(தலைமகன் குறித்துச் சென்ற பருவம் வருங்காலம் யாதென்று தோழி அறிவரை வினாவியது.)
 277.   
ஆசி றெருவி னாயில் வியன்கடைச் 
    
செந்நெ லமலை வெண்மை வெள்ளிழு ் 
    
தோரிற் பிச்சை யார மாந்தி 
    
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் 
5
சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே 
    
மின்னிடை நடுங்குங் கடைப்பெயல் வாடை 
    
எக்கால் வருவ தென்றி  
    
அக்கால் வருவரெங் காத லோரே. 

என்பது தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் (பி-ம். அறிவாரைக்) கண்டு வினாயது.

ஓரிற் பிச்சையார்.

     (பி-ம்.) 4. ‘அற்சிரை’, ‘தண்ணீர்ச்’; 6. ‘கடைபெயல்’; 7.’வருவரென்றி’.

     (ப-ரை.) அறிவ! மின் இடை நடுங்கும் - மின்னைப் போன்ற இடையை உடைய தலைவி நடுங்குதற்குக் காரணமான, கடை பெயல் வாடை - இறுதியில் மழையை உடைய வாடைக்கு உரிய காலம், எ கால் வருவது என்றி - எப்பொழுது வருவது என்பாயோ, அ கால் - அப்போது, எம் காதலர் - எம்முடைய தலைவர், வருவர்---; ஆதலின் சொல்வாயாக; நீ---, ஆசு இல் தெருவில் - குற்றமற்ற தெருவினிடத்தே, நாய் இல் வியன்கடை - நாய் இல்லாத அகன்ற வாயிலில், செ நெல் அமலை - செந்நெற் சோற்று உருண்டையும், வெண்மை வெள் இழுது - மிக வெள்ளிய நெய்யும் ஆகிய, ஓர் இல் பிச்சை - ஒரு வீட்டில் இடும் பிச்சையை, ஆரமாந்தி - பெற்று வயிறு நிரம்ப உண்டு, அற்சிரம் வெய்ய வெப்பம் தண்ணீர் - அற்சிரக் காலத்திற்குரிய விரும்பத் தக்க வெப்பத்தை உடைய நீரை, சேமம் செப்பில் - நீரைச் சேமித்து வைக்கும் செப்பில், பெறீஇயர் - பெறுவாயாக.

     (முடிபு) வாடை எக்கால் வருவதென்றி; அக்கால் எம் காதலோர்வருவர். நீ தெருவில் பிச்சையை மாந்தி நீரைப் பெறீஇயர்.

     (கருத்து) வாடை வீசும் பருவம் எப்பொழுது வரும்?

     (வி-ரை.) அறிவவென்னும் விளி முன்னத்தால் வருவிக்கப்பட்டது.தலைவன் வாடை வீசும் பருவத்தில் வருவதாகக் கூறிச் சென்றான்; அப்பருவம் எப்பொழுது வருமென்று அறியும் பொருட்டுத் தோழி அறிவரை வினாவினாள்.

     அறிவர் - துறவு உள்ளமும், முக்காலத்தையும் அறியும் ஆற்றலும் உடைய பெரியோர; இவர்,

  
"மறுவில் செய்தி மூவகைக் காலமும் 
  
 நெறியி னாற்றிய அறிவன்"             (தொல். புறத்.20.) 

எனச் சிறப்பிக்கப் பெறுவர். முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பர் புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியர். இவர் எக்காலத்திலும், கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும் தீயவற்றைக் கடிதலுமாகிய செயல் உடையர் (தொல். கற்பு. 13); தலைவன் தலைவியாகிய இருவரும் இவரது ஏவலைச் செய்துநிற்பர்; அவர்களை இடித்து உரைத்து நல்வழியிலே நிறுத்துதல் இவர் இயல்பு (தொல். கற்பு. 14); இவர் வாயில்களுள் ஒரு வகையினர் (தொல். கற்பு. 52); இவர் கூற்றை யாவரும் கேட்டு அதன் வழி ஒழுகுவர் (தொல். செய்யுள். 197); இவர் துறவு உள்ளத்தினராதலின் துறவியரைப் போலவே பிச்சையூண் பெற்றுண்பரென்பது இச் செய்யுளால் பெறப்படுகின்றது.

     வாடை முன்பனிப் பருவத்தும் உளதாதலின் இதில் கூறப்பட்டபருவம் அஃதென்றே கொள்க.

     ஆசில் தெருவென்றும், நாயில் வியன்கடை என்றும் சிறப்பித்த மையால் இங்கே கூறியது அந்தணர் தெருவென்று தோற்றுகின்றது;

  
"பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் 
  
 மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது 
  
 வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் 
  
 மறைகாப் பாள ருறைபதி"                  (பெரும்பாண். 298-301.) 

     ஆய் இல் கடையென வைத்து, செல்வம் சுருங்குதல் இல்லாதவாயில் என்று பொருளுரைத்தலும் பொருந்தும்; ஆய்தல் - சுருங்குதல் (தொல். உரி. 32.)

     செந்நெல் நெல் வகையில் உயர்ந்தது. பல வீடுகளில் சென்று ஐயம் பெற்றுண்ணும் இரவலரது பிச்சை போலாது ஒரு வீட்டில் பெற்றுண்ணும் பிச்சை ஆதலின், ‘ஓரிற் பிச்சை' என்றாள். ஆர - உள்ள நிறைவுண்டாக எனலும் ஒன்று.

     அற்சிரம் - முன்பனிக் காலம்; இஃது அச்சிரம் எனவும் வழங்கும். வெப்பத் தண்ணீர் - வெந்நீர்; தண்ணீர் என்பது நீரென்னுந் துணையாய் நின்றது.

     அறிவர் பெறும் உணவை ஓரிற் பிச்சை என்று சிறப்பித்தமையால் இச் செய்யுள் இயற்றிய புலவர் ஓரிற் பிச்சையார் என்று பெயர் பெற்றார்.

     ஒப்புமைப் பகுதி 1. நாயில் வியன் கடை: "பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா" (இன்னா. 3.)

     2. அமலை: "அமலைக் கொழுஞ்சோறு" (புறநா. 34;:4); "பெருஞ்சோற் றமலை" (மணி. 17:1.)

    1-3. அந்தணர் வீட்டுச் சோறும் நெய்யும்: "முந்துமுக் கனியினானா முதிரையின் முழுத்த நெய்யில், செந்தயிர்க் கண்டங் கண்ட மிடையிடை செறிந்த சோற்றில், தந்தமி லிருந்து தாமும் விருந்தொடுந் தமரினோடும், அந்தண ரமுத வுண்டி யயில்வுறு மமலை யெங்கும்" (கம்ப. நாட்டுப். 19.)

    5. பெறீஇயர்: குறுந். 75:4, ஒப்பு.

    6. தலைவி வாடைக்கு நடுங்கல்: குறுந். 103:4, ஒப்பு.

(277)