(தலைவன் பிரிந்த காலத்து, "தலைவர் நம்மைத் துறந்தார்; இனி வாரார்" என்று கவன்ற தலைவியை நோக்கி, "இதோ கார்ப் பருவம்வந்தது; இனி அவர் துறந்திரார்; வருவர்" என்று தோழி கூறியது.)
 287.    
அம்ம வாழி தோழி காதலர் ் 
    
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லேர் 
    
முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ் 
    
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் 
5
கடுஞ்சூன் மகளிர் போல நீர்கொண்டு ் 
    
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச் 
    
செழும்பல் குன்ற நோக்கிப் 
    
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே. 
    

என்பது பிரிவிடை வேறுபட்ட தலைவி (பி-ம். வேறுபட்ட கிழத்தி) நம்மைத் துறந்து வாரார் என்று கவன்றாட்குப் பருவம் காட்டித் தோழி, வருவரெனச் சொல்லியது.

கச்சிப்பேட்டு நன்னாகையார்.

     (பி-ம்.) 3. ‘முந்நாட் டிங்கள்’.

     (ப-ரை.) தோழி அம்ம - கேட்பாயாக; மு நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ - பன்னிரண்டு மாதம் நிறைந்த கருப்பத்தைத் தாங்கித் தளர்ந்து, ஒதுங்கல் செல்லா - நடக்க மாட்டாத, பசு புளி வேட்கை - பச்சைப் புளிச் சுவையில் விருப்பத்தை உடைய, கடு சூல் மகளிர் போல - முதற் சூலை உடைய மகளிரைப் போல, நீர் கொண்டு - நீரை முகந்து கொண்டு, விசும்பு இவர் கல்லாது - வானத்தின் கண் ஏறாமல், தாங்குபு புணரி - அந்நீர்ப் பொறையைத் தாங்கிக் கொண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து, செழு பல் குன்றம் நோக்கி - வளம் மிக்க பல மலைகளை நோக்கி, பெருகலி வானம் - பெரிய முழக்கத்தை உடைய மேகங்கள், ஏர் தரும் பொழுது - எழுகின்ற கார்ப் பருவத்தை, இன்னே கண்டும் - இப்பொழுது பார்த்த பின்பும், காதலர் - தலைவர், துறக்குவர் கொல்லோ - நம்மைப் பிரிந்து வாராமல் இருப்பாரோ? வருவர்.

     (முடிபு) தோழி, காதலர் பொழுது கண்டும் துறக்குவர் கொல்லோ?

     (கருத்து) கார்ப் பருவம் வந்தமையின் இனித் தலைவர் விரைவில் மீள்வர்.

     (வி-ரை.) துறக்குவர் - துறந்துறைவர் என்னும் பொருட்டு, கொல்: அசை நிலை; ஓ: வினா; எதிர்மறைப் பொருளது.

     மகளிர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருத்தலும் உண்டு;

  
“பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டவப் பாங்கினால் 
  
 என்னிளங் கொங்கை யமுத மூட்டி யெடுத்து யான் 
  
 பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின்பின் 
  
 என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினே னெல்லே பாவமே” (பெரியாழ். 3.2:8.) 

     நிறை - நிறைந்த கருப்பம். ஒதுங்கல் - நடத்தல்.

     வயாநோயுடையார் புளித்த சுவையை உடைய பொருள்களை விரும்புதல் இயல்பு; பசும்புளி - பச்சைப் புளியங்காய்;

  
“நீருறை கோழி நீலச் சேவல் 
  
 கூருகிர்ப் பேடை வயாஅ மூர 
  
 புளிங்காய் வேட்கைத் தன்றுநின் 
  
 மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே”      (ஐங். 51.) 

     கடுஞ்சூல் மகளிர் - முதற்சூல் கொண்ட மகளிர் (மதுரைக். 609, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.

     4. வயாநோயுற்றார் புளியை விரும்புதல்: “வயாவுநோய் நிலையாது, வளைகாய் விட்ட புளியருந் தாது” (கல். 7:5-6); “பொய்த் துயில் கொண்டு புளிக்கு முவந்தாள்” (பிரபு. மாயை உற்பத்தி. 27.)

     5. கடுஞ்சூல்: சிறுபாண். 148; பெரும்பாண். 395; கலி. 110:14.

(287)