(தலைவன் பாங்கனுக்குத் தலைவி இவ்விடத்தினள், இவ்வியல்பினள் என்று கூறியது.)
 291.    
சுடுபுன மருங்கிற் கலித்த வேனற் 
    
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே 
    
இசையி னிசையா வின்பா ணித்தே 
    
கிளியவள் விளியென வெழலொல் லாவே 
5
அதுபுலந் தழுத கண்ணே சாரற் 
    
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை 
    
வண்டுபயில் பல்லிதழ் கலைஇத் 
    
தண்டுளிக் கேற்ற மலர்போன் றனவே. 

என்பது பாங்கற்கு உரைத்தது.

கபிலர்.

     (பி-ம்.) 1. ‘சுடும்புன மருங்கிற்’; 3. ‘இசைஇ யின்னிசையாய்’,‘விழவொல்லாவே’; 7. ‘பல்லிதழ்க் கலைஇய’; 8. ‘மலர் போன்றவ்வே’.

     (ப-ரை.) தோழ, சுடு புனம் மருங்கில் - மரங்களைவெட்டிச் சுட்ட கொல்லையில், கலித்த ஏனல் - தழைத்ததினையின் இடத்தே, படுகிளி கடியும் - வீழ்கின்ற கிளிகளைஓட்டுகின்ற, கொடிச்சி கை குளிர் - தலைவியினது கையின்கண் உள்ள குளிர் என்னும் கருவியானது, இசையின்இசையா - இசையோடு பொருந்தி, இன்பாணித்து - இனியதாளத்தை உடையது; அவள் விளி என - அக்குளிரின்ஓசையை அத் தலைவியின் பாட்டு என்று கருதி, கிளி -கிளிகள், எழல் ஒல்லா - தாம் படிந்த தினையினின்றும்எழுதலைப் பொருந்தா; அது புலந்து அழுதகண் - அதனைப்புலந்து அழுத அவளுடைய கண்கள், சாரல் - மலைப்பக்கத்திலே உள்ள, குண்டு நீர் பசு சுனை பூத்த குவளை -ஆழமாகிய நீரை உடைய பசிய சுனையின் இடத்தே பூத்த குவளையினது, வண்டு பயில் - வண்டுகள் பழகுகின்ற,பல் இதழ் கலைஇ - பல இதழ்கள் கலைந்து, தண் துளிக்குஏற்ற - தண்ணிய மழைத் துளியை ஏற்றுக் கொண்ட, மலர்போன்றன - மலர்களைப் போன்றன.

     (முடிபு) கொடிச்சியின் கைக்குளிர் இன்பாணித்து; கிளி எழலொல்லா;கண் மலர் போன்றன.

     (கருத்து) தலைவி தினைப்புனத்தில் காவல் செய்து கொண்டு இருக் கின்றாள்.

     (வி-ரை.) குளிர் - கிளிகடி கருவிகளுள் ஒன்று; தினைப்புனத்தில்கிளிகளை ஓட்டுவார் மூங்கிலை வீணை போல் கட்டித் தெறிக்கும் கருவிஎன்பர் தஞ்சைவாணன் கோவை உரையாசிரியர். இசையின் இசையாய்என்ற பாடத்திற்கு இசைகளுக்குள் சிறந்த இசையாகியெனப் பொருள்கொள்க.

     தலைவியினுடைய பாட்டென்று குளிரின் முழக்கத்தை நினைந்தகிளிகள் அவ்வொலியால் அச்சமுற்று நீங்காமல் அதில் மயங்கித் தினைப்பயிரில் விழுந்தன. தலைவியின் பாட்டில் மயங்கி அதை விரும்பியவை யாதலின், அவள் பாடிக் கொண்டே ஒலிப்பிக்கும் குளிரைத் தனித்து ஒலிப்பிக்கும் காலத்திலும் அவள் பாட்டென மயங்கின. தலைவியின்பாட்டைக் கேட்டுக் கிளிகள் தினைப்புனத்திலே எழாமல் இருத்தலை,

  
“சாந்த மெறிந்துழுத சாரற் சிறுதினைச் 
  
 சாந்த மெறிந்த விதண்மிசைச் - சாந்தம் 
  
 கமழக் கிளிகடியுங் கார்மயி லன்னாள் 
  
 இமிழக் கிளியெழா வார்த்து”         (திணைமாலை. 3) 

என்னும் செய்யுளாலும் அறியலாகும்.

     கிளி எழாமல் வீழ்வதனால், தான் செய்யும் தினைக்காவல் பயன்இன்றி ஒழிந்தது என்று தலைவி அழுதாள். குவளை மலர் போன்றகண்கள் அழுதமையால் நீர்த்துளிகளோடு கூடித் துளிக்கேற்ற மலர்போன்றன. துளிக்கு: உருபு மயக்கம்.

     ஒப்புமைப் பகுதி 1. மரங்களைச் சுட்ட இடத்தில் தினையை விளைத்தல்: குறுந். 198:1-2, ஒப்பு. 2. கொடிச்சி: குறுந். 272:8, ஒப்பு.

     1-2. ஏனலில் தலைவி கிளிகடிதல்: குறுந். 198:1-5.

    குளிராற் கிளி கடிதல்: “ஏனல், உண்கிளி கடியுங் கொடிச்சிகைக்குளிரே” (குறுந். 360:5-6); “குளிரும் பிறவும், கிளிகடி மரபின வூமூழ்வாங்கி” (குறிஞ்சிப். 43-4): “சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ, குளிர்படு கையள் கொடிச்சி” (நற். 306:2-3.)

     4. சீவக. 1498.

     6. குண்டு நீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை: குறுந். 59:2-3, ஒப்பு.

     5-8. நற். 379:5-9.

(291)