கல்லாடனார். (பி-ம்.) 2. ‘வாய்ஞெகிழ்ந்’; 6. ‘வழையமரடுக்கத்துச்’, ‘வழைமலரடுக்கத்துச்’; 7. ‘கன்றி லேரா’.
(ப-ரை.) தோழி-, குருகும் இருவிசும்பு இவரும் - நாரைகளும் கரிய வானத்தின்கண் உயரப் பறக்கும்; புதலும் - புதலிலுள்ள போதுகளும், வரி வண்டு ஊத - கோடுகளை உடைய வண்டுகள் ஊதுவதனால், வாய் நெகிழ்ந்தன - மலர்ந்தன; சுரி வளை பொலிந்த தோளும் - சுழித்த சங்காற் செய்த வளையினால் விளங்கிய தோள்களும், செற்றும் - நெகிழ்ச்சி நீங்கி வளையோடு செறியும்; ஆதலின், பொருவார் - பகைவரது, மண் எடுத்து உண்ணும் - பூமியைக் கொண்டு நுகரும், அண்ணல் யானை - தலைமை பொருந்திய யானையையும், வள்தேர் - வளவிய தேரையுமுடைய, தொண்டையர் - தொண்டை மான்களுக்குரிய, வழை அமல் அடுக்கத்து - சுர புன்னைகள் நெருங்கிய மலைப் பக்கத்தில், கன்று இல்ஓர் ஆ - கன்றில்லாத ஒற்றைப் பசுவை, விலங்கிய - நிழலினால் தம்பால் வரச் செய்து தடுத்த, புல்தாள் ஓமைய சுரன் - புல்லிய அடியை உடைய ஓமை மரங்களை உடைய பாலை நிலங்களை, இறந்தோர் - கடந்து சென்ற தலைவர், வருவர்-.
(முடிபு) தோழி, குருகும் இவரும்; புதலும் நெகிழ்ந்தன; தோளுஞ்செற்றும்; சுரன் இறந்தோர் வருவர்.
(கருத்து) நன்னிமித்தங்கள் உண்டாதலின் தலைவர் வருவர்.
(வி-ரை.) இதில் கூறப்படும் நிமித்தங்கள் கூதிர்க் காலம் என்பதைப் புலப்படுத்தின (நெடுநல். 15-7.) புதல்: ஆகுபெயர். வண்டூத மலர்கள் மலர்வது இயல்பு. வளை - சங்கினால் செய்த தோள் வளை. வளை இறுகுதல் நன்னிமித்தம்;
| "மயிர்வார் முன்கை வளையுஞ் செறூஉம் |
| ....... ............ ............. ................. |
| பெருங்க னாடன் வருங்கொ லன்னாய்" (ஐங். 218:2-5.) |
கொல், வாழி: அசை நிலைகள். பொருவார் மண்ணெடுத்துண்ணும்தொண்டையர் என இயைக்க. பொருவார் மண் எடுத்து உண்ணுதலாவது, பகை அரசர்களுடைய நாடுகளை வென்று அடிப்படுத்து அவற்றால் வரும் பயன்களை நுகர்தல்; இப்பொருள் பற்றியே வட மொழியிலும் அரசனை, ‘பூபுக்’ என்று கூறுவர்;
| "பிறர்மண் ணுண்ணுஞ் செம்ம னின்னாட்டு |
| வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது |
| பகைவ ருண்ணா வருமண் ணினையே" (புறநா. 20:13-5.) |
தொண்டையரடுக்கம் என்றது வேங்கட மலையை;
| "வென்வேற் றிரையன் வேங்கட நெடுவரை", |
| "வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் |
| இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட் |
| டோங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்" (அகநா. 85:9, 213:1-3.) |
விலங்கிய - தடுத்த (குறுந். 59:5.) புன்தாள் - சிவந்த தாளெனலும்பொருந்தும்; "ஓமைச் செவ்வரை" (நற். 279:7.)
மேற்கோளாட்சி 8. குறிப்பு வினைமுற்று, பெயரெச்சக் குறிப்பாயிற்று (நன். 350, மயிலை, 351, சங்கர; இ.வி. 250 .)
1. குருகு விசும்பிற் பறத்தல்: "வேழ வெண்பூ, விசும்பாடுகுருகிற் றோன்று மூரன்" (ஐங். 17:1-2.)
1-2. வண்டு ஊதப் புதல் மலர்தல்: குறுந். 265:1-5, ஒப்பு.
4. வாழி தோழி: குறுந். 226:4, 240:5, 278:4, 316:3, 331:5, 339:5, 350:1, 387:4.
6. வழையம லடுக்கம்: "வழையமை சாரல்" (மலைபடு. 181.)
8. புன்றாளோமை: குறுந். 79:2, ஒப்பு.
(260)