(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்துத் தலைவியை நோக்கி, "மணி ஒலி செவிப்படுகின்றது; அது தலைவனது தேர்மணி ஓசையோ என்று சென்று பார்ப்போம்" என்று தோழி கூறியது.)
 275.    
முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்  
    
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 
    
எல்லூர்ச் சேர்தரு மேறுடை யினத்துப் 
    
புல்லார் நல்லான் பூண்மணி கொல்லேர் 
5
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு  
    
வல்வி லிளையர் பக்கம் போற்ற 
    
ஈர்மணற் காட்டாறு வரூஉம 
    
தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே. 

என்பது பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்றத் தோழி தலைமகட்கு உரைத்தது.

     (வரவு நிமித்தம்: குறுந். 260, கருத்து.)

ஒக்கூர் மாசாத்தி.

     (பி-ம்.) 1. ‘கல்லுயர் பேறி’; 3. ‘யினத்தது’; 4. ‘புல்லூர்’, ‘பூமணி’.

     (ப-ரை) தோழி , ஆண்டு இயம்பிய உள - அங்கே ஒலிப்பனவாக உள்ளவை, எல் ஊர் சேர்தரும் - மாலைக் காலத்தில் ஊரை வந்து அடையும், ஏறுடை இனத்து - காளையை உடைய பசுவினத்தில் உள்ள, புல் ஆர் நல் ஆன் - புல்லை உண்ட நல்ல பசுக்கள், பூண்மணி கொல் - கழுத்தில் பூண்ட மணி ஓசையோ? செய்வினை முடித்த - தாம் செய்த வினையை முற்ற முடித்ததனால் ஆகிய, செம்மல் உள்ளமொடு - நிறைவுடைய உள்ளத்தோடு, வல்வில் இளையர் பக்கம் போற்ற - வலிய வில்லை உடைய இளைய வீரர் தன் அருகில் பாதுகாப்ப, ஈர் மணல் காடு ஆறு வரும் - ஈரமாகிய மணலை உடைய காட்டு வழியிலே வரும், தேர் மணி கொல் - தேரின் மணி ஓசையோ? முல்லை ஊர்ந்த கல் உயர் ஏறி - முல்லைக்கொடி படர்ந்த கல்லின் மேல் ஏறி, கண்டனம் வருகம் - கண்டு வருவேம்: சென்மோ - வருவாயாக.

     (முடிபு) ஆண்டு இயம்பிய உள; ஆன் பூண்மணி கொல்? தேர்மணி கொல்? ஏறிக் கண்டனம் வருகம்; சென்மோ.

     (கருத்து) தலைவனது தேரின் மணியோசை கேட்டலின் அவன் வருகின்றானே்னத் தோற்றுகின்றது.

     (வி-ரை) உயர் - உயர்ந்த இடம் (குறுந். 235:3.) மோ: முன்னிலை அசை (குறுந். 2:2.) வல்வில்: குறுந். 100:5, .

     இளையர் பாதுகாத்தலை, "உழைக்குறுந் தொழிலுங் காப்பு முயர்ந்தோர்க்கு, நடக்கை யெல்லா மவர்கட் படுமே" (தொல். கற்பு. 30) என்னும் இலக்கணம் தெளிவுறுத்தும்.

     மழை பெய்த கார்ப்பருவம் ஆதலின் காட்டாறு ஈர்மணலை உடையதாயிற்று.

     ஒப்புமைப் பகுதி 1. முல்லையூர்ந்த கல்: "கல்லிவர் முல்லை" (குறிஞ்சிப். 77); "முல்லை தாயகல்" (நற். 343:1); "கல்லிவர் முல்லைக் களிவண்டு" (யா.வி. 42, மேற்.) கல்லுயர: குறுந். 235:3, ஒப்பு.

     1-2. உயர்ந்த இடத்தில் ஏறிப் பார்த்தல்: "பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புணை யாகி, ஒருபெருங் காதலர் சென்றார் - வருவது, காணிய வம்மோ கனங்குழை கண்ணோக்கால். நீணகர் முன்றின்மேனின்று" (தொல். அகத். 27, ந. மேற்.)

     3. ஏறுடை யினம்: நெடுநல். 4; மலைபடு. 408-9, 573; அகநா. 269:3.

     4. ஆன்மணி: குறுந். 86:5-6, 190:6-7; மலைபடு. 573; நற்.264:8.

     5. மு. குறுந். 270:5, ஒப்பு.

     6. வல்வில்: குறுந். 100:5, ஒப்பு.

     வல்வில் இளையர்: அகநா. 120:12, 152:15; பெருங். 3.17:217.

     6-8. தலைவன் இளையர் போற்ற மணல் வழியில் தேரேறி வருதல்; "வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து. போர்வலிளையர் தாள்வலம் வாழ்த்தத், தண்பெயல் பொழிந்த பைதுறு காலை ... ... ... ... ... வெண்கள ரரிமண னன்பல தாஅய் ... .... ... .... திண்டேர் வலவ கடவெனக் கடைஇ, இன்றே வருவர்" (அகநா. 74:1-12.)

(275)