அஞ்சிலாந்தை. (பி-ம்.) 2. ‘தழூஉவணி’; 4. ‘மன்னே’; 5. ‘துத்திப்பாந்தட் பைனதக’;6. ‘துயவுக்கோட்’, ‘பசுங்கழைத்’.
(ப-ரை.) கடல் உடன் ஆடியும் - கடலிடத்தே ஒருங்கேநீர் விளையாட்டுப் புரிந்தும், கானல் அல்கியும் - கடற்கரைச்சோலையினிடத்தே தங்கியும், தொடலை ஆயமொடு -மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு, தழுவணி அயர்ந்தும் - குரவை கோத்து ஆடியும், நொதுமலர் போல -அயலாரைப் போல, கதுமென வந்து - விரைவாக வந்து,முயங்கினன் செலின் - தலைவன் தழுவிச் செல்வானாயின்,அலர்ந்தன்றுமன் - அலருண்டாயிற்று; அஃது இப்பொழுதுகழிந்தது. இப்பொழுது அங்ஙனம் செய்யாமல், தித்தி பரந்த -தேமல் படர்ந்த, பைத்து அகல் - விரிந்து அகன்ற, அல்குல் -அல்குலினது, திருந்து இழை துயல்வு கோடு அசைத்த -திருத்தமுறச் செய்த அணிகலன்கள் அசைதலையுடையபக்கத்தின்கண் கட்டிய, பசு குழை தழையினும் - பசியதளிராற் செய்த தழையைக் காட்டினும், உழையின் போகான்-மிக அணிமையிலிருந்து போகானாகி, அக்காரணத்தால்,யாய் காத்து ஓம்பல் - தாய் நம்மை இற்செறித்துக் காவல்செய்தலை, தான் தந்தனன் - தானே உண்டாக்கினன்.
(முடிபு) ஆடியும் அல்கியும் அயர்ந்தும் முயங்கினன் செலின்,அலர்ந்தன்று மன்; உழையிற் போகான், தான் ஓம்பலைத் தந்தனன்.
(கருத்து) தலைவனை யறிந்த தாய் நின்னை இற்செறிக்கக் கருதினாள்.
(வி-ரை.) இது சிறைப்புறம். பல மகளிரொடு கூடிக் கடலில்நீராடியும்,பொழிலில் விளையாடியும், குரவையாடியும் விளையாடும் காலத்தில்அயலானைப் போல வந்தால் அலருண்டாகும்; அவ்வலர் என் ஆருயிர்நிற்றற்குரிய துணையாகும் (குறள், 1141) என்றாள். அலர்ந்தன்று மனனேயென்னும் பாடத்திற்கு மனம் மகிழ்ச்சியால் மலர்ந்ததென்று பொருள்கொள்க. இழை - இங்கே மேகலை. கோடு - பக்கம்.
மேற்கோளாட்சி மு. பகற்குறிக்கண் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது. (தொல். களவு. 23, ந.)
ஒப்புமைப் பகுதி 1. கடலாடுதலும் கானலில் விளையாடுதலும் அப்போது தலைவன் வருதலும்: “கடலாடு மகளிர் கான லிழைத்த, சிறுமனைப் புணர்ந்த நட்பே” (குறுந். 326:2-3.)
5. தித்தி பரந்த அல்குல்: குறுந். 27:5, ஒப்பு.
5-6. அல்குற்கோடு: “கோடேந் தல்குல்” (நற். 282:2.)
6-7. தழையுடுத்தல்: குறுந். 125:3, ஒப்பு.
(294)