காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன். (பி-ம்.) 3. ‘மாறுநின் றெதிர்ந்த’.
(ப-ரை.) அ விளிம்பு உரீஇய கொடுசிலை மறவர் -மேல் விளிம்பை உருவிய கொடிய வில்லையுடைய மறச்சாதியாருடைய, வைவார் வாளி விறல் பகை பேணார் -கூர்மையையுடைய நீண்ட அம்பினது வெற்றியையுடையபகையினின்றும் தம்மைப் பாதுகாவாராகி, மாறு நின்றுஇறந்த ஆறு செல் வம்பலர் - எதிரே நின்று இறந்து பட்டவழிப்போவார் மீது, உவல் இடு பதுக்கை - தழையைஇட்டுவைத்த குவியல்கள், ஊரின் தோன்றும் - ஊரைப்போலத் தோன்றுகின்ற, கல் உயர் நனதலை - மலைகள்ஓங்கியுயர்ந்த அகன்ற இடத்தில், நல்ல கூறி - ஆண்டுப்போய்வரைவேமென்பது முதலிய நல்ல சொற்களைக் கூறி,புணர்ந்து உடன் போதல் - தலைவனோடு சேர்ந்துபோதலே, பொருள் என - செய்யத்தக்க காரிய மென்று,அவர் உணரா ஊங்கு - தலைவர் உணர்வதற்கு முன்னர்,மன்ற - நிச்சயமாக, உணர்ந்தேன் - யான் உணர்ந்தேன்.
(முடிபு) நனந்தலை, கூறிப்போதல் பொருளென அவர் உணராவூங்கே உணர்ந்தேன்.
(கருத்து) தலைவனுடன் சென்று நீ மணத்தலே நன்று.
(வி-ரை.) இது, தலைவனது வரைவிற்குத் தலைவியின் தமர் உடம்படாரென்பது உணர்ந்த தோழி வெளியிட்டது. தலைவனும் இதுவேகூறுவானாதலின் இதனை முன்பே யான் உணர்ந்து நினக்கு அறிவித்தேனென்றாள்.
நல்ல கூறி யென்பது, இனி ஆண்டுச்சென்று வரைவே னென்றமங்கலச் சொற்களைக் கூறியெனப் பொருள்பட்டு, வரைவு மலிந்ததாயிற்று,கொடுப்போரின்றியும் கரணம் நிகழ்தலுண்டாதலின்.
அவ்விளிம்பு: அகரச்சுட்டு மேல்விளிம்பைக் குறித்தது.
பாலை நிலத்திலுள்ள மறவர் தம் சிலைவிளிம்பை உருவி நாணேற்றி அம்பு தொடுப்பார்;
| “வீங்குவிளிம் புரீஇய விசையமை நோன்சிலை |
| வாங்குதொடை பிழையா வன்க ணாடவர் |
| விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி |
| ஆறுசெல் வம்பல ருயிர்செலப் பெயர்ப்பின்”. |
| “அவ்விளிம் புரீஇய விசையமை நோன்சிலைச் |
| செவ்வாய்ப் பகழிச் செயிர்நோக் காடவர் கணையிட” |
| (அகநா. 175:1-4, 371:1-3) |
வம்பலர் உயிர் கவர்தலின் கொடிய வில்லாயிற்று; வளைந்தவில்லுமாம். வாளியாகிய பகையென்க. பொருள் - மேற்கொள்ளத்தக்ககாரியம்.
ஒப்புமைப் பகுதி 1-3, மறவர் செயல்: குறுந். 283:5-7, ஒப்பு.
3. ஆறு செல்வம்பலர்: குறுந். 331:2, 350:6.
3-4. வம்பலர்மேல் உவலிடு பதுக்கை: (குறுந். 77:3, ஒப்பு.); “செருவேட்டுச் சிலைக்குஞ் செங்க ணாடவர், வில்லிட வீழ்ந்தோர்பதுக்கை” (அகநா. 157:4-5.)
5. நனந்தலை: குறுந். 272:3.
(297)