(தலைவன் வரைந்து கொள்ளாமல் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி தோழியை நோக்கி, "அவர் வருவார் என்று தெரிவிக்கும் தூது ஒன்றையும் காணேம்" எனக் கூறியது.)
 266.   
நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன் 
    
றின்னா விரவி னின்றுணை யாகிய 
    
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ 
    
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. 

என்பது வரையாது பிரிந்தவிடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

நக்கீரர்.

    (பி-ம்.) தோழி-, துறத்தல் வல்லியோர் - நம்மைப் பிரிந்து சென்ற வன்மையை உடையோராகிய தலைவர், புள் வாய் தூது - பறவை வாயிலாக விடும் தூது மொழியை, நமக்கு ஒன்று உரையார் ஆயினும் - நம்மைப் பொருட்படுத்தி நமக்கு ஒன்றைக் கூறி விடாரானாலும், தமக்கு ஒன்று இன்னா இரவின் - தமக்குப் பொருந்திய இன்னாமையை உடைய இராக்காலங்களில், இன்துணை ஆகிய - இனிய துணையாக இருந்த, படப்பை வேங்கைக்கும் - மனைத் தோட்டத்தின்கண் உள்ள வேங்கை மரத்திற்கும், மறந்தனர் கொல் - தூது மொழியை மறந்தனரோ?

    (முடிபு) வல்லியோர் தூது நமக்கு உரையாராயினும் வேங்கைக்கு மறந்தனர் கொல்?

    (கருத்து) தலைவர் வருதற்குரிய அடையாளம் ஒன்றும் கண்டேமில்லை.

    (வி-ரை.) நமக்கு ஒன்று உரையாரென்றது, 'அவர் வரையாது சென்றவர் ஆதலின் சென்ற வினை முடிந்து என்னை வரைந்து கொள்ளும் பொருட்டு எமர்பால் மணம் பேசுதற்குத் தூது விட்டாரிலர்' என்னும் கிடக்கையது. தாம் பிரிந்து சென்ற காலத்தில் நமக்கு ஒன்று உரைத்து விட்டுச் சென்றாரிலரென்று பொருள் கூறுதலும் பொருந்தும். இரவுக்குறி வந்தொழுகிய காலத்தில் தலைவன் வேங்கை மரத்தின் அடியில் தலைவியைக் கண்டானாதலின் அவனுக்கு அதனை இன்றுணை என்றாள்;

  
"பனைவளர் கைம்மாப் படாத்தம் பலத்தரன் பாதம்விண்ணோர் 
  
 புனைவளர் சாரற் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து 
  
 சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும் 
  
 சினைவளர் வேங்கைகள் யாங்கணின் றாடுஞ் செழும்பொழிலே"  
  
                                                (திருச்சிற். 154) 

என்ற செய்யுளில் இரவுக் குறியாக வேங்கைமரச் சூழல் சொல்லப் பட்டுள்ளது.

    இன்னா இரவு - காவல் மிகுதியாகிய துன்பத்தை உடைய இரவு.தன்னைக் காண்பதற்குரிய இடமாதலின் இன்றுணை என்றாள்.

    வேங்கைக்குத் தூது மறந்தனர் கொல் என்றது, இரவுக் குறியின் இடத்து வந்து அளவளாவிய செய்திகளை மறந்தனரோ என்னும் கருத்தினது.

    மரத்திற்கேற்பப் புள் வாய்த்தூது கூறினாள். புள் விடு தூது புலனெறி வழக்கம். ஓ, ஏ: அசை நிலைகள்.

    ஒப்புமைப் பகுதி 3. வேங்கை தலைவியின் வீட்டருகில் இருத்தல்: குறுந். 355:6.

    4. வல்லியோர்: குறுந். 218:7; அகநா. 316:12, 398:15.

    பிரிந்த தலைவன் தூது விடுத்தல்: குறுந். 254:7, ஒப்பு.

    புள்வாய்த் தூது: "துணிமுந்நீர்ச் சேர்ப்பதற்குத் தூதோடு வந்த, பணிமொழிப் புள்ளே" (கைந்நிலை, 51.)

(266)