நக்கீரர். (பி-ம்.) 5. ‘வேண்டலன்’.
(ப-ரை.) கேளிர் - நண்பரே, வாழி - நீர் வாழ்வீராக! கேளிர், நாளும் என் நெஞ்சுபிணி கொண்ட - எப்பொழுதும் என்னுடைய நெஞ்சத்தைத் தன்னிடத்திலே பிணித்துக் கொண்ட, அம் சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையும், பெரு தோள் - பெரிய தோளையும் உடைய, குறுமகள் - இளைய தலைவியினது, சிறு மெல் ஆகம் - சிறிய மெல்லிய மேனியை, ஒரு நாள் புணர புணரின் - ஒரு நாள் எம் ஐம் புலனும் இயையும்படி அளவளாவுவேனாயின், யான்--, அரை நாள் வாழ்க்கையும் - அதன் பின் அரை நாளேனும் வாழ்தலை, வேண்டலென் - விரும்பேன்.
(முடிபு) கேளிர், வாழி! கேளிர், குறுமகள் ஆகம் ஒரு நாள் புணரப் புணரின் யான் வேண்டலென்.
(கருத்து) தலைவி எனக்கு இன்றி அமையாதவள்.
(வி-ரை.) பாங்கனைப் பன்மையால் கூறும் வழக்கு, "இடிக்குங் கேளிர்" (குறுந். 58) என்னும் செய்யுளிலும் வந்துள்ளது; பாங்கனைப் பன்மையால் கூறுவதற்குரிய காரணமாக இறையனாரகப் பொருள் உரையாசிரியர் கூறுவது வருமாறு:
‘பாங்கனோரின் என்று பன்மைபடக் கூறிய தெற்றிற்கு? அவன்ஒருவனாலோவெனின், பாங்கன் பார்ப்பானாகலிற் பன்மை வாசகத்தால் சான்னார் என்பது. அல்லதூஉம், இருமுதுகுரவராலும், இவனை எம்போற் கொண்டொழுகென்று தலைமகற்குக் காட்டிக் கொடுக்கப்பட்டான் பாங்கன் என்பதூஉம், நீயும் எம் போலத் தீயன கண்டு பண்பானவிடத்து அடக்குவாயாகென்று பாங்கற்குக் காட்டிக் கொடுக்கப்பட்டான் தலைமகன் என்பதூஉம் போதரல் வேண்டி இவ்வாறு பன்மை வாசகம்படச் சொன்னார் என்பது' (3, உரை.)
பிணிக் கொண்ட - பிணித்துக் கொண்ட; ‘வரிப்புனை பந்து' (முருகு. 68) என்பது போல நின்றது.
தலைவன் கூந்தற்பாயலையும் தோள் மாறுபடுதலையும் நினைந்தவனாதலின் அவ்விரண்டையும் கூறினான்.
தலைவியோடு அளவளாவாது பல நாள் உயிர் வாழ்வதினும்,அவளோடு அளவளாவி அப்பால் சிறிது பொழுதிலே இறந்துபடுதல் நன்றென்றான்.
புணரப் புணரின் - புணரக் கூடுமாயினென்பதும் பொருந்தும்;‘வெகுளாமை புணரின் நன்று - வெகுளாமை ஒருவர்க்குக் கூடுமாயின்அது நன்று' (குறள். 308, பரிமேல.்) வாழ்க்கையும்: உம்மை, இழிவுசிறப்பு; பிரித்து அரைநாள் என்பதனோடு கூட்டப்பட்டது. ஓ, ஏ: அசை நிலைகள்.
மேற்கோளாட்சி 1. இர் ஈறு விளி வேற்றுமையில் இயல்பாய் நின்றது ( தொல். விளி. 12, ந; சீவக. 393, ந.)
மு. தலைவன் கூற்று (தொல். செய். 189, பேர்; இ.வி. 562 ); பாங்கற் கூட்டத்துப் பாட்டு (தொல். செய். 198, பேர், 201, ந.); தலைவன் தலைவியின் தன்மை கூறியது (தொல். களவு. 11. ந.)
ஒப்புமைப் பகுதி 1. கேளிர்: அகநா. 130:1.
பாங்கனைப் பன்மையிற் கூறுதல்: திணைமொழி ஐம். 49.
2. நெஞ்சு பிணிக் கொண்ட தலைவி : "கொடிச்சி கையகத்ததுவேபிறர், விடுத்தற் காகாது பிணித்தவென் னெஞ்சே" (நற். 95:9-10.)
அஞ்சிலோதி: குறுந். 211:1, ஒப்பு.
3. குறுமகள்: குறுந். 89:7, ஒப்பு.
(280)