நாகம் போத்தன். (பி-ம்.) 3. ‘நன்மறி’; 5. ‘கவிந்த’; 7. ‘புகுவீபோலச்’; 8. ‘வென்பர்கொலவரே’.
(ப-ரை.) நமர் - நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், செ சுவல் கலித்த - செம்மண்ணை உடைய மேட்டின் மேல் தழைத்த, செவ்வி கொள் வரகின் - பருவம் வாய்த்த வரகினது, கௌவை நாற்றின் - காற்றால் ஒலித்தலை உடைய நாற்றினது, கார் இருள் ஓர் இலை - மிக்க கறுப்பை உடைய ஓர் இலையை, நவ்வி நாள் மறி - நாட்காலத்தே வந்த மான்குட்டி, கவ்வி--, கடன் கழிக்கும் - தின்னலென்னும் கடனைத் தீர்த்துக் கொள்ளுதற்கிடமாகிய, கார் எதிர் தண்புனம் - கார்காலத்தை ஏற்றுக் கொண்ட தண்ணிய கொல்லையை, காணின் - காண்பாராயின், நீர் திகழ் சிலம்பின் - நீர் விளங்குகின்ற மலைப் பக்கத்தில், ஓராங்கு அவிழ்ந்த - ஒரு படித்தாக மலர்ந்த, வெள் கூதாளத்து அம் தூம்பு புது மலர் - வெள்ளிய கூதாளத்தின் உட்டுளையை உடைய அழகிய புதிய மலர்கள், ஆர் கழல்பு உகுவ போல - காம்பில் கழன்று உதிர்தலைப் போல, கைவளை - நின் கை வளைகள், சோர்குவ அல்ல என்பர் கொல் - சோர்ந்து வீழ்வன அல்ல என்று எண்ணுவாரோ? எண்ணார்.
(முடிபு) அவர் புனம் காணின், வளை சோர்குவ அல்ல என்பர்கொல்?
(கருத்து) தாம் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததறிந்து தலைவர் விரைவில் வருவர்.
(வி-ரை.) தலைவன் கார்காலத்தில் மீண்டு வருவேன் என்று கூறிவினைவயிற் பிரிந்து சென்றான். அவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வரவும், அது கண்டு தலைவி ஆற்றாளாவளென்றஞ்சிய தோழி கூறியது இது.
வரகு கார் காலமாகிய செவ்வியைக் கொண்டது. செஞ்சுவல் - முல்லை நிலத்தில் உள்ள செம்மண் மேடு;
| "கான நந்திய செந்நிலப் பெருவழி |
| வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் |
| றிரிமருப் பிரலையொடு மடமா னுகள" (முல்லைப். 97-9) |
என்பதில் வரகு செம்மண்ணை உடைய முல்லை நிலத்தில் கார் காலத்தில் வளம் பெறுவது என்பதும், அதனை மான் மேயும் என்பதும் கூறப்பட்டுள்ளன.
மான்மறி தன் இளமையினால் ஓரிலையைக் கௌவுதலோடு அமைந்தது. கூதாளம்: இது கூதளம், கூதளி எனவும் வழங்கும். ஆர் - காம்பு.
சோர்குவவல்லவென்பர் கொலென்றது சோர்தலை எண்ணுவர்என்பதைப் புலப்படுத்தியது.
வரகு புனத்தின் நிலை கண்டு, தாம் மீள்வதாகக் கூறிய கார்ப்பருவம் வந்தமையையும், அதனால் கைவளை சோரும் நின் நிலைமையையும் உணர்ந்து விரைவில் மீள்வர் என்பது கருத்து.
மேற்கோளாட்சி 3. மறியென்னும் இளமைப் பெயர் நவ்வியோடு அடுத்து வந்தது (தொல். மரபு. 12, பேர.்)
ஒப்புமைப் பகுதி 1-2. சுவலில் விளைந்த பயிர்: குறுந். 204:3; பெரும்பாண். 131; மலைபடு. 436.
1-2. மான் வரகிலையைக் கறித்தல்: குறுந்.220:1-2, ஒப்பு.
4. காரெதிர் புனம்: குறுந். 233:4, ஒப்பு.
5. நீர்திகழ் சிலம்பு: குறுந். 52:1.
6. வெண் கூதாளம்: முருகு. 192; பட். 85.
6-7. ஆர் கழல்பு மலர் உகுதல்: "வெண்பூ ... ... ... ... ... ஆர் கழல்பு, களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம்" (குறுந். 329:1-3); "ஆர்கழல், பாலி வானிற் காலொடு பாறி" (அகநா. 9:6-7.)
(282)