(வரைவிடை வேறுபட்ட தன்னை வினவிய தோழிக்கு, "தலைவன்இன்னும் வந்திலன்; என் துன்பத்தை அன்னையறியின் உயிர் நீப்பேன்.அங்ஙனம் அறிவாளோவென அஞ்சி வேறுபட்டேன்" என்பதுபடத்தலைவி கூறியது.)
 316.    
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்  
    
நோய்மலி வருத்த மன்னை யறியின்  
    
உளெனோ வாழி தோழி விளியா  
    
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை  
5
ஓரை மகளி ரோராங் காட்ட  
    
ஆய்ந்த வலவன் றுன்புறு துனைபரி  
    
ஓங்குவரல் விரிதிரை களையும்  
    
துறைவன் சொல்லோ பிறவா யினவே. 

     (சில பிரதிகளில் இப்பாட்டு இல்லை.)

என்பது "வரைவிடை வேறுபடுகின்றாய்" என்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

தும்பிசேர் கீரன்.

     (பி-ம்.) 1. ‘நிற்பவும்’ 3. ‘உளெனே’ 4. ‘பொறாவிரவு’ 5. ‘ஓராங்குக்’ 6-7. ‘துனைப்பரி’, ‘வோங்கு’ 7. ‘ஓங்குவரலருவி விரிதிரை’ 8. ‘சொன்னனி பிறவாயினவே’.

     (ப-ரை.) தோழி--, விளியாது - கெடாமல், உரவுகடல் பொருத - வலியையுடைய கடலால் அலைக்கப்பட்ட, விரவு மணல் அடை கரை - மணல் விராவிய அடைகரையினிடத்து, ஓரை மகளிர் - விளையாட்டையுடைய பெண்கள்,ஓராங்கு ஆட்ட - ஒரு தன்மையாக அலைக்க, ஆய்ந்தஅலவன் - மெலிந்த நண்டினது, துன்புறு துனை பரி - வருத்தம் மிக்க விரைந்த செலவை, ஓங்குவரல் விரிதிரைகளையும் - உயர்ந்து வருதலையுடைய விரிந்த அலைஅந்நண்டைக் கொண்டு சென்று நீக்குகின்ற, துறைவன் - துறையையுடைய தலைவன், சொல்--, பிற ஆயின - வேறுபாடுடையனவாயின; ஆய்வளை ஞெகிழவும் - அழகியவளைகள் நெகிழ்ந்து போகவும், அயர்வு மெய் நிறுப்பவும் - அயர்வினை மெய்யின்கண்ணே நிலைக்கச் செய்யவும்,நோய் மலிவருத்தம் - துன்பமிக்க எனது வருத்தத்தை,அன்னை அறியின் - தாய் அறிவாளாயின், இன்னும்உளெனோ - இனி மேலும் உயிரோடு இருப்பேனாவேனோ?

     (முடிபு) தோழி, துறைவன் சொல் பிற ஆயின; வருத்தம் அன்னைஅறியின் உளெனோ?

     (கருத்து) தலைவன் வாராமையால் துன்புற்ற என் நிலையைத் தாய்அறியின் யான் உயிர் நீப்பேன்.

     (வி-ரை.) ஞெகிழவும் நிறுப்பவும் மலி வருத்தமென இயைக்க.நோய் உடலின் கண் தோற்றுவது; காம நோயுமாம். உளெனோ: ஓ எதிர்மறைப் பொருளில் வந்தது. வாழி: அசை நிலை.

     பரிவென்னும் பாடத்திற்குத் துன்புறுதலென்று பொருள் கொள்க.

     மகளிர் அலைக்குங் காலத்தில் அவர்க்கு அஞ்சி விரைந்து ஓடியநண்டை அம்மகளிர் கைப்படாவாறு அலை கொண்டு சென்றது; அதனால்அந்நண்டின் துன்பமும் விரைந்த நடையும் ஒழிந்தன. இது, தாயை அஞ்சிநின்ற எனது நோய்மலி வருத்தத்தை, வரைந்து கொண்டு என்னைத் தன்மனைவியாகப் பெறுமாற்றால