கடம்பனூர்ச் சாண்டிலியன் (பி-ம். சாண்டலியன்.) (பி-ம்) 3. ‘யந் நோய்’; 6. ‘யாஅத் துலையக்’.
(ப-ரை.) தோழி, பிறை--, வளை உடைத்தனையதுஆகி - வளையையுடைத்தாற் போன்றதாகி, பலர்தொழ-கன்னி மகளிர் பலரும் தொழும்படி, செ வாய் வானத்து -செவ்விய இடத்தையுடைய ஆகாயத்தின் கண், ஐ எனதோன்றி - விரைவாகத் தோன்றி, இன்னம் பிறந்தன்று -இன்னும் பிறந்தது; களிறு - ஆண்யானை, தன் உயங்குநடை மடம் பிடி வருத்தம் - வருந்திய நடையையுடையதனது மடப்பத்தையுடைய பிடியினது வருத்தத்தை,நோனாது - பொறாமல், நிலை உயர் - உயர்ந்த நிலையையுடைய, யாஅம் தொலைய குத்தி - யாமரம் அழியும்படிகொம்பாற் குத்தி, வெள் நார் கொண்டு - பசையற்ற வெள்ளியபட்டையைக் கைக்கொண்டு, கை சுவைத்து - வறுங்கையைச்சுவைத்து, அண்ணாந்து - மேல் நோக்கி, அழுங்கல் நெஞ்சமொடு - தன் பிடியின் வருத்தத்தைப் போக்க இயலாமையைநினைந்து வருந்துதலையுடைய நெஞ்சோடு, முழங்கும் -பிளிறுகின்ற, அத்தம் நீள் இடை - அரிய வழியையுடையநீண்ட இடத்து, அழ பிரிந்தோர் - நாம் அழும்படி நம்மைப்பிரிந்து சென்ற தலைவர், அன்னோ - அந்தோ, மறந்தனர்கொல் - நம்மை மறந்தனரோ?
(முடிபு) பிறை இன்னம் பிறந்தன்று; அழப் பிரிந்தோர் மறந்தனர்கொல்?
(கருத்து) தலைவர் என்னை மறந்தனர் போலும்.
(வி-ரை.) பலர் தொழ - கன்னிமகளிரும் பிறருமாகிய பலர் தொழவெனலும் பொருந்தும். செவ்வாய் வானம் - செவ்வானம். ஐயென -விரைய (சீவக. 448, ந.) இன்னம் பிறை பிறந்ததென்றது, ‘தலைவன் என்னைப் பிரிந்திருக்குங் காலத்திலும் எனக்குத் துன்பத்தைத் தரும்பொருட்டுப் பிறந்தது’ என்னும் நினைவிற்று. வெண்ணாரென்பது உலர்ந்தபட்டையை; ஆதலின் கை சுவைத்தது.
பெண்யானையின் வருத்தத்தை நீக்க முயலும் ஆண்யானையைத்தாம் செல்லும் வழியிலே கண்டும், எனது வருத்தத்தை நீக்க முயன்றிலரென்பது தலைவியின் கருத்து. தாம் : அசைநிலை.
ஒப்புமைப் பகுதி 1. உடைந்த வளைக்குப் பிறை: “புலவியி லுடைந்த சங்கம் புரிசடைத் திங்கட் கீற்றின், மலைவற விணைக்கு மேல்வை” (கூர்ம. கடவுள். 2); “ஊடலினுடைந்த சங்க மொளிர்சடைப் பிறைவெண் கீற்றின், மாடுறப் பொருத்தும் போழ்து” (திருச்செந்தூர்த் தலபுராணம், கடவுள். 2); குமரகுருபர. 528.
2. ஐயென: அகநா. 305:2; சீவக. 907, 983, 1040, 1205, 2225.
1-3. பிறையைப் பலர் தொழுதல்: (குறுந். 178:5, ஒப்பு.):“தொன்றுதொழு பிறையின்” (மதுரைக். 193.)
7. வெண்ணார்: அகநா. 83:6.
4-7. யானை யாமரத்தின் பட்டையை உரித்துப் பிடிக்குத் தருதல்: குறுந். 37:2-4, ஒப்பு.
யானை யாமரப் பட்டையைச் சுவைத்தல்: “கவைமுறியாஅத்து,நாரரை மருங்கி னீர்வரப் பொளித்துக், களிறுசுவைத் திட்ட கோதுடைத்ததரல்” (அகநா. 257:14-7.)
9. தலைவனது பிரிவால் தலைவி அழுதல்: குறுந். 82:2, ஒப்பு.); “நாமழத் துறந்தன ராயினும்” (அகநா. 205:7.)
(307)