பாரகாபரன் (பி-ம். பார்காப்பன், பாரகரபரன், பாரகாபான்.) (பி-ம்.) 3. ‘வாரார்’; 4. ‘றுயில்வர மறந்தனர்’; 5. ‘பயிலிருங்’; 6. ‘டரநசைஇச்’.
(ப-ரை.) தோழி-, இலை இல் அம் சினை இனம் வண்டு ஆர்ப்ப - இலை இல்லாத அழகிய கிளையினிடத்துத் திரளாகிய வண்டுகள் ஆரவாரிக்கும்படி, முலை ஏர் மெல் முகை அவிழ்ந்த - நகிலை ஒத்த மெல்லிய அரும்புகள் விரிந்த, கோங்கின் தலை அலர் வந்தன - கோங்க மரத்தினது முதற்பூக்கும் மலர்கள் தோன்றின; செய்பொருள் தரல் நசைஇ சென்றோர் - ஈட்டுதற்குரிய பொருளைக் கொண்டு வருதலை விரும்பிச் சென்ற தலைவர், எய்தினர் என வரூஉம் தூது - மீண்டு வந்தனரென்று அறிவித்தற்கு வரும் தூதுகள், வாரா - வந்தில; அவர் - நம்மைப் பிரிந்து சென்ற அவர், துயில் இன் கங்குல் துயில் மறந்தனர் - துயிலுதலினிய இராக் காலத்தில் உடன் துயிலுதலை மறந்தனர்; பயில் நறு கதுப்பின் பாயலும் உள்ளார் - தாம் பழகுகின்ற நறிய என் கூந்தலாகிய அணையையும் நினையாராயினர்.
(முடிபு) தோழி, அலர் வந்தன; தூது வாரா; அவர் மறந்தனர்; உள்ளார்.
(கருத்து) தலைவர் என்னை மறந்தனர் போலும்.
(வி-ரை.) கோங்கின் முகையவிழ்ந்தமை கூறுதலின் பருவம் இளவேனில் ஆயிற்று (ஐங். 343.)
இலவ மரத்தின் இனமாகிய கோங்கும் அவ்விலவத்தைப் போன்றேமலரும் காலத்தில் இலையின்றித் தோன்றும். தலையலர் - முதலில் பூக்கும் மலர்கள்; "தலைநாட் செருந்தி" (சிறுபாண். 147) என்பது போன்றது.
துயிலினிமை கங்குலுக்கு அடை. பயில் நறுங்கதுப்பிற் பாயலென்றது,பாயலுக்குரிய மென்மையும் மணமும் உடையதென்றபடி. துயிலையும் பாயலையும் நினைத்தனரேல் வந்திருப்பர் என்பது தலைவியின் உள்ளக்கிடக்கை. பாயலும்: உம்மை, உயர்வு சிறப்பு. ஆல், ஏ: அசை நிலைகள்.
ஒப்புமைப் பகுதி 1. இலையி லஞ்சினை: "இலையில மலர்ந்த வோங்குநிலையிலவம்" (ஐங். 338:2); "இலையில மலர்ந்த முகையி லிலவம்" (அகநா. 11:3.)
3. கோங்கரும்புக்கு நகில்: முருகு. 34-5; சிறுபாண். 25-6; கலி. 56:23-4; அகநா. 240:11; புறநா. 336:9-10; நாலடி. 400; சிறுபஞ்ச. 44; பெருங். 2. 12:100-105; திருச்சிற். 1. 1-3. ஐங். 341-50.
5. கதுப்பிற் பாயல்: "நறுமென் கூந்தன் மெல்லணை யேமே" (குறுந். 270:8); "கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத்துஞ்சி", "ஒள்ளிழை, வாருறு கூந்தற் றுயில்பெறும்" (கலி. 71:19, 104:20); "மகளிர், விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து" (பதிற். 50:18-9); தண்ணறுங் கமழ்தொடை வேய்ந்தநின், மண்ணார் கூந்தன் மரீஇயதுயிலே", "தோடார் கூந்தன் மரீஇ யோரே", "இருளைங் கூந்த லின்று யின் மறந்தே", "கூந்தன் மெல்லணைத் துஞ்சி" (அகநா. 223:15-6, 231:15, 233:15, 308:13.)
6. செய்பொருள்: குறுந். 190:2; கலி. 7:21, 12:10, 16:18, 29:24.
7. பிரிந்த தலைவன் தூது விடுத்தல்: குறுந். 266:4; அகநா. 333:22.
(254)