கபிலர். (பி-ம்.) 1. ‘களவினங்’; 2. ‘களவினள்’; 3. ‘நண்ணுறவந்து’; 4. ‘அன்னோள்’; 7. ‘முகத்தாளாகி’.
(ப-ரை.) நெஞ்சே, நம் காதலோள் - நம் தலைவி,இரண்டு அறி கள்வி - இரு வேறுபட்ட ஒழுகலாற்றைஅறிந்த கள்ளத் தன்மையை யுடையாள், நள்ளென் கங்குல் -செறிந்த இருளையுடைய இரவில், முரண் கொள் துப்பின் -மாறுபாட்டைக் கொண்ட வலியையுடைய, செ வேல்மலையன்- சிவந்த வேலையுடைய மலையனது, முள்ளூர்கானம் நாற வந்து - முள்ளூர் மலைக்காட்டிலுள்ளநறுமணத்தைப் போன்ற மணம் வீசும்படி வந்து, நம்ஓரன்னள் - நம்மோடு ஒத்தவளாயினள்; வைகறையான் -விடியற் காலத்தில், கூந்தல் வேய்ந்த - யான் தனது கூந்தலில் அணிந்த, விரவு மலர் உதிர்த்து - பலவாகக் கலந்தமலர்களை உதிர்த்துவிட்டு, சாந்து உளர் நறு கதுப்புஎண்ணெய் நீவி - மயிர்ச் சாந்தையிட்டுக் கோதிய நறியகூந்தலில் எண்ணெயைத் தடவி, அமரா முகத்தள் ஆகி -பொருந்தாத முகத்தையு டையவளாகி, தமர் ஓரன்னள் -தன் தமரோடு ஒத்தவளாயினள்.
(முடிபு) நம் காதலோள் இரண்டறி கள்வி; நள்ளென் கங்குல் வந்துநம்மோரன்னள்; வைகறையான், உதிர்த்து நீவி ஆகித் தமரோ ரன்னள்.
(கருத்து) தலைவி நம்முடைய தொடர்பை அயலார் அறியா வண்ணம் கரந்து ஒழுகுகின்றாள்.
(வி-ரை.) துப்பு - துணைவலி. செவ்வேல் - இரத்தத்தாற் சிவந்தவேல். மலையன் - மலையமான் திருமுடிக்காரி யென்னும் வள்ளல்;இவனைத் தேர்வண் மலையனென்பர்.
மலையன், மன்னர்களுள் யாருக்குத் துணையாகச் செல்வானோஅம்மன்னன் போரில் வெற்றி பெறுவான்; ஆதலின் அவன் ‘முரண்கொள்துப்பின் மலையன்’ எனச் சிறப்பிக்கப்பட்டான்; அவனைச் சேர சோழபாண்டியர்கள் தமக்குத் துப்பாக வேண்டுமென்று இரப்பார்கள்;
| “வீயாத் திருவின் விறல்கெழு தானை |
| மூவரு ளொருவன் றுப்பா கியரென |
| ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி |
| வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே” (புறநா. 122:4-7.) |
சேரமான் மாந்தரஞ் சேர லிரும்பொறையும், சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடிய செய்யுளில்,
| “குன்றத் தன்ன களிறு பெயரக் |
| கடந்தட்டு வென்றோனு நிற்கூ றும்மே |
| வெலீஇயோ னிவனெனக் |
| கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு |
| விரைந்துவந்து சமந்தாங்கிய |
| வல்வேன் மலைய னல்ல னாயின் |
| நல்லமர் கடத்த லெளிதும னமக்கெனத் |
| தோற்றோன் றானு நிற்கூ றும்மே” (புறநா. 125) |
என்று, மலையன் துப்பாகியதனால் சோழன் வென்றானென்பதும் சேரன்தோற்றானென்பதும் காணப்படுகின்றன.
முள்ளூர்க் கானம் - முள்ளூர் மலையைச் சார்ந்த காடு; இதுமலையனுக்குரியது.
