பாலை பாடிய பெருங்கடுங்கோ. (பி-ம்.) 2. ‘யிறவினு மிழிவெனச்’; 3. ‘சொல்லிவண்மை’; 7. ‘படுமுடைப்’; 8. ‘நெடுமு ருடையய.
(ப-ரை.) தோழி , உள்ளது சிதைப்போர் - தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப் பெற்றுத் தம்பால் உளதாகிய செல்வத்தைச் செலவழிப்போர், உளர் என படாஅர் - செல்வர் என்று உலகத்தாரால் சொல்லப்படார், இல்லோர் வாழ்க்கை - தாமாக ஈட்டிய பொருள் இல்லாதார் முந்தையோர் பொருளின் பயனைத் துய்த்து வாழ்தல், இரவினும் இளிவு - இரத்தலைக் காட்டினும் இழிவு உடையது, என - என்று, சொல்லிய வன்மை - சொன்ன ஆண்மைத் தன்மையை, தெளிய காட்டி - யாம் தெளியும்படி எடுத்துக் கூறி , என்றும் கூற்றத்து அன்ன - எப்பொழுதும் கூற்றுவனைப் போன்ற, கொலைவேல் மறவர் - கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய மறச் சாதியார், ஆறு இருந்து அல்கி - வழியின் இடத்தே தங்கி, வழங்குநர் செகுத்த படு முடை - வழிப் போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலை, பருந்து பார்த்து இருக்கும் - பருந்துகள் எதிர்நோக்கித் தங்கி இருக்கின்ற, நெடு முது இடைய - நெடிய பழைய இடத்தை உடையனவாகிய, நீர் இல் ஆறு - நீர் இல்லாத பாலை நிலத்து வழிகளிலே, சென்றனர் - தலைவர் சென்றார: வாழி - அவர் வாழ்வாராக!
(முடிபு) தோழி, ‘சிதைப்போர் உளரெனப் படார்; இல்லோர் வாழ்க்கை இளிவு' எனச் சொல்லிய வன்மை காட்டி ஆறு சென்றனர்; வாழி.
(கருத்து) தலைவர் சென்ற வழியினது கொடுமையை நினைதலால்ஆற்றாமை உண்டாகின்றது.
(வி-ரை.) முன்னோரால் ஈட்டி வைத்த பொருள் கொண்டு இல்லறம் நடத்துதல் முறையன்றென்பது பண்டையோர் கொள்கை; இதனை,
‘இனி, பொருட்பிணி யென்பது பொருளிலனாய்ப் பிரியுமென்ப தன்று; தன் முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருளெல்இலாம் கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்றெனத் தனது தாளாற்றலாந் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்தற்குப் பிரியுமென்பது; அல்லதூஉந் தேவர் காரியமும் பிதிரர் காரியமும் தனது தாளாற்றலாற் படைத்த பொருளாற் செய்தன தனக்குப் பயன்படுவன; என்னை? தாயப் பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார். ஆதலான்; அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியுமென்பது' (இறை. 35, உரை)
‘பொருள்வயிற் பிரிதலென்பது, குரவர்களாற் படைக்கப்பட்ட பொருள் கொண்டு இல்லறஞ் செய்தால் அதனாள் வரும் பயன் அவர்க்கு ஆம் அத்துணை யல்லது தமக்காகாமையால் தமது பொருள் கொண்டு இல்லறம் செய்தற்குப் பொருள் தேடப் பிரியாநிற்றல் (‘திருச்சிற். 332, உரை) என்பவற்றால் தெளியலாகும்.
தம் முயற்சி ஒன்று இன்றியே பெற்ற பொருளால் வாழ்தலினும்,இரத்தலாகிய சிறு முயற்சியேனும் செய்து பொருள் பெற்று வாழும் இரவு உயர்ந்ததாயிற்று. இல்லோர் - வறியவர் என்பதும் அமையும். சென்றனர் - சென்ற தலைவர் என வினையாலணையும் பெயராக்குதலும் ஒன்று. முடை - தசை; ஆகுபெயர் (அகநா. 3:9. உரை.)
வன்மை தெளியக் காட்டி என்றதனால் அவர் பிரிவின் காரணத்தை நன்கு அறிந்து ஆற்றினேன் என்பதும், பாலை வழியின் இயல்பைக் கூறியதனால் அவ்வழியின் ஏதமே ஆற்றாமைக்குக் காரணம் ஆவதென் பதும் புலப்படுத்தினாள்.
ஒப்புமைப் பகுதி 4. வாழி தோழி: குறுந். 260:4, ஒப்பு.
7. பருந்து முடை பார்த்திருத்தல்: "மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை ... ... ... புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை, கொள்ளை மாந்தரி னானாது கவரும்" (அகநா. 3:5-10.)படுமுடை: நற்.164:8.
5-7. ஆறலை கள்வர் செயல்: (குறுந். 274:3-4. 297:1-4, 331:1-3); "செங்கோல் வாளிக் கொடுவி லாடவர், வம்ப மாக்க ளுயிர்த் திறம் பெயர்த்தென", "இலைமாண் பகழிச் சிலைமா ணிரீஇய, அன்பி லாடவரலைத்தலிற் பலருடன், வம்பலர் தொலைந்த வருஞ்சுரக் கவலை" (நற். 164:6-7, 352:1-3); "அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாம்,கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர். துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலின்" (கலி. 4:3-5); "இறந்தோர், கைப்பொரு ளில்லை யாயினு மெய்க்கொண், டின்னுயிர் செகாஅர் விட்டதந் தப்பற்கு", "அம்புதொடை யமைதி காண்மார் வம்பலர், கலனில ராயினுங் கொன்று புள் ளூட்டும், கல்லா விளையர்" (அகநா. 109:10-12, 375:3-5)
மறவர் கொன்றமையாற் பட்டவர் தசையைப் பருந்து விரும்புதல்: "வடியாப் பித்தை வன்க ணாடவர். அடியமை பகழி யார வாங்கி,வம்பலர்ச் செகுத்த வஞ்சுவரு கவலைப், படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி, எருவைச் சேவல்", "வாங்குதொடை பிழையா வன்க ணாடவர், விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி, ஆறுசெல் வம்பல, ருயிர்செலப்,பெயர்பின்,பாறுனும், பயிர்ந்து படுமுடை கவரும்” (அகநா. 161:2- 6, 175:2-5); "செந்தொடை பிழையா வன்க ணாடவர், அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத், திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும்" (புறநா. 3:20-22.)
(283)