(“இரவில் தலைவன் ஈண்டு வந்து செல்வதை ஆயத்தார் யாவரும்அறிந்தனர்; அதனால் அலர் பெருகியது” என்று தலைவி, தலைவன்சிறைப்புறத்தில் இருப்பத் தோழிக்குச் சொல்லியது.)
 311.    
அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்  
    
புலவுநா றகன்றுறை வலவன் றாங்கவும்  
    
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்  
    
யான்கண் டன்னோ விலனோ பானாள்  
5
ஓங்கல் வெண்மணற் றாழ்ந்த புன்னைத்  
    
தாதுசேர் நிகர்மலர் கொய்யும் 
    
ஆய மெல்லா முடன்கண் டன்றே.  

என்பது அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப் புறத்தானாகத்தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

    (பி-ம். சொற்றது.)

சேந்தன்கீரன்.

     (பி-ம்.) 1. ‘அலர்யாங் கொல்வ’; 4. ‘கண்டன்றோவிலனே’.

     (ப-ரை.) தோழி--, பெரு கடல் - பெரிய கடலினது,புலவு நாறு அகல் துறை - புலால் நாற்றம் வீசும் அகன்றதுறையின் கண்ணே, வலவன் தாங்கவும் - பாகன் தடுக்கவும்,நில்லாது கழிந்த - நில்லாமற் சென்ற, கல் என் கடு தேர் -கல்லென ஆரவாரம் செய்யும் விரைந்த தலைவனது தேரை,யான் கண்டனனோ இலனோ - யான் கண்டேனோ இல்லையோ, பால் நாள் - நடு இரவின் கண், ஓங்கல் வெள்மணல் தாழ்ந்த புன்னை - உயர்ச்சியையுடைய வெள்ளியமணலினிடத்துத் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரத்தினது,தாது சேர் நிகர் மலர்கொய்யும் - மகரந்தம் சேர்ந்த ஒளியையுடைய மலர்களைப் பறிக்கும், ஆயம் எல்லாம் உடன்கண்டன்று - மகளிர் கூட்டமெல்லாம் ஒருங்கே கண்டது;இங்ஙனமாக, யாங்கு அலர் ஒழிவ - எவ்வாறு பழிமொழிஒழிவனவாகும்.

     (முடிபு) தோழி, தேர் யான் கண்டனனோ இலனோ, ஆயமெல்லாம்கண்டன்று; அலர் யாங்கு ஒழிவ?

     (கருத்து) தலைவன் வந்து செல்வதை யாவரும் அறிந்து பழிமொழிகூறுகின்றனர்.

     (வி-ரை.) தாங்குதல் - வேகமாகச் செல்லுதலைத் தடுத்தல்; “நிமிர்பரிய மாதாங்கவும்” (புறநா.14.7.) வேகத்தினால் தேர் கல்லென்னும்முழக்கத்தையுடைய தாயிற்று. ஓங்கல் வெண் மணல் - மணல்மேடு;மணற்குன்றென்பர். புன்னைத் தாதுசேர் நிகர் மலர் கொய்யுமென்றதுஆயத்தினர் இயல்பைக் கூறியபடி. நிகர் மலர் - ஒளியையுடைய மலர்.

     இதனால் தலைவி தலைவனுக்கு அலர் மிகுதியைப் புலப்படுத்திவரைந்து கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்தி னாளாயிற்று.

     மேற்கோளாட்சி மு. அலர் பார்த்துற்ற அச்சக்கிளவி (நம்பி. 164.)

     ஒப்புமைப் பகுதி 3. கடுந்தேர்: குறுந். 45:1.

     2-3. தேரை வலவன் தடுத்து ஓட்டுதல்: “வலவன், வள்புவலித்தூரி னல்லது முள்ளுறின், முந்நீர் மண்டில மாதி யாற்றா, நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்”, “நுண்ணயிர் பரந்த தண்ணய மருங்கின், நிரைபறை யன்னத் தன்ன விரைபரிப், புல்லுளைக் கலிமா மெல்லிதிற் கொளீஇ, வள்பொருங் கமையப் பற்றி மூழ்கிய, பல்கதி ராழி மெல்வழி யறுப்பக், காலென மருள வேறி நூலியற், கண்ணோக் கொழிக்கும் பண்ணமை நெடுந்தேர், வல்விரைந் தூர்தி நல்வலம் பெறுந” (அகநா. 104:3-4, 234:2-9.)

     3-4. பானாள்: குறுந். 94:3, ஒப்பு.

     3-4. பானாளில் தலைவன் தேர் வருதல்: குறுந். 301:4-6.

     5. ஓங்கல் வெண் மணல்: குறுந். 236:3, ஒப்பு.

     மணற்குன்றிற் புன்னை: “குன்றத் தன்ன குவவுமண லடைகரை,நின்ற புன்னை” (குறுந். 236:3-4.)

     6. நிகர்மலர்: குறுந். 329:6; அகநா; 11:12. சிலப். 9:12; மணி. 3:15.

(311)