(பிரிவிடை வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் நின் நிலையைஉணர்ந்திலர்; உணரின் தம்வினை முற்றுதலையும் ஓராது உடனே மீள்வர்" என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)
 253.   
கேளா ராகுவர் தோழி கேட்பின் 
    
விழுமிது கழிவ தாயினு நெகிழ்நூற் 
    
பூச்சே ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின்  
    
நாட்டுயர் கெடப்பி னீடலர் மாதோ 
5
ஒலிகழை நிவந்த வோங்குமலைச் சாரற்  
    
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை 
    
ஆறுசென் மாக்கள் சேக்கும் 
    
கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே. 

என்பது பிரிவிடைத் தோழி வற்புறுத்தது (பி-ம். வரவுறுத்தது.)

பூங்கண்ணன்.

    (பி-ம்.) 3. ‘பூச்சோரணையிற்; 4. ‘கேட்பின்’, ‘கொட்பின்’.

    (ப-ரை.)தோழி--, ஒலி கழை நிவந்த - ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த, ஓங்கு மலை சாரல் - உயர்ந்த மலைப் பக்கத்தில், புலி புகா உறுத்த புலவு நாறுகல் அளை - புலி தனக்குரிய உணவைச் செலுத்தி வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகை யினிடத்து, ஆறுசெல் மாக்கள் சேக்கும் - வழிச் செல்லும் மனிதர் தங்கும், கோடு உயர் பிறங்கல் மலை - சிகரங்கள்உயர்ந்த விளக்கத்தை உடைய மலைகளை, இறந்தோர் - கடந்து சென்ற தலைவர், கேளார் ஆகுவர் - நின் துயரைக் கேளார் ஆவர்; கேட்பின் - கேட்டாராயின், விழுமிது கழிவதாயினும் - சிறந்த பொருள் நீங்குவதாக இருப்பினும், நெகிழ்நூல் பூ சேர் அணையில் -நெகிழ்ந்த நூலால் கட்டிய மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையினிடத்தே இருந்து வருந்தி, பெருகவின் தொலைந்த நின் - பெரிய அழகு நீங்கிய நினது,நாள் துயர் - இக் காலத்துள்ள துயரமானது, கெட - கெடும் படி, பின் நீடலர் - பின்பும் தாமதியாமல் வருவார்.

    (முடிபு) தோழி, மலையிறந்தோர் கேளாராகுவர்; கேட்பின் நீடலர்.

    (கருத்து) அவர் நின் நிலையை அறிந்திலர்; அறியின் உடனே மீள்வர்.

    (வி-ரை.) கேட்பின் நீடலர் என்ற குறிப்பு நான் தூது விட்டு நின்துயர் நிலையை அறிவித்து மீளச் செய்வேன் என்னும் கருத்தைப்புலப்படுத்துகின்றது. இது கற்புக் காலத்தது.

    விழுமிது - அறம், பொருள் முதலியன (அகநா. 13:12, உரை); மிக உயர்ந்த பொருள் எனலுமாம். கேட்பின் விழுமிது கழிவதாயினும் நீடலர். நீடலராதலின் துயர் கெடும். கெட என்ற எச்சம் நீடலர் என்றதன் கண்ணுள்ள அலர் என்ற வினைக் குறிப்பைக் கொண்டு முடிந்தது. நாட்டுயர் - நாள்தோறும் படும் துயர் எனலும் பொருந்தும்.

    முறுக்கேறிய நூலாயின் மெல்லிய மலர்களைத் தொடுத்தற்கு இயலாமையின் நெகிழ்நூலைக் கூறினாள். மாலைகளை நூலால் கட்டும்வழக்கமும் உண்டு. அணையினாற் குறையில்லை என்பாள் அதனைச் சிறப்பித்தாள்.

    தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி பாயலில் இருந்து துயருறும் செய்தி நெடுநல்வாடையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    ஒலி கழை - தன்பாலுள்ள துளை வழியே காற்றுப் போகையில் ஒலிக்கும் மூங்கில் எனலும் ஆம்;

  
"ஆடமைக் குயின்ற வவிர்துளை மருங்கிற்  
   
 கோடை யவ்வளி குழலிசை யாக"          (அகநா. 82:1-2);  

    தழைத்த மூங்கில் என்பதும் ஒன்று. புகா - உணவு; "புகாஅக்காலை" ( தொல். களவு. 16) என்பதன் உரையைப் பார்க்க. பிறங்கல் - பிறங்குகல் என்பதன் விகாரமுமாம்.

    ஒப்புமைப் பகுதி 2-3. நூலாற் பூவைத் தொடுத்தல்: "பன்னூன் மாலை" (குறுந். 173:2); "விரிநுண்ணூல் சுற்றிய வீரித ழலரி" (கலி. 64:3); "புரிநூன் மீக்கோள் பூம்புறத் தேற்றதன், தெரிநூல் வாங்கி யிருநூற் கொளீஇப், பவழமும் வெள்ளியும் பசும்பொன் னடரும். திகழ்கதிர் முத்தமுந் திருமணிக் காசும், உறழ்படக் கோத்த வொளியின போல,வண்ணம் வாடாது வாசங்கலந்த, தண்ணறும் பன்மலர் தானத் திரீஇ,வாட்டொழிற் றடக்கையின் வத்தவர் பெருமகன், சூட்டுநலம் புனைந்து சுடர்நுதற் கீய" (பெருங். 2.15: 126-34.)

    6. புகா: குறுந். 232:3, 258:5; ஐந். எழு. 31.

    புலியின் புலால் நாற்றம் வீசும் உணவு: "புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை" (அகநா. 3:9, 97:3.)

     கல்லளையும் புலியும்: "பைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய" (அகநா. 362:4); "புலிசேர்ந்து போகிய கல்லளை போல" (புறநா. 86:4.)

    8. பிறங்கன் மலை: குறுந். 144:7, 285:8.

(253)