சிறைக்குடி யாந்தையார். (பி-ம்.) 1. ‘புதுமுகை’; 2. ‘பெருங்காடுள்ளும’, ‘பெருங்காட்டுள்ளுறும்’, ‘பெருங்காடுள்ளுறும்’; 8. ‘நாமுளெமாகப்’, ‘பிரியலெந் தெளிமே’.
(ப-ரை.) அல்குறு பொழுதில் - இரவில், தாது முகை தயங்க - தாதை உடைய அரும்பு விளங்க, பெரு காடு உளரும் - பெரிய காட்டில் தடவி வருகின்ற, அசைவளி போல - அசைகின்ற காற்றைப் போல, தண்ணிய கமழும் - குளிர்ந்தனவாகிய நறுமணம் வீசுகின்ற, ஒள் நுதலோய் - ஒள்ளிய நெற்றியை உடையோய், நொந்தனை ஆயின் - நீ தலைவன் பிரிவான் என்று வருந்தினையாயின், கண்டது மொழிவல் - யான் அறிந்ததைச் சொல்லுவேன், கேட்பாயாக; பெரு தேன் கண்படு வரையில் - பெரிய தேனிறால் தங்கி இருக்கும் மலைப் பக்கத்தில், அத்தேனிறாலைப் பெறும் பொருட்டு, முது மால்பு - பழைய கண்ணேணியின்மேல், அறியாது ஏறிய மடவோன் போல - அறியாமல் ஏறிய அறிவிலாதானைப் போல, இ உலகம் - இந்த உலகமானது, ஏமாந்தன்று -ஏமாந்தது; நாம் உளேம் ஆக - நாம் உயிரோடு இருப்ப, அது காறும், பிரியலன் - தலைவன் நின்னைப் பிரிந்து செல்லான்; தெளிமே - இதனைத் தெளிவாயாக.
(முடிபு) நுதலோய், நொந்தனையாயின் மொழிவல்; இவ்வுலகம் ஏமாந்தன்று, உளேமாகப் பிரியலன்; தெளிமே.
(கருத்து) தலைவன் நின்னைப் பிரிந்து செல்லான்.
(வி-ரை.) அசைவளி - அசைந்து மெல்ல வீசும் காற்று; மந்த மாருதம் என்பதற்கு நேரான பொருள் உடையது. கண்டது - அறிந்தது. பெருந்தேன் - மலைத்தேன்; இங்கே அதனை உடைய இறாலுக்கு ஆயிற்று. கண்படுதல் - பிறரால் கொள்ளப்படாது நெடுங்காலமாக அமைந்து இருத்தல். முது மால்பு - பழையதாகி ஒடிந்து போம் நிலையை உடைய கண்ணேணி; மால்பு - கண்ணேணி (புறநா. 105;6); மூங்கிலின் கணுவைக் கழியாமல் கால் வைக்கும்படி செப்பம் செய்து சார்த்தி அக்கணுவையே படியாகக் கொண்டு ஏறுவது. முதுமால்பு அறியாதேறிய மடவோன் சிறிது ஏறிப்பின் அவ்வேணியின் இயல்பு அறிந்து அஞ்சி மீண்டும் இறங்குவன். அதிபோலச் சேய் நாடு சென்று வினை முற்றுறக் கருதிய தலைவன் தலைவியைப் பிரிதலை மேற்கொள்ள எண்ணி அப்பிரிவு தலைவியின் உயிரிழவையும் அதனால் தனக்கு இன்னாமையையும் தருதலை அறிந்து செலவு தவிர்ந்தான். உலகத்தின் மேல் வைத்துக் கூறினும் கருதியது தலைவனையே என்க.
ஏமாந்தது தான் முதலில் எண்ணியபடி செய்ய மாட்டாமல் செலவுதவிர்ந்தது.
நாம் உளேமாகப் பிரியலன் என்றது, பிரிந்தால் தலைவி உயிர் நீங்குவள் என்பதை உணர்ந்தமையைக் குறித்தது.
மே: முன்னிலை அசை.
ஒப்புமைப் பகுதி 2. வளி உலர்தல்: (குறுந். 278:1); "வீபெய் கூந்தல்வீசுவளி யுளர" (நற். 264:5); "விரைவளர் கூந்தல் வரைவளி யுளர" (புறநா. 133:4.) அசைவளி: குறுந். 28:4, ஒப்பு.
3. நுதல் மணத்தல்: குறுந். 22:5, ஒப்பு.
1-3. அரும்பின் மேல் வீசிய காற்றின் மணம் நுதலின் மணத்திற்கு: "கொய்யகை முல்லை காலொடு மயங்கி, மையிருங் கான நாறு நறுநுதல்" (அகநா. 43:9-10.) 4. கண்டது மொழிதல்: குறுந். 2:2.
5. பெருந்தேன் கண்படுவரை: "பிரசந் தூங்குமலை" (குறுந்.392:8); "தேன்றூங்கு முயர்சிமைய, மலை" (மதுரைக் 3-4); "பிரசந்தூங்கு சேட்சிமை, வரையக வெற்பன்" (அகநா. 242:21-2.)
5-6. மால்பிலேறித் தேன் எடுத்தல்: "கலைகை யற்ற காண்பினெடுவரை, நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப், பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை" (மலைபடு. 315-7); "அவ்வரைத், தேனி னிறாலென வேணி யிழைத்திருக்கும், கானக நாடன் மகன்" (கலி. 39:8-10); "ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும், வேய்விளையாடும் வெற்பா" (திருச்சிற். 133.)
(273)