(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் ஆற்றாளெனக்கவன்ற தோழிக்குத் தலைவி ஆற்றாமையின் காரணத்தைக் கூறியது.)
 302.    
உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே 
    
அருந்துய ருழத்தலு மாற்றா மதன்றலைப் 
    
பெரும்பிறி தாக லதனினு மஞ்சுதும் 
    
அன்னோ வின்னு நன்மலை நாடன் 
5
பிரியா நண்பின ரிருவரு மென்னும் 
    
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன் 
    
துஞ்சூர் யாமத் தானுமென் 
    
நெஞ்சத் தல்லது வரவறி யானே. 

என்பது வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.

மாங்குடி கிழார்.

     (பி-ம்.) 4. ‘அன்னோ பின்னும்’; 5. ‘நண்பி னிருவரும்’, ‘வன்பினரிருவரும்’; 8. ‘ரவறி யோனே’.

     (ப-ரை.) தோழி--, அரு துயர் உழத்தலும் ஆற்றாம் -தலைவனுடைய பிரிவால் உண்டாகிய பொறுத்தற்கரியதுயரால் வருந்துதற்கும் ஆற்றலில்லேம்; அதன் தலை -அதற்கு மேல், பெரும் பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் -இறந்துபடுதலை அதைக் காட்டிலும் அஞ்சுகின்றோம்;அன்னோ - அந்தோ! இன்னும்--, நன்மலை நாடன் -நல்ல மலைநாட்டை யுடைய தலைவன், இருவரும் பிரியாநண்பினர் என்னும் - இருவரும் என்றும் பிரியாத நட்பையுடையார் என்று பிறர் கூறும், அலரதற்கு அஞ்சினன்கொல் - பழிமொழிக்கு அஞ்சினனோ? பலர் உடன் துஞ்சுஊர்யாமத்தானும் - ஊரிலுள்ளோர் பலர் ஒருங்கே துயிலுகின்றஇரவிலும், என் நெஞ்சத்து அல்லது - யான் தன்னையேநினைப்பதனால் என் நெஞ்சின் கண் வருதலை யன்றி,வரவு அறியான் - நேரிலே வருதலை அறியான்; அதுபுரைத்தோ - அங்ஙனம் இருத்தல் உயர்வுடையதோ?அன்று--; உரைத்திசின் - நீ கூறுவாயாக.

     (முடிபு) தோழி, உழத்தலும் ஆற்றாம்; பெரும்பிறிதாகல் அதனினும்அஞ்சுதும்; நாடன் அஞ்சினன் கொல்? வரவறியான்; அது புரைத்தோ?அன்று; உரைத்திசின்.

     (கருத்து) தலைவனை நான் நினைந்திருத்தலையன்றி, அவன்வந்தானல்லன்.

     (வி-ரை.) ‘தலைவனைப் பிரிந்திருக்கும் கொடுமையை ஆற்றோம்;ஆற்றாது ஈண்டிருத்தலினும் இறந்துபடுதல் நன்றெனினோ, அதுவும்அஞ்சுதற் குரியது. ஊரினர் அலர் கூறுதற்கு அஞ்சித் தலைவன்வந்திலனோ? அங்ஙனம் கூறப்படும் அலர்தான் என் உயிர் செல்லாமற்காப்பதும் அவனுக்கு உரிமையாக்குவதுமாதலின் அதற்கு அஞ்சுதல்உயர்வன்று’ என்று தலைவி கூறினாள்.

     இறத்தற்கு அஞ்சினள் ‘அவன் வாராதொழியான்’ என்ற துணிவினால்; “வாரா தொழியா னெனும்வண் மையினால், ஓரா யிரகோ டியிடர்க் குடையேன்” (கம்ப. உருக்காட்டு. 6.) அலர் தம்மிடையே உள்ள நட்பை உறுதிப் படுத்துவதாக இருப்ப, அதற்கு அஞ்சுதல் முரணாதலின் புரைத்தோ வன்றே யென்றாள்.

     மேற்கோளாட்சி மு. வரைவிடைக் கவன்ற தோழிக்குத் தலைவி கூறியது (தொல். களவு. 21. ந. மேற்.)

     ஒப்புமைப் பகுதி மு. “உரைத்திசிற்.. .. .. .. .. உயிரே” (தொல். களவு. 12, ந. மேற்.)

     2. அதன்றலை: குறுந். 366:3.

     3. பெரும்பிறிது: குறுந். 69:1, ஒப்பு.

     7. ஊரினர் யாமத்தில் துஞ்சுதல்: குறுந். 28: 5, 32:2, ஒப்பு. கலி. 65.3.

     துஞ்சூர் யாமம்: ஐங். 13:4; அகநா. 198:11, 360:12.

     7-8. தலைவன் தலைவியின் நெஞ்சத்து வருதல்: “தந்நெஞ்சத்தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல், எந்நெஞ்சத் தோவா வரல்”(குறள், 1205.)

(302)