நம்மோரன்னளென்றது, தன் நெஞ்சிற்குப் பொருந்திய அன்புசெய்பவளாக இருந்தாளென்றபடி. தமரோரன்ன ளென்றது, தன் தமர்நம்பால் எங்ஙனம் நொதுமலராக ஒழுகுகின்றனரோ அங்ஙனம் ஒழுகினளென்றபடி. பகலென்னாது வைகறையென்றான், விடிந்த அளவிலேஅவள் தமரோ ரன்னளாயினாளென்ற வியப்புத் தோன்ற. பகலில்தலைவியின் மனைக்கு விருந்தினனாகச் சென்ற காலத்துத் தலைவிநொதுமலர் போல் ஒழுகுவதை யறிந்தவனாதலின் இது கூறினான்.இரவில் தனக்குப் பொருந்தியும் பகலில் தமர்க்குப் பொருந்தியுமொழுகும் இரண்டு தன்மையினளாதலின், இரண்டறி கள்வி யென்றான்.தன்னோடுள்ள தொடர்பு தமருக்குப் புலப்படாவாறு கரந்து ஒழுகுதல்பற்றிக் கள்வி யென்றான்.
தமரையஞ்சி இங்ஙனம் கரந்தொழுகுகின்றா ளென்றமையால், இதுநீட்டித்து நிகழ்தலரிதென்பதும் வரைதலே நன்றென்பதும் புலப்பட்டு,வரைவுடைமை வேட்பக் கூறியதாயிற்று.
மேற்கோளாட்சி மு. தான் புகுதற்குத் தகுதியில்லாத காலத்துக்கண் அகம்புக்கு எதிர்ப்பட்டுழி அவரால் நீக்கப்படாத விருந்தின் பகுதியானாகிய வழித் தலைவன் கூறியது (தொல். களவு. 17, இளம்.); அமரா முகத்தளாதலும், தமரோரன்னளாகுதலும் தலைமகற்குப் புலனாகலின் அவை கண்ணுணர் வெனப்படும் (தொல். மெய்ப். 27, பேர்.) தான் வருந்திக் கூறுகின்றகூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன் கூறலின், இவ்வாறுஆற்றானாய் இங்ஙனம் கூறினானென்று அஞ்சித் தோழி உணராமல் தலைவி தானே கூடிய பொழுது தலைவன் கூறியது (தொல். களவு, 11. ந.);‘எஞ்ஞான்றும் கூட்டம் பெற்றமையால் தலைவி மகிழ்தல், இரண்டறிகள்வியென்னும் பாட்டினுள் தோற்றப்பொலிவை மறைப்பளெனத் தலைவன்கூறியவாற்றால் உணரப்படும் (தொல். களவு. 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. கள்வி: மணி. 18:121.
3. கானத்தின் மணம் கூந்தல் மணத்திற்கு: (குறுந். 199:3-4, ஒப்பு.);
"இமயக் கான நாறுங் கூந்தல்" (அகநா. 399: 2.)
2-3. மலையன் முள்ளூர்: "பேரிசை முள்ளூர்ப், பலருடன் கழித்த வொள்வாண் மலையன்" (நற். 170:6-7); "செவ்வேல், முள்ளூர் மன்னன்கழறொடிக் காரி" (அகநா. 209:11-2); "மலையன், மகிழா தீத்தவிழையணி நெடுந்தேர், பயன்கெழு முள்ளூர் மீமிசைப், பட்ட மாரியுறையினும் பலவே", "பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந", "எள்ளறுசிறப்பின் முள்ளூர் மீமிசை, அருவழி யிருந்த பெருவிறல் வளவன், மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை, புதுமையி னிறுத்த புகழ்மேம்படுந" (புறநா. 123:3-6, 126:8, 174:13-6.)
4. நள்ளென் கங்குல்: குறுந். 6:1, ஒப்பு, 160:4, ஒப்பு.
6. நறுங்கதுப்பு: குறுந். 2:4-5, ஒப்பு.
கதுப்பில் எண்ணெய் நீவுதல்: "எண்ணெயு நானமு மிவை மூழ்கி...... கடைகுழன்ற கருங்குழல்கள்" (சீவக. 164.)
7. அமரா முகத்தள்: மலைபடு. 74; அகநா. 253:3.
8. ஓரன்னள்: கலி. 23:9, 11, 13
(312)