உறையூர்ச் சல்லியன் குமாரன். (பி-ம்) 2. வாசங் கீழ்ப்ப; 3. நடன வரம்பின் வாடி விடினும், வாடவிடினும்; 7. கின்னா கியபல , 8. வல்லா மாற்றே.
(ப-ரை.) பெரும - தலைவ, நீ எமக்கு இன்னாதனபல செய்யினும் - இன்னாதனவாகிய பல செயல்களைச்செய்தாலும், நின் இன்று அமைதல் வல்லாமாறு - நின்னைஇன்றிப் பொருந்துதற்கு வன்மையில்லாமையின், யாம், கைவினை மாக்கள் - தொழில் புரியும் உழவர், தம் செய்வினை முடிமார் - தமது செய்தொழிலை முடிப்பாராகி,சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்பட - வண்டு உண்ணும்படிமலர்ந்த மலரின் மணம் கீழே படும்படி, நீடின வரம்பின்வாடிய விடினும் - நீண்ட வரப்பிலே வாடும்படி விட்டாலும், கொடியர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது - இவர்கொடியர்; இந்நிலத்தை நீங்கித் தங்குவே மென்றெண்ணாமல், பெயர்த்தும் கடிந்த செறுவில் - மீட்டும் தம்மைநீக்கிய வயலினிடத்தே, பூக்கும் - மலர்கின்ற, நின் ஊர்நெய்தல் அனையேம் - நின் ஊரின்கண் உள்ள நெய்தலைப்போன்ற தன்மையையுடையே மாயினேம்.
(முடிபு) பெரும, நீ எமக்கு இன்னாதன செய்யினும், வல்லாமாறுநெய்தல் அனையேம்.
(கருத்து) நின்னையின்றி அமைந்திருத்தல் எமக்கு இயலாமையின்நீ இன்னாதன செய்யினும் நின்னை ஏற்றுக் கொள்வேம்.
(வி-ரை.) கைவினை மாக்க ளென்றது இங்கே உழவர்களை.செய்வினை-உழவு. அது முடித்தற்குக் களைபறித்தனர். நெய்தற்கிழங்குசெறுவில் இருத்தலின் அது மீட்டும் பூத்தது.
நெய்தல் தனக்கு இன்னாசெய்த உழவரது செறுவில் மீட்டும்பூத்ததைப் போல எமக்கு இன்னாசெய்த நின்பால் மீட்டும் அன்புடையேமாயினே மென்று உவமையை விரித்துக்கொள்க.
கொடியாரோ: ஓ, அசை நிலை; இரங்கற்குறிப்புமாம். இன்னாதனபல வென்றது, பரத்தையரோடு சென்று நீராடியது முதலிய செயல்களை.
வல்லாமாறு - வன்மையில்லாத காரணத்தினால்; மாறு : ஏதுப்பொருள் தருவதோர் இடைச்சொல் (புறநா. 4:17, உரை.)
ஒப்புமைப் பகுதி 1-3. களை பறிப்போர் அக்களையை வரம்பின்மேல் எறிதல்; “குறுந ரிட்ட குவளையம் போதொடு - களைபறிப்பார் வரம்பிலிட்ட குவளைப் பூவுடனே”
(சிலப். 10:86, அடியார்.); “கடுங்கை வயலுழவர் காலைத் தடிய, மடங்கி யரியுண்ட நீலம் - தடஞ்சேரா, நீளரிமேற் கண்படுக்கும்”
(தண்டி. 24, மேற்.); “கடைசியர் களைதரு நீலம், செய்வரம் பரும்பு”
(திருவிசைப்பா, கருவூர்த்தேவர், கோயில், 2); “கெட்ட சிறுமருங்கிற் கீழ்மகளிர் நீள்வரம்பி, லிட்ட பசுங்குவளை”
(நள. சுயம்வர. 67; கம்ப. நாடு. 10, அகலிகை. 65.) 5-6. நெய்தல் செறுவிற்பூத்தல்; “நீர்ச்செறுவி னீணெய்தற், பூ” (பட். 11-2); “வண்டுமூசு நெய்த னெல்லிடை மலரும், அரியலங்கழனி” (நற். 190:5-6.)
நெய்தற் களை: ‘‘நெல்லரி தொழுவர் கூர்வா ளுற்றெனப், பல்லிதழ்தயங்கிய கூம்பா நெய்தல்’’ (நற். 195:6-7) ;“தண்ணறு நெய்தற்றளையவிழ்வான்பூ, வெண்ணெ லரிநர் மாற்றின ரறுக்கும்” (ஐங். 190:1-2.)
7. தலைவன் இன்னாதன செய்தல்: குறுந். 288:3-4, 397:6.
8. தலைவனது இன்றியமையாமை; “நீரின் றமையா வுலகம் போலத், தம்மின் றமையா நந்நயந் தருளி”, “தம்மல தில்லா நந்நயந்தருளி” (நற். 1:6- 7, 189:1); “நின்னல தில்லா விவள்” (ஐங். 179:4); “நின்னின்றிமைப்புவரை வாழாண் மடவோள்” (கலி. 21:12-3.)
6-8. தலைவன் இன்னா செயினும் தலைவி அவனை விரும்புதல்:(குறுந். 397:4-7); “நல்கா யாயினு நயனில செய்யினும், நின்வழிப்படூஉமென் றோழி” (நற். 247:6-7); “இடர்களையா ரேனு மெமக்கிரங்காரேனும், படரு நெறிபணியா ரேனும் - சுடருருவில், என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க், கன்பறா தென்னெஞ் சவர்க்கு” (காரைக் காலம்மையார் அற்புதத் திருவந்தாதி, 2.); “கண்டா ரிகழ்வனவேகாதலன்றான் செய்திடினும், கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல்” (பெருமாள் திருமொழி.)
(309)