சேந்தம் பூதன் (பி-ம்.) 1. ‘தீங்கனிப்’, ‘கணிப்புகூஉம்’; 3. ‘புனையுமாரில்லென’;5. ‘யாஅமென்சினை’.
(ப-ரை.) தோழி-, வேங்கை - வேங்கை மரத்தினது, வீயா மென் சினை வீ உக - கெடாத மெல்லிய கிளையில் இருந்து மலர்கள் உதிர, அங்ஙனம் உதிரும் இடத்திலே, யானை ஆர் துயில் இயம்பும் நாடன் - யானையானது பெறுதற்கரிய துயில் செய்வதனால் உயிர்ப்பின் ஒலி உண்டாகும் நாட்டை உடைய தலைவனது, மார்பு உரித்தாகிய மறு இல் நட்பு - மார்பை உரியதாகப் பெற்ற குற்றமற்ற நட்பானது, எழில் மிக உடையது - மிக அழகுடையது; ஈங்கு அணிப்படூஉம் - இவ்விடத்தில் அணிமைக் காலத்தே உண்டாகும்; திறவோர் செய்வினை - திறமை உள்ளோர் செய்யும் காரியம், அறவது ஆகும் -அறத்தொடு பொருந்தியதாகும்; கிளை உடை மாந்தர்க்கு - சுற்றத்தை உடைய மக்களுக்கு, இவ் புணையும் என - இவை பற்றுக்கோடும் ஆகும் என்று, ஆங்கு அறிந்திசின் - அங்ஙனம் அறிந்தேன்.
(முடிபு) தோழி, நாடன் நட்பு எழில் உடையது; அணிப்படூஉம்;வினை அறவதாகும்; இவ் புணையும் ஆம்; ஆங்கு அறிந்திசின்.
(கருத்து) தலைவன் நின்னை விரைவில் வரைந்து கொள்வான்.
(வி-ரை.) இங்ஙனம் கூறின், "அவன் தான் கூறிய உறுதி மொழிபொய்த்தனன்" என்று தலைவி கூறுவாளாதலின், தெளிவு விலங்கினமையைத் தோழி அறிவாள்.
இரண்டாவது கருத்து: காப்பு மிகுதி முதலியவற்றைத் தலைவன்பால் எடுத்துரைப்ப அவன் ‘வரைந்து கொள்வேன்’ என்று உறுதி கூறியதை அறிந்த தோழி அச்செய்தியைத் தலைவியிடம் கூறினாள்.
"அவன் வரைவானோ, வரையானோ" எனக் கவன்ற தலைவியிடம் முதலில் எழில் மிக உடையதென்றாள், அவள் மனம் உறுதி பெறற்கு. அணிப்படும் - விரைவில் நடைபெறும். அவன் அங்ஙனம் செய்யப் புகுந்தது அறத்தின்பாற் பட்டதென்பாள் அறவதென்றாள். திறவோரென்றமையால் தலைவனைப் பாராட்டினாள். கிளையுடை மாந்தர் என்றது தம்மையே. "சுற்றத்தாரிடையே காவற்பட்டுக் கிடக்கும் நமக்கும் அச்சுற்றத்தாருக்கும் உவப்பாக இருக்கும் வரைவிற்குரிய செயல்கள் இதுகாறும் பற்றின்றிக் கலங்கிய மனத்தினேமாகிய நமக்குப் பற்றுக் கோடாயின" என்றாள்.
இவ் - இவை; அண்மையில் நிகழும் செயல்களாதலின் இங்ஙனம் சுட்டினாள். மார்: அசை நிலை. அறிந்திசின்: இசின் தன்மைக்கண் வந்த அசை. யானையாற் சிதைக்கப்படாமல் இருத்தலின், "வீயா மென்சினை" என்று சிறப்பித்தாள். துயில்: ஆகுபெயர். இயம்புதல் - நெடுந்தூரம் ஒலித்தல் (அகநா. 8: 12, உரை.)
வேங்கை மலர் தன் மேல் உதிரப் புறத்தே செவிப்படும் ஒலியோடு யானை தூங்கும் நாடன் என்றது, தலைவன் இருவகைச் சுற்றத்தாரும் பாராட்ட அவரிடையே தலைவியை மணந்து கொண்டு வெளிப்படையாகத் தலைவியின் இன்பம் நுகர்வான் என்ற குறிப்பினது.
| "புலிப்பகை வென்ற புண்கூர் யானை |
| கல்லகச் சிலம்பிற் கையெடுத் துயிர்ப்பின் |
| நல்லிணர் வேங்கை நறுவீ கொல்லன் |
| குருகூது மிதியுலைப் பிதிர்விற் பொங்கிச் |
| சிறுவன் மின்மினி போலப் பலவுடன் |
| மணிநிற விரும்புதற் றாவுநாட" (அகநா. 202:3-8) |
என்னும் பகுதியைப் பார்க்கையில் இச் செய்யுளின் 4-6-ஆம் அடிகள்,
| " .......... ............ ............ வேங்கை |
| வீயா மென்சினை வீயுக யானை |
| ஆருயி ரியம்பு நாடன்" |
என்று இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
ஒப்புமைப் பகுதி 2. திறவோர் - நீதிநூல் உடையோர்; "திறவதிற் றீர்ந்த பொருள்" (திரிகடு. 73.)3. இவ்வென; தொல். கிளவி. 4.
6-7. நாடன்மார்பு தலைவிக்கு உரியது: குறுந். 68:4. ஒப்பு: நற். 327:7-9.
நாடன் நட்பு: குறுந். 3:4, 134:7, 304:8, 313:4, 326:3 401:6.
(247)