந்தலை உடைய, மின் இழை மகளிர் - மின்னுகின்ற ஆபரணத்தை அணிந்த மகளிருள், இளையரும் மடவரும் - இளமை உடையோரும்; மடப்ப முடையோருமாகிய, பிறரும்-, உளர் -இருக்கின்றனர், அவர், அலையா தாயரொடு - தம்மை வருத்துதல் இல்லாத தாய்மாரோடு, நல்பாலோர் - நல் வினையுடையர்.

    (முடிபு) தேர் வந்து பெயர்ந்ததென்ப; அன்னை அலைக்கும்; மகளிர் இளையரும் மடவரும் பிறரும் உளர்; அவர் நற்பாலோர்.

    (கருத்து) இப்பொழுது காப்பு மிக்கதாதலின், தலைவன் என்னை வரைந்து கொள்வதே நலம்.

    (வி-ரை.) சிறு வெண்மை என்றது கழுத்தில் உள்ள நிறத்தை. பாசடை - நெய்தலின் இலை முதலியன. அதற்கொண்டு - அது தொடங்கி (குறிஞ்சிப். 237, ந.); அதனைக் காரணமாகக் கொண்டு எனலுமாம்.

    ஓரும்: அசை நிலை; இங்ஙனம் வந்த தேர் யாவரதென ஆராய்வாளெனலும் ஒன்று. அலைத்தலாவது புறம்போகல் என்று காத்தல்.

    பிறரும் இளையரும் மடவரும் உளரென்றமையின் தலைவி இளையள் என்பதும் மடவள் என்பதும் பெறப்பட்டன; உளரே: ஏகாரம் அசை நிலை. நற்பாலோரே: ஏகாரம் தேற்றம். யான் அந்நற்பால் பெற்றிலேனென்பது எச்சம்.

    இதனால் இரவுக் குறியினால் உண்டாகும் அச்சம் உணர்த்தி வரைதலே நலனென்னுங் கருத்து உண்டாகச் செய்தாள். தலைவன் வரைதல் இதன் பயன்.

    மேற்கோளாட்சி மு. பிறர் கூற்றால் தமர் தலைவியைக் காத்தற்கண் தலைவி கூறியது ( தொல். களவு. 20, ந)

    ஒப்புமைப் பகுதி 1. சிறு வெண் காக்கை: குறுந். 334:1; நற். 31:2, 345:4 மு. ஐங்.161-70:1. (பி-ம்.) பெருங்கடற்றிரையது சிறுவெண் காக்கை: குறுந். 313:1, பி-ம்.

    2. பாசடைக்குக் களிற்றுச் செவி: "நெய்தற் பாசடை புரையுமஞ் செவி", "பிடிச் செவியி னன்ன பாசடை", "களிற்றுச் செவியன்ன பாசடை தயங்க" (நற். 47:3, 230:1, 310:2); "களிற்றுச் செவி யன்ன பாசடை மருங்கின்", "நீர்மிசை நிவந்த நெடுந்தா ளகலிலை ... பெருங் களிற்றுச் செவியி னலைக்கும்" (அகநா. 176:4, 186:4-6.)

    1-2. காக்கை பாசடையை மயக்கல்: "பெருங்கடற் கரையது சிறு வெண் காக்கை, இருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்" (ஐங்.170: 1-2.)

    1-3. காக்கை கழியைத் துழவல்: "சேயிறா வெறிந்த சிறு வெண்காக்கை, பாயிரும் பனிக்கழி துழைஇ" (நற். 31:2-3.)

    4. அதற் கொண்டு: கலி: 139:7; அகநா. 32:9, 250:9.

    5. அன்னை அலைத்தல்: (குறுந். 262:2); "எவ்வாய்ச் சென்றனையவணெனக் கூறி, அன்னை யானாள் கழற", "சிறுகோல் வலந்தன ளன்னை யலைப்ப" (நற். 147:4-5, 149:4); "என், அமர்க்க ணஞ்ஞையை யலைத்த கையே" (அகநா. 145:21-2); "அன்னை, அலையுமலை" (ஐந். எழு. 3); "அன்னையுங் கோல்கொண் டலைக்கும்" (முத்.66.)

    3-5. தலைவன் தேர் வந்ததெனக் கேட்டு அன்னை அலைத்தல்: "பொங்குகழி நெய்த லுறைப்ப வித்துறைப், பல்கால் வரூஉந் தேரெனச், செல்லா தீமோ வென்றனள் யாயே" (ஐங். 186:3-5); கைந்நிலை, 24. "கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை, கடிகொண் டனளே தோழி ... நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே" (அகநா. 20:12-6.)

    6. பின்னுவிடு கதுப்பு: (குறுந். 353:6); "பின்னகம்" (அகநா. 9:22.)

    7. இளையர்: குறுந். 258:6, 275:6; தொல். கற்பு. 29.

(246)