(வினைமுற்றி மீண்டு தலைவியோடு இன்புற்ற தலைமகன் மழையைநோக்கி, "நீ நன்றாகப் பெய்வாயாக!" என வாழ்த்தியது.)
 270.   
தாழிரு டுமிய மின்னித் தண்ணென 
    
வீழுறை யினிய சிதறி யூழிற் 
    
கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப் 
    
பெய்தினி வாழியோ பெருவான் யாமே 
5
செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ 
    
டிவளின் மேவின மாகிக் குவளைக் 
    
குறுந்தா ணாண்மலர் நாறும் 
    
நறுமென் கூந்தன் மெல்லணை யேமே. 

என்பது வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடன் இருந்து கூறியது.

பாண்டியன் பன்னாடு தந்தான்.

    (பி-ம்.) 2. ‘வீழ்முறை’, ‘யூழியிற்’; 3. ‘கடிப்பிடு’; 4. ‘பெய்கினி’, ‘பெய்யினி’; 6. ‘மேவலமாகிக்’, ‘மேவுதலாகிக்’.

    (ப-ரை.) யாம் , செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு - செய்வினை முற்றுவித்ததனால் நிறைவை உடைய உள்ளத்தோடு, இவளின் மேவினம் ஆகி - இத்தலைவியோடு விரும்பிப் பொருந்தினேமாகி, குவளை குறு தாள் நாள் மலர் நாறும் - சூடிய குவளையினது குறிய காம்பை உடைய அலர்ந்த செவ்வியை உடைய மலர் மணக்கின்ற, நறுமெல் கூந்தல் மெல் அணையேம் - நல்ல மெல்லிய கூந்தலாகிய மெல்லிய பாயலின் கண்ணே இருந்தேம். ஆதலின், பெருவான் - பெரிய மேகமே, இனி - இப்பொழுது, தாழ் இருள் துமிய மின்னி - தங்கிய இருள் கெடும்படி மின்னுதலைச் செய்து, தண்ணென வீழ் உறை இனிய சிதறி - குளிர்ச்சி உண்டாம்படி வீழுகின்ற துளிகளுள் இனியவற்றைத் துளித்து, ஊழின் - முறைமையினால், கடிப்பு இகு முரசின் முழங்கி - குறுந்தடியால் அடிக்கப் பெறும் முரசைப் போல முழங்கி, இடித்து இடித்து - பன்முறை இடித்து, பெய்து வாழி - மழையைப் பெய்து வாழ்வாயாக!

    (முடிபு) யாம் மெல்லணையேம்; பெருவான், இனி மின்னிச் சிதறிஇடித்துப் பெய்து வாழி!

    (கருத்து) நாம் இன்பம் பெற்றேம்; மழை நன்கு பெய்வதாக!

    (வி-ரை.) இது, வினைமுற்றிய தலைமகன் தான் மேற்கொண்டஇல்லறத்துக்குரிய பொருள் கை வந்தமையால் அறமும் பொருளும், தலைவியைச் சேர்ந்தமையால் இன்பமும் பெற்ற உள்ள நிறைவினால் வானை வாழ்த்தியது. அறம், பொருள், இன்பம் என்னும் இம் மூன்றையும் பெற்ற தலைவன் அம் மூன்றும் நடத்தற்கு ஏதுவாகிய வானை வாழ்த்தினான்;

    "கடவுளது ஆணையான் உலகமும் அதற்குறுதியாகிய அறம், பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழை" (குறள். வான் சிறப்பு, அவதாரிகை, பரி.)

    வாழ்த்தப்படும் பொருள்களுள் வானும் ஒன்று;

    ‘வாழ்த்தப்படும் பொருளாவன: கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்பன' (தொல். செய். 109,பேர்.) இங்ஙனம் தலைவன் வாழ்த்துதலைக் கோவைப் பிரபந்தங்களுள் பெரும்பாலனவற்றின் இறுதியில் காணலாம்.

    வீழ் உறை - உயிர்களால் விரும்பப்படும் துளி எனலும் ஆம். அளவிகந்து பெய்து இன்னாமை விளையாமை வேண்டி இனிய சிதறி என்றான். ஊழ் - முறை; முறை முரசை அடித்தலின் மேற்று. வாழியோ: ஓ அசைநிலை. செம்மல் - உள்ள நிறைவு; செம்மலுள்ளம் என்பதற்குத் தலைமை பொருந்திய உள்ளம் என்று பொருள் எழுதுவர் (முருகு. 62, ந.)

    நாறு மென்றமையின் நறுமை நன்மையாயிற்று. மென்மையும் நறுமையும் அணையின் இலக்கணமாதலின் அவற்றை உடைய கூந்தலை அணை என்றான். ஏகாரங்கள் அசை நிலைகள்.

    மேற்கோளாட்சி 1-5. பிரிந்த இடத்துத் தான் பெற்ற பெருக்கம் எய்திய சிறப்பின்கண் தலைவன் மனம் மகிழ்ந்து கூறியது (தொல். கற்பு.5, ந.)

    மு. பிரிந்து வந்து புகுந்த தலைவன் கூற்று (தொல். கற்பு. 5, இளம்.) தலைவன் பள்ளியிடத்து வந்திருந்து கூறியது (தொல். கற்பு. 5, ந.);

தலைமகளோடு இருந்த தலைமகன் கார்ப்பருவம் கண்டு உவந்து சொல்லியது (நம்பி. 209.)

    ஒப்புமைப் பகுதி 3. கடிப்பிகு முரசு: புறநா. 158:1; நாலடி. 100; பெருங். 1. 37:5.

    இடியின் ஒலிக்கு முரசின் முழக்கம்: குறுந். 380:1-3; முருகு. 121; குறிஞ்சிப். 49; நற். 191:10-12; பரி.4:19, 22:4; அகநா. 312:10; புறநா. 17:39, 350:4; திணை. ஐம். 23.

    5. வினை முடிந்தமையால் தலைவனுக்கு இன்பம் உண்டாதல்: "வினைமுடித் தன்ன வினியோள்" (நற். 3:8,) 5.மு.குறுந். 275:5; அகநா. 184:5.

    8. கூந்தலின் மணம்: குறுந். 2:4-5, ஒப்பு.

    கூந்தலணை: குறுந். 254:5, ஒப்பு. 6-8. "குவளை நாறுங் குவையிருங் கூந்தல்" (குறுந். 300:1); "குவளை நாறுங் கூந்தற் றேமொழி" (நற்.262:7.)

(270)