(தலைவன் மடலேறத் துணிந்ததைத் தோழி தலைவிக்கு உணர்த்தியது.)
 298.    
சேரி சேர மெல்ல வந்துவந் 
    
தரிது வாய்விட் டினிய கூறி 
    
வைக றோறு நிறம்பெயர்ந் துறையுமவன் 
    
பைத னோக்க நினையாய் தோழி 
5
இன்கடுங் கள்ளி னகுதை பின்றை 
    
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர் 
    
மடப்பிடிப் பரிசின் மானப் 
    
பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே. 

என்பது கிழத்திக்குத் தோழி குறைமறாமற் கூறியது.

பரணர்.

     (பி-ம்.) 4. ‘மைய னோக்க’; 5. ‘இன்கடுங் களிற்றின்’, ‘னஃகுதை’,‘னகுதைதந்தை’; 7. ‘யானந்’; 8. ‘குறித்தவ’.

     (ப-ரை.) தோழி , சேரி சேர - நம்முடைய தெருவின்கண் அடைய, மெல்ல வந்து வந்து , அரிது வாய்விட்டு -அருமையின் வாய்திறந்து, இனிய கூறி - நம் சிந்தைக்குஇனியவற்றைக் கூறி, வைகல் தோறும் - நாள்தோறும்,நிறம் பெயர்ந்து உறையும் அவன் - தான் நினைத்ததொன்றுகைகூடாமையின் ஒளிமாறித் தங்குகின்ற அத்தலைவனது,பைதல் நோக்கம் - துன்பத்தைப் புலப்படுத்தும் பார்வையை, நினையாய் - நினைத்துக் காண்பாயாக; அவன் நெடுபுறம் நிலை - அவன் நீண்ட நேரம் இங்ஙனம் என் பின்நிற்றல், இன் கடு கள்ளின் - இனிய கடுமையையுடைய கள்ளையுடைய, அகுதை பின்றை - அகுதைக்குப் பின்நின்ற, வெள் கடை சிறு கோல் அகவல் மகளிர் - வெள்ளியமுனையையுடைய சிறிய கோலைக் கொண்ட அகவன்மகளிர் பெறும், மடம் பிடி பரிசில் மான - மடப்பம்பொருந்திய பிடியாகிய பரிசிலைப் போல, பிறிது ஒன்று குறித்தது - நம்மைக் கண்டு இனிய கூறுதலேயன்றி வேறுஒன்றைக் கருதியதாயிற்று.

     (முடிபு) தோழி, சேரி சேர வந்து வாய்விட்டுக் கூறிப் பெயர்ந்துஉறையும் அவன் நோக்கம் நினையாய்; அவன் நிலை பரிசில் மானப்பிறிதொன்று குறித்தது.

     (கருத்து) தலைவன் மடலேற நினைந்தான்.

     (வி-ரை.) இனிய கூறுதலாவது, ‘நீவிர் வேண்டும் குறை முடித்துத்தருவேன்’ என்றல். தலைவன் தன்குறையை வாய்விட்டுக் கூறாதுவருந்துதல்,

  
“கயமல ருண்கண்ணாய் காணா யொருவன் 
  
 வயமா னடித்தேர்வான் போலத் தொடைமாண்ட 
  
 கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு 
  
 முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற 
  
 நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும்”         (கலி. 37:1-5) 

என்பதிலும் காணப்படும்.

     நினையாயென்றது, நினைந்து அவன் குறை தீர்க்க வேண்டுமென்னும்பொருட்டு.

     இன் கடுங்கள் - உண்ணற்கினிமையும், மயக்கந் தருதலிற் கடுமையும் உடைய கள். அகவன் மகளிர்: குறுந். 23 - ஆம் செய்யுளைப் பார்க்க. வெண் கடை - வெள்ளிய நுனி; என்றது வெள்ளியாற் செய்த பூண்கட்டிய நுனியை.

     அகுதை: மதுரையிலிருந்த ஓர் உபகாரி.

     தலைமகள் குறை மறாதபடி கூறுவதாதலின், பிறிதென்றது இங்கேமடலேறுதலைக் குறித்தது. புறநிலை - பின்னிற்றல்; வழிபட்டு நிற்றல்;
  
“என்குறைப் புறனிலை முயலும்  
  
 அண்க ணாளனை நகுகம் யாமே”          (அகநா. 32:20-21)  

என்பதன் உரையைப் பார்க்க.

     ஒப்புமைப் பகுதி 3: கம்ப. கடல்காண். 6.

     4. பைதல் நோக்கம்: அகநா. 38:15.

     3-4. குறை வேண்டிய தலைவன் மெலிதல்: குறுந். 74:5.

     5. இன்கடுங்கள்: குறுந். 330:5; நற்.10:5; அகநா. 137:6; புறநா. 80:1.

     இன்கடுங்கள்ளின் அகுதை: அகநா. 76:3.

     6. அகவன் மகளிர்: குறுந். 23:1.

     அகவன் மகளிர் கோல் உடையராதல்: “நுணங்குகட் சிறுகோல்வணங்கிறை மகளிரொ, டகவுநர்”, “நுண்கோ லகவுநர்” (அகநா. 97:10-11, 152:4, 208:3.)

     5-7. அகுதை யானை வழங்குதல்: அகநா. 113:4; புறநா. 233:2-3.

     8. நெடும்புற நிலை: அகநா. 58:14, 220:11.

     புறநிலை: நற். 306:11.

(298)