(தலைவன் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக, “காமத்தின் இயல்பு அறியாத வன்கண்ணர் அதனைத் தாங்கி ஆற்ற வேண்டுமென்கின்றனர்” என்று தலைவி கூறியது.)
 290.   
காமந் தாங்குமதி யென்போர் தாமஃ 
    
தறியலர் கொல்லோ வனைமது கையர்கொல் 
    
யாமெங் காதலர்க் காணே மாயிற் 
    
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
5
கல்பொரு சிறுநுரை போல 
    
மெல்ல மெல்ல வில்லா குதுமே. 

என்பது வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது.

     (அழிவுற்று - நெஞ்சழிந்து; வருந்தி.)

கல்பொரு சிறுநுரையார்.

    (பி-ம்.) 2. ‘தறியுநர்கொல்லோ’, ‘வனைய மதுகையர்’, ‘வெனைமதுகையர்’; 6. ‘வில்லாகும்மே’.

    (ப-ரை.) காமம் தாங்குமதி என்போர் - காம நோயைப்பொறுத்து ஆற்றுவாயாக என்று வற்புறுத்துவோர், அஃதுஅறியலர் கொல் - அக் காமத்தின் தன்மையை அறிந்திலரோ?அனை மதுகையர் கொல் - அத்துணை வன்மை உடையவரோ? யாம்--, எம் காதலர் காணேம் ஆயின் - எம் தலைவரைக் காணேமானால், செறி துனி பெருகிய நெஞ்சமொடு -செறிந்த துயர் மிக்க நெஞ்சத்தோடு, பெருநீர் - மிக்க வெள்ளத்தில், கல்பொரு சிறுநுரை போல - பாறையின் மேல் மோதும்சிறிய நுரையைப் போல, மெல்ல மெல்ல இல் ஆகுதும் - மெல்ல மெல்ல இல்லையாவேம்.

     (முடிபு) காமம் தாங்குமதி என்போர், அஃது அறியலர் கொல்?மதுகையர் கொல்? யாம் காணேமாயின் இல்லாகுதும்.

     (கருத்து) தலைவரது பிரிவு நீட்டிப்பின் என் உயிர் நீங்கும்.

     (வி-ரை.) “காமத்தைத் தாங்கி ஆற்றி இருத்தல் வேண்டும் என்பார்அக் காமத்தின் இயல்பை அறியலர் போலும்! அதனை இரக்கம் உள்ளநெஞ்சினர் அறிதல் கூடும். அவர் வன்னெஞ்சராதலின் அறிந்திலர். தலைவர் பிரியும் இடத்து ஆற்றேமாதலுக்கே இங்ஙனம் கூறுகின்றனர். அவர் பிரிவு நீட்டிப்பின் மெல்ல மெல்ல உயிரை இழப்பேம்; அதன் தன்மை இவரால் அறிவரிதே ஆகும்” என்று தலைவி கூறினாள். அனைமதுகையர் கொல் - காமத்தைத் தாங்கும் அத்துணை வன்மை உடையரோ எனலும் பொருந்தும்.

     இது படர்க்கையிற் கூறினும் தோழியைக் கருதியதே ஆதலின் முன்னிலைப் புறமொழி.

     கற்பொரு சிறுநுரையெனற்பாலது எதுகை நோக்கிக் கல்பொருசிறுநுரை என நின்றது. நுரை கல்லில் மோதுந்தோறும் சிறிது சிறிதாகக்கரைதலைப் போலத் தலைவர் பிரிவை எண்ணுந்தோறும் உயிர் தேய்ந்தொழியும் என்க. இவ்வுவமையின் சிறப்பினால் இச் செய்யுள் இயற்றியநல்லிசைப் புலவர் ‘கல் பொரு சிறுநுரையார்’ என்னும் பெயர் பெற்றார்.

     இல்லாகுதல், “இல்லாகி” (குறள், 479.) மெல்ல மெல்ல இல்லாகுதல்சாக்காடென்னும் மெய்ப்பாடு.

    தாம், ஓ, ஏ: அசை நிலைகள்.

     மேற்கோளாட்சி மு. அறமும் பொருளும் செய்வதனால் புறத்து உறைதலால் தலைவனைத் தலைவி நீங்கும் காலம் பெரிதாகலின் அதற்குச் சுழற்சி மிக்க வேட்கை மிகுதி நிகழ்ந்த இடத்துத் தெருட்டும் தோழிக்குத் தலைவி கூறியது (தொல். கற்பு. 6, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. காமந் தாங்குதல்: குறுந். 241:1. 1-2. “யாங் கண்ணிற் காண நகுப வறிவில்லார், யாம்பட்ட தாம்படா வாறு” (குறள். 1140.)

     காமம் தாங்க மாட்டாமை: “பொறைநில்லா நோய்” (கலி. 3:4.)

     6. இல்லாகுதும்: “நாமில மாகுத லறிதும்” (நற். 299:6.)

     5-6. மெல்ல மெல்ல அழிதல்: “ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய, தேய்புரிப் பழங்காயிறு போல, வீவது கொல்லென் வருந்திய வுடம்பே” (நற். 284:9-11.)

    மு. குறுந். 152.

(290)