தலைவனது பிரிவால் தலைவியினது மேனியின் நிறம் வேறுபடுதலைக் கண்டு கவன்ற தோழியை நோக்கி, "யான் அவர் கேண்மையின் உறுதியை அறிவேனாதலின் ஆற்றுவேன்" என்று தலைவி கூறியது.)
 264.   
கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை  
    
ஒலிநெடும் பீலி துயல்வர வியலி 
    
ஆடுமயி லகவு நாட னம்மொடு  
    
நயந்தனன் கொண்ட கேண்மை 
5
பயந்தக் காலும் பயப்பொல் லாதே. 

என்பது ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்றது.

கபிலர்.

    (பி-ம்.) 1. ‘றிடுகரை’, ‘றிருங்கரை’; 5. ‘பசந்தக் காலும் பசப்பொல்லாதே’.

    (ப-ரை.) தோழி, கலி மழை கெழீஇய - ஆரவாரத்தை உடைய மழை பொருந்திய, கான் யாறு இகு கரை - காட்டாற்றினது தாழ்ந்த கரையினிடத்து, ஒலி நெடு பீலி துயல்வர - தழைத்த நெடிய தோகை அசைய, இயலி - நடந்து, ஆடு மயில் அகவும் நாடன் - ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன், நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை - நம்மோடு விரும்பி உண்டாக்கிக் கொண்டநட்பானது, பயந்தக்காலும்- நாம் பசலையை அடைந்தாலும், பயப்பு ஒல்லாது - அப் பசலையொடு பொருந்தாது.

    (முடிபு) நாடன் கொண்ட கேண்மை பயந்தக்காலும் பயப்பு ஒல்லாது.

    (கருத்து) என் மேனியில் வேறுபாடு உண்டாயினும் என் நெஞ்சம் அவர் செய்த நட்பில் உறுதி உடையதாகையால் ஆற்றுவேன்.

    (வி-ரை.) கலி - இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம். இகுகரை - தாழ்ந்த கரை; "இகுத்த நோக்கம்" (அகநா. 39:17) என்ற இடத்து அதன் உரையாசிரியர், தாழ்ந்த நோக்கமெனப் பொருள் எழுதி இருத்தல் காண்க; இகுத்தல் என்பதற்கு அடித்தல் என்னும் பொருளுண்மையின் (புறநா. 158:1) அலைகள் மோதும் கரையெனப் பொருள் கொள்ளுதலும் ஆம்; "இருங்கலி குப்பத்து" (மலைபடு. 367) என்ற இடத்து இகுப்பம் என்பதற்கு நச்சினார்க்கினியர் திரட்சி எனப் பொருள் கூறுதலின், திரண்ட கரை என்பதும் ஒன்று.

    கேண்மை அப்பயப்புக்கு உடம்படாது விரைவில் கூட்டுவிக்கும் என்பதும் பொருந்தும்.

    ‘என்னுடைய மேனி பசந்ததே அன்றித் தலைவன் கொண்ட கேண்மை மெலிவுற்றிலது. அது மிக்க திண்ணிதாக அமைந்தது. ஆதலின் யான் ஆற்றுவேன்' என்று தலைவி கூறினாள்.

    ஒப்புமைப் பகுதி 3. மயில் அகவும் நாடன்: "மயிலின மகவு நாடன்" (யா.கா. மேற். ‘பூத்த வேங்கை'.)

    1-3. மயில் இயலி ஆடுதல்: "மால்வரைச் சிலம்பின் மகிழ் சிறந்தாலும், பீலி மஞ்ஞையி னியலி" (பெரும்பாண். 330-31); "கழை வள ரடுக்கத் தியலி யாடுமயில்" (அகநா. 82:9.)

    3-4. நாடன் கேண்மை: குறுந். 61:5, ஒப்பு. நயந்த, பயந்த; குறுந். 219:1 குறள், 1181, 1190.

    4-5. தலைவன் கேண்மை கெடாதது: குறுந். 170:4-5, 313:4-5. தலைவியின் உடல் வேறுபாடுற்றும் தலைவன் கேண்மை மெலியாமை; குறுந். 90:6-7, ஒப்பு.

(264)