பாலை பாடிய பெருங்கடுங்கோ. (பி-ம்.) 2. ‘யிருக்கத்தன் மனையே யானே’.
(ப-ரை.) ஊர் அலர் எழ - ஊரில் பழிமொழி உண்டாக, சேரி கல்லென - தெருவில் உள்ளார் கல்லென்று ஆரவாரிப்ப, ஆனாது அலைக்கும் - அமையாமல் நம்மை வருத்துகின்ற, அறன் இல் அன்னை - அற நினைவில்லாத தாய், தன் மனை - தன் வீட்டில், தானே இருக்க - நின்னைப் பிரிந்து தான் ஒருத்தியே இருப்பாளாக; யான் சேய் நாட்டு - நான் நெடுந்தூரத்தில் உள்ள நாட்டின்கண், விண் தொட நிவந்த - வானத்தைத் தொடும்படி உயர்ந்த, விலங்கு மலை கவான் - குறுக்கிட்ட மலையின் அடிவாரத்தில் உள்ள, கரும்பு நடு பாத்தி அன்ன - கரும்பை நட்ட பாத்தியைப் போன்ற, பெருகளிறு அடிவழி - பெரிய ஆண் யானையினது அடிச்சுவட்டின் கண், நிலைஇய - தங்கிய, நீர் - நீரை, அவரொடு - அத் தலைவரோடு, நெல்லி தின்ற முள் எயிறு தயங்க - நெல்லிக் காயைத் தின்ற முள்ளைப் போலக் கூரிய பற்கள் விளங்கும் படி, உணல் ஆய்ந்திசின் - நீ உண்ணுதலை நினைந்தேன்.
(முடிபு) எழ, கல்லென, அன்னை இருக்க; யான் உணல் ஆய்ந்திசின்.
(கருத்து) நீ தலைவனுடன் போதலுக்கு யான் நேர்ந்தேன்.
(வி-ரை.) ஊர் அலரெழுதலும் சேரி ஆரவாரித்தலும் தலைவி தலைவனுடன் செல்வதனால் நிகழ்வன. சேரியில் உள்ளார் ஊரினருள் தலைவியை நன்கு அறிந்தவராதலின் ஆரவாரித்தனர். அலைத்தல் - காவல் செய்தல். அறன் - தக்க தலைவன் இன்னான் என்பதை அறிந்து மணம் செய்து தருதல். தானே: ஏகாரம் பிரிநிலை.
முள் எயிறு - முட்போலக் கூரிய எயிறு. நெல்லி பாலை வழியில் இருப்பது. அதனைத் தின்றமையால் ஒளி இழந்த பல் நீருண்பதனால் விளக்கமுறும். உணல் - தலைவி உண்ணுதல்.
யானை அடிச்சுவட்டின்கண் தங்கிய நீர் கரும்பின் பாத்தியில் உள்ள நீரைப் போல்வது. இங்ஙனம் நீர் களிற்றடிச் சுவட்டிற் றங்குதலை இந்நூல், 52-ஆம் செய்யுளாலும் உணரலாகும்.
நெல்லிக் காயைத் தின்ற பின்னர் நீரைக் குடித்தால் இனிக்கும் (அகநா. 54:15-6.) இங்ஙனம் குடிக்கும் வழக்கம்,
| "செழுந்தண் மனையோ டெம்மிவ ணொழியச் |
| செல்பெருங் காளை பொய்மருண்டு சேய்நாட்டுச் |
| சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் |
| வீழ்கடைத் திரள்கா யொருங்குடன் றின்று |
| வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த |
| குவளை யுண்க ணென்மகள்" (நற். 271:3-8) |
என்பதனாலும் விளங்கும்.
களிற்றின் அடிவழி நிலைஇய நீராயினும் அது தலைவனோடு உண்ணும்பொழுது தலைவிக்கு மிக இனியதாகும்;
| "அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் |
| தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட் |
| டுவலைக் கூவற் கீழ |
| மானுண் டெஞ்சிய கலிழி நீரே" (ஐங். 203) |
இச் செய்யுளை அடியொற்றி வந்த பழஞ்செய்யுள் ஒன்று வருமாறு;
| "ஊருஞ் சேரியு மலரெழ யாயும் |
| தானே யிருக்க தன்மனை யானே |
| திருந்துவேல் விடலையொடு கெழீஇ |
| அருஞ்சுரஞ் சேறல் புரிந்தன னினியே" (தமிழ்நெறி. மேற்.92) |
மேற்கோளாட்சி 1. ஊராருடைய கூற்று, கொண்டெடுத்து மொழியப்பட்டது ( தொல். செய். 192, பேர். 191, ந; இ.வி. 563); அசையும் ஒரோவழிச் சீராம் (யா.வி. 95.)
2-3. இடையூறு பொருளின்கண் தலைவி போக்குடன்பட்டது ( தொல். பொருள். 31,ந.)
மு. போக்கு நேர்ந்தமை தோழி கூறியது (தொல். அகத். 39, ந.)
ஒப்புமைப் பகுதி 1. ஊருஞ் சேரியும் அலரெழல்: "ஊருஞ் சேரியு முடனியைந் தலரெழ", "ஊருஞ் சேரியு மோராங் கலரெழ" (அகநா, 220:1, 383:2.) அலராற் கல்லெனல்: (குறுந். 24:6); "இவ்வூர்க், கல்லென் கௌவை" (ஐங். 131:2-3.)
கல்லென்றல்: குறுந். 24:6, ஒப்பு; நற். 207:3, 215:7.
2. அன்னை அலைத்தல்: குறுந். 247:5, ஒப்பு.
அறனிலன்னை: குறுந். 244:6, ஒப்பு.
4. முள்ளெயிறு: குறுந். 286:1, நற். 120:11; கலி. 4:13. 104:18, 112:20; அகநா. 212:5; ஏலாதி.7; மணி. 18:71; சீவக. 491, 1099, 2732.
6. விண்டொட நிவந்த மலை: குறுந். 144:7, 285:8.
விலங்கு மலை: குறுந். 134:7, 144:7, மலைக் கவான்: குறுந். 353:2;நற். 32:1.
7. கரும்பு நடு பாத்தி: குறுந். 180:2, ஒப்பு; ஐங். 65:1; பதிற்.13:3.
7-8. "பெருங்களிறு மிதித்த வடியகத் திரும்புலி, ஒதுங்குவன கழிந்த செதும்ப லீர்வழி" (அகநா. 155;11-2.) மு. அகநா. 65.
(262)