(தோழியால் சேட்படுத்தப்பட்ட விடத்துத் தலைவன், "இனிமடல் ஏறிச் சான்றோரறிய வழக்குரைத்துத் தலைவியை மணம் புரிவேன்" என்று தோழி அறியும்படி முன்னிலைப் புறமொழியாகக் கூறியது.) 276. | பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் | | பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள் | | உருத்தெழு வனமுலை யொளிபெற வெழுதிய | | தொய்யில் காப்போ ரறிதலு மறியார் | 5 | முறையுடை யரசன் செங்கோ லவையத் | | தியான்றற் கடவின் யாங்கா வதுகொல் | | பெரிதும் பேதை மன்ற | | அளிதோ தானேயிவ் வழுங்க லூரே. |
என்பது தோழிக்குக் குறைமறாமல் தலைவன் (பி-ம். தலைமகன்) கூறியது.
(குறை - தலைவியை உடம்படச் செய்தல்.)
கோழிக் கொற்றன் (பி-ம். ‘கூழிக் கொற்றன்’, ‘கூளிக் கொற்றன்’). (பி-ம்) 1. ‘பாவைதையும்’; 4. ‘ரறிதலுமறியாது’, ‘தொய்மின் மிகுதி’‘காப்போரறியார்’; 6. ‘கடவினி யாங்காவது கொல்’.
(ப-ரை.) பணை தோள் குறுமகள் பாவை தைஇயும் - மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய இளைய தலைவியினது பாவையைப் பண்ணி ஈந்தும். பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் - அதன் பொருட்டுப் பஞ்சாய்க் கோரை வளர்ந்த பள்ளமாகிய நீர் நிலையைச் சுற்றியும், இவள் உருத்து எழு வனம் முலை - இவளது தோற்றம் செய்து எழுந்த அழகிய நகிலில், ஒளிபெற - நிறம் பெற, எழுதிய தொய்யில் - நான் எழுதிய தொய்யிலை, காப்போர் - இவளைப் பாதுகாத்து நிற்போர், அறிதலும் அறியார் - அறிதலையும் செய்யார்; முறையுடை அரசன் - நீதியை உடைய அரசனது, செ கோல் அவையத்து - செங்கோன்மையை உடைய அறங்கூற வையத்தில், யான் தன் கடவின் - யான் தலைமகளை வினாவினால், யாங்கு ஆவது - இஃது எவ்வாறாவது? ஆதலின், இ அழுங்கல் ஊர் - இந்த வருத்தத்தை உடைய ஊர், மன்ற பெரிதும் பேதை - நிச்சயமாக மிக்க அறிவின்மையை உடையது, அளிது - இரங்கத் தக்கது!
(முடிபு) தைஇயும் சூழ்ந்தும் எழுதிய தொய்யிலை, காப்போர் அறியார்; அரசன் அவையத்தில் யான் கடவின் யாங்காவது? இவ்வூர் பேதை; அளிது.
(கருத்து) மடலேறி அறங்கூற வையத்துச் சான்றோரது துணை கொண்டு தலைவியை மணந்து கொள்வேன்.
(வி-ரை.) தலைவி இளையள் எனவும், பெறற்கரியள் எனவும் கூறித் தோழி தலைவனைச் சேட்படுத்த வழி அவன் முன்னுறு புணர்ச்சி மொழிந்து, "யான் மடலேறிச் சான்றோர் அறியத் தலைவியால் யான் துன்புற்றதை அறிவிப்பேன். அப்பொழுது அறங்கூற வையத்தாராகிய அவர்கள் முன்னிலையில் தலைவியை நான் பெறும் வண்ணம் வினாவப் புகுந்தேனாயின் என்னைத் தடுக்கும் தோழியின் முயற்சி எவ்வாறு முடியும்!" என்று படர்க்கை வாய்பாட்டால் தோழிக்குக் கூறியது இது. இதனால் தோழி அஞ்சி, அவனது குறை முடிக்கக் கருதுவள்.
முதலில் தான் தலைவியின் விளையாட்டிற்குத் துணை செய்ததையும் தொய்யிலெழுதியதையும் உணர்த்தும் வாயிலாக முன்னுறு புணர்ச்சி முறையுறப் புலப்படுத்தினான்.
பைஞ்சாய் என்பது பஞ்சாயென வந்தது. பஞ்சாய்க் கோரையாற் பாவை பண்ணித் தலைவன் கொடுத்தான்; இச் செயல்,
| "செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் | | பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ" (கலி. 76:6-7) |
என்பதிலும் சொல்லப்பட்டது. இவளென்றான், நெஞ்சிற்கு அணியளாதலின்.
வனமுலை என்றது தொய்யிலால் அழகு வேண்டாதே இயல்பாகஅழகுடைய என்றபடி; என் ஆதரவு மிகுதியால் தொய்யிலெழுதினேன்என்பது தலைவன் கருத்து. அங்ஙனம் எழுதியதனால் அத்தொய்யில்ஒளி பெற்றது. காப்போர் என்றது தலைவியைக் காப்போராகிய தன்னையராதியோர்.
தலைவன் தொய்யிலெழுதும் வழக்கு,
| "பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ | | என்றோ ளெழுதிய தொய்யிலும்", |
| "நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென்றோட் | | பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற் | | றொய்யி லெழுதவும் வல்லன்" (கலி.18:2-3, 143:31-3.) |
என்பவற்றாலும் பெறப்படும்.
அவையத்துச் சான்றோரிடம் தலைவியைப் பற்றிக் கூறி அவளைப் பெற விரும்பிக் கேட்டலைக் கலித்தொகை 139, 140-ஆம் செய்யுட்களால் உணரலாகும்.
அழுங்கலூர் என்றது தோழியை. இவ்வூர் யாங்காவது கொல் எனக் கூட்டிப் பொருள் உரைத்தலும் பொருந்தும். மற்று, கொல், ஓ, தான், ஏ: அசை நிலைகள்.
மேற்கோளாட்சி மு. தோழி சேட்படுத்திய வழித் தலைவன் பிற கூறியது (தொல். களவு. 11, இளம்); தோழி இவ்விடத்துக் காவலர் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலின் தனக்கு உண்டாகிய வருத்தத்தைப் பார்த்துத் தலைவன் மடல் மா ஏறுதலைக் கூறியது (தொல். களவு. 11, ந.)
ஒப்புமைப் பகுதி 1. குறுமகள்: குறுந். 89:7. ஒப்பு, தலைவியின் பாவை: குறுந். 48:1, ஒப்பு. பாவை தைஇ: கலி. 56:7.
1-2. "சாய்தாட் பிள்ளை தந்து கொடுத்தும்" (கல்லாடம்.)
3. அறிதலும் அறியார்: நற். 106:1.
3-4. தலைவன் தொய்யில் எழுதுதல்: கலி. 76:14-5, 144:34;சீவக. 108.1.
5. அரசனது செங்கோலவையம்: மதுரைக். 492; நற். 90:12, 400:7-8;அகநா. 93:5; புறநா. 39:8-9, 71:7-9; சிலப். 5:135; பெருங். 1.34:25. 7-8. ஊர் பேதை, குறுந். 89:3, ஒப்பு.
(276)
|