உறையூர்ச் சிறுகந்தன். (ப-ரை.) தோழி-, நம் காமத்துப் பகை - நம்மிடத்து உள்ள காமமாகிய பகை, வேரும் முதலும் கோடும் - வேரிலும் அடிமரத்திலும் கிளையிலும், ஒராங்கு - ஒரு படியாக, தொடுத்த போல - தொடுத்து வைத்தன போல, தூங்குபு தொடரி - தொங்கித் தொடர்ந்து, கீழ் தாழ்வன்ன - கீழே தாழ்ந்தாற் போன்ற, வீழ்கோள் பலவின் - தணிந்த குலைகளை உடைய பலா மரத்தினை உடைய, ஆர்கலி வெற்பன் - ஆரவாரத்தை உடைய மலைக்குத் தலைவன், வருதொறும் - இங்கே வருந்தோறும், வரூஉம் - வெளிப்படும்; அகலினும் - அவன் அகன்றாலும், அகலாதாகி - போகாததாகி, இகலும் - மாறுபடும்; இஃது என்ன வியப்பு!
(முடிபு) தோழி, காமத்துப் பகை, வெற்பன் வருதொறும் வரூஉம்;அகலினும் இகலும்.
(கருத்து) தலைவனைப் பிரிதலின்றி ஒன்றியிருத்தலே எனக்கு இன்பம் பயப்பது.
(வி-ரை.) தொடுத்தபோல - ஓரிடமும் எஞ்சாது தொடர்ந்து காய்களைத் தொடுத்தாற்போல. கீழ்தாழ்வன்ன - கீழே விழுந்து விடுதலைப் போன்ற வெனலுமாம்; பருமையைச் சுட்டியபடி, வீழ் கோள் - விரும்பும் குலை எனலும் பொருந்தும். கோள் - காய்க்குலை. மலையில் உள்ள பலவகை ஆரவாரங்களை ‘மலைபடுகடாம்’ என்னும் பாட்டால் உணரலாம்.
காமம் இன்பத்தைத் தருவதாயினும் தலைவனைப் பிரிந்த ஞான்று தன்னுடனுறைந்தே துன்பத்தைத் தருதலின் அதனைப் பகையாகக் கூறினாள்;
| "கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு |
| செய்தன மன்றவோர் பகைதரு நட்பே" |
| "பகையா கின்றவர் நகைவிளை யாட்டே" (குறுந். 304:7-8, 394:7) |
என வருவனவற்றையும் காண்க.
தலைவனைக் காணுந்தோறும் காமம் வெளிப்படும் என்றாள்.
இக் கருத்து முன்பும் (136-ஆம் செய்யுளில்) வந்துள்ளது.
தலைவன் வருங்காலத்தில் காமம் இன்பம் பயத்தலும் அவன் பிரிந்த காலத்தில் துன்பம் பயத்தலுமாகிய இக் கருத்து,
| "நீரின் றண்மையுந் தீயின் வெம்மையும் |
| சாரச் சார்ந்து தீரத் தீரும்் |
| சாரனாடன் கேண்மை் |
| சாரச் சாரச் சார்ந்து் |
| தீரத் தீரத் தீர்பொல் லாதே"் |
என்ற பழம்பாட்டிலும் காணப்படுகின்றது.
| "தொடிற்சுடி னல்லது காமநோய் போல |
| விடிற்சுட லாற்றுமோ தீ" (1159) |
என்பது குறள்.
காமத்துப் பகை: அத்து, வேண்டாவழிச் சாரியை.
ஒப்புமைப் பகுதி 1. ஒராங்கு; குறுந். 38:5, 316:5.
1-3. வேரிற் காய்க்குலையை யுடைய பலவு: (குறுந். 18:1, ஒப்பு); "செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி", "பலவின், வேர்க் கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம்" (நற். 201:5, 213:2-3.)
கோடு தொறும் காய்க்குலையை யுடைய பலவு: குறுந். 83:3-5,ஒப்பு.
5-6. காமத்தின் தன்மை: "நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னும், தீ" (குறள், 1104.)
(257)