(பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியைநோக்கி, “தலைவன் ஈண்டுறைவது தெரியின் பரத்தை இங்கு வந்துஅவனைக் கொண்டு செல்வள்” என்று கூறியது.)
 293.    
கள்ளிற் கேளி ராத்திரை யுள்ளூர்ப் 
    
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் 
    
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் 
    
ஆதி யருமன் மூதூ ரன்ன 
5
அயவெள் ளாம்ப லம்பகை நெறித்தழை 
    
தித்திக் குறங்கி னூழ்மா றலைப்ப 
    
வருமே சேயிழை யந்திற் 
    
கொழுநற் காணிய வளியேன் யானே. 

என்பது பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்கத்தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கள்ளிலாத்திரையன்.

     (பி-ம்.) 1. ‘ரார்த்திய’; 2. ‘பள்ளை தந்த’, ‘வஞ்சியங்’; 5. ‘வயல்வெள்’; 7. ‘வருமோ’; 8. ‘கொழுநர்க்’.

     (ப-ரை.) தோழி, கள்ளில் கேளிர் ஆத்திரை -கள்ளைக்குடிக்கும் விருப்பத்தை உடையவர்களது பயணம், உள்ஊர் பாளை தந்த பஞ்சி அம் குறு காய் - ஊரினகத்துள்ளபாளையினால் ஈனப்பட்ட நாரையுடைய குறிய காய்களைக்கொண்ட, ஓங்கு இரு பெண்ணை நுங்கொடு பெயரும் -உயர்ந்த கரிய பனையினது நுங்கைக் கைக்கொண்டுமீள்வதற்கு இடமாகிய, ஆதி அருமன் முது ஊர் அன்ன -ஆதி அருமனுக்குரிய பழைய ஊரைப் போன்ற, அயம்வெள் ஆம்பல் அம் பகை நெறி தழை - நீரில் வளர்ந்தவெள்ளாம்பலினது அழகிய மாறுபட்ட முழு நெறியைஉடைய தழையுடை, தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப -தேமலை உடைய துடையின்கண் முறையே மாறி மாறிஅசைய, செ இழை - பொன்னால் செய்த செவ்வியஅணிகலன்களை உடைய பரத்தை, அந்தில்-அவ்விடத்திலே,கொழுநன் காணிய - தலைவனைக் காணும் பொருட்டு,வரும் - வருவாள்; யான் அளியேன் - நான் இரங்கத் தக்கேன்.

     (முடிபு) மூதூரன்ன சேயிழை, கொழுநற்காணிய, அலைப்ப வரும;யான் அளியேன்.

     (கருத்து) தலைவனை மீட்டும் பரத்தை கைக் கொள்வாள்.

     (வி-ரை.) கள்ளில் - கள்; கட்கடையுமாம், ஆத்திரை - யாத்திரை;“ஆத்திரை முன்னி” (பெருங். 1.36:221.)

     பஞ்சியென்றது நுங்கின் புறத்தே உள்ள நாரை; பன்னாடையுமாம். குறுங்காய் பெண்ணைக்கு அடை.

     அருமனது மூதூரை நக்கீரர்,

  
“கொடுங்கட் காக்கைக் கூர்வாய்ப் பேடை 
  
 நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து 
  
 கருங்கட் கருனைச் செந்நெல் வெண்சோறு 
  
 சூருடைப் பலியொடு கவரிய குறுங்காற் 
  
 கூழுடை நன்மனை குழுவின விருக்கும் 
  
 மூதி லருமன் பேரிசைச் சிறுகுடி”         (நற். 367:1-6) 

என்று சிறப்பிப்பர்.

     பனை மரத்தில் உள்ள கள்ளை உண்ணச் சென்றோர், அதனைஉண்ணுதலோடமையாது நுங்கைக் கைக்கொண்டு அப்பனைக்கு ஊறு புரிந்தாற்போலத் தலைவனைக் காண வருபவள் அவனைக் கைக் கொண்டு தலைவியை இழிவுபடுத்திச் செல்வாள் என்பது உவமையால் பெறப்படும் கருத்து.

     இது வாயில் மறுத்தது.

     கள் உண்பாரது செலவைக் கள்ளிலாத்திரை எனக் கூறிய இதனால்இச் செய்யுளை இயற்றிய புலவர் கள்ளிலாத்திரையன் என்னும் பெயர்பெற்றார் போலும்.

     மேற்கோளாட்சி 7-8. அந்திலென்னும் இடைச்சொல் இடஞ்சுட்டி வந்தது (தொல். இடை.19, இளம், சே, தெய்வச், ந; நன்.436. மயிலை, 437சங்கர.)

     ஒப்புமைப் பகுதி 1. ஆத்திரை: பெருங். 1.36:238, 255, 38:1, 139, 2. 9:251, 11:75, 15:9, 37,3. 1:105.

     1-3. பனங்கள்: “பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்” (பட். 89);“அரியற் பெண்டி ரல்கிற் கொண்ட, பகுவாய்ப் பாளைக் குவிகுலைச்சுரந்த, அரிநிறக் கலுழி யார மாந்தி” (அகநா. 157:1-3.)

     உள்ளூர்ப் பனை: “நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க, படுபனை யன்னர்” (நாலடி. 96.)

     5. அய ஆம்பல்: “குண்டுநீ ராம்பல்” (குறுந். 122:2.)

     பகைநெறித் தழை: “அம்பகை நெறித்தழை யணிபெறத் தைஇ” (நற். 96:8); “நெய்தலம் பகைத்தழை” (ஐங். 187:3); ஆம்பற் பூவாலான தழையுடை: “அளிய தாமே சிறுவெள் ளாம்பல், இளையமாகத் தழையா யினவே” (புறநா. 248:1-2); “ஆம்ப லணித்தழை” (திணை.ஐம்.40.)

     6. தித்திக் குறங்கு: அகநா. 385:10.

(293)