(பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் பாலை நிலத்தின் வெம்மையை நினைந்து பின், "தலைவியின் இனிய தன்மைகளை நினைந்து செல்லின் அவ் வெம்மை தோற்றாது" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
 274.   
புறவுப்புறத் தன்ன புன்கா லுகாஅய்க் 
    
காசினை யன்ன நளிகனி யுதிர்  
    
விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்பு்  
    
வருநர்ப் பார்க்கும் வன்க ணாடவர் 
5
நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும் 
    
இன்னாக் கானமு மினிய பொன்னொடு 
    
மணிமிடை யல்குன் மடந்தை 
    
அணிமுலை யாக முள்கினஞ் செலினே. 

என்பது பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.

உருத்திரன்.

     (பி-ம்.) 1. ‘புன்காயுகாய்’, ‘புன்காலுகா’ ‘அத்துச்சினை’; 3. ‘பற்றிக் கொடியவர்’;8. ‘மூழ்கினம்’, ‘முயங்கினம்’, ‘முழக்கினம்’.

     (ப-ரை.) நெஞ்சே, பொன்னொடு மணிமிடை அல்குல் மடந்தை - பொன்னாலும் மணியாலும் இயற்றப்பட்ட அணிகளை அணிந்த அல்குலை உடைய தலைவியினது, அணி முலை ஆகம் - அழகிய நகிலை உடைய மார்பை, உள்கினம் செலின் - நினைந்தேமாகிச் சென்றால், புறவு புறத்து அன்ன புல் கால் உகாய் - புறாவினது முதுகைப் போன்ற புல்லிய அடியை உடைய உகாய் மரத்தினது, காசினை அன்ன - மணியைப் போன்ற, நளி கனி உதிர - செறிந்த பழங்கள் உதிரும்படி, விடு கணை வில்லொடு பற்றி - விடுகின்ற அம்பை வில்லோடு பிடித்து, கோடு இவர்பு - உயர்ந்த இடத்தின் மேல் ஏறி, வருநர் பார்க்கும் - வழியிலே வருபவரைப் பார்க்கும், வன்கண் ஆடவர் - தறு கண்மையை உடைய ஆறலை கள்வர், நீர் நசை வேட்கையின் - நீரை விரும்புகின்ற வேட்கையினால், நார் மென்று தணியும் - மரப் பட்டையை மென்று அவ் வேட்கை நீங்கும், இன்னாகானமும் இனிய - இன்னாமையை உடைய காடுகளும் இனியவாகும்.

     (முடிபு) மடந்தை ஆகம் உள்கினம் செலின், இன்னாக் கானமும்இனிய.

     (கருத்து) தலைவியை மறவாது நினைத்திருப்பின் பிரித்து வருதல்கூடும்.

     (வி-ரை.) புறா பாலை நிலத்ததாதலின் இடத்திற்கு ஏற்ப அதனை உவமை கூறினான். உகாஅய் - ஒரு மரம்; இது யகர வீறுடையது என்பது நேமிநாதம், சூ. 15, உரையால் உணரப்படும்; உகாஅ எனவும் வரும். இதன் கனி மணியைப் போன்ற தோற்றமுடையது என்பது,

  
"வெயிலவிர் நுடங்கும் வெவ்வெங் களரிக் 
  
 குயிற்கண் ணன்ன குரூஉக்காய் முற்றி 
  
 மணிக்கா சன்ன மானிற விருங்கனி 
  
 உகாஅய் மென்சினை யுதிர்வன கழியும்"      (அகநா. 293;5-8.) 

என்பதனாலும் அறியப்படும். காசினை: ஐகாரம் அசை நிலை.

     கனி உதிரும்படி அம்பை விடுவர். நார் - பட்டை (குறுந். 112:4, 156:2.) தலைவியை நினைந்து செல்லின் கானம் இனியவாகும் என்றுதலைவன் கருதுவதை,

  
"நெடுங்கழை முளிய வேனி னீடிக் 
  
 கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் 
  
 வெய்ய வாயின முன்னே யினியே 
  
 ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறும் 
  
 தண்ணிய வாயின சுரத்திடை யாறே", 
  
"வேனி லரையத் திலையொலி வெரீஇப் 
  
 போகில்புகா வுண்ணாது பிறிதுபுலம் படரும் 
  
 வெம்பலை யருஞ்சுர நலியா 
  
 தெம்வெங் காதலி பண்புதுணைப் பெற்றே", 
  
"பொறிவரித் தடக்கை வேத லஞ்சிச் 
  
 சிறுகண் யானை நிலந்தொடல் செல்லா 
  
 வெயின்முளி சோலைய வேயுயர் சுரனே 
  
 அன்ன வாரிடை யானும் 
  
 தண்மை செய்தவித் தகையோள் பண்பே"      (ஐங். 322, 325, 327.) 

என்னும் செய்யுட்களிலும் காணலாம்.

     மேற்கோளாட்சி 1. செய்யுளில் குறியதன்கீழ் ஆக்குறுகி உகரமேற்றது (தொல். உயிர்மயங்கு. 32, ந.; இ.வி. 90.)

     ஒப்புமைப் பகுதி 1. புன்கால் உகாய்: "புல்லரை யுகாஅய்" (குறுந். 363:4.)

     (பி-ம்.) புன்காய் உகாய்: நற். 66:1-2. உகாய்: பெருங். 1.52:37.

     1-3. கனியை அம்பால் உதிர்த்தல்: சீவக. 1640-41; வி.பா. பழம்பொருந்து. 3.

     3-5. "ஊரில்ல வுயவரிய, நீரில்ல நீளிடைய, பார்வ லிருக்கைக்கவிகண்ணோக்கிற், செந்தொடை பிழையா வன்க ணாடவர்" (புறநா. 3:17-20.) 6. இன்னாக் கானம்: குறுந். 124:2-3.

(274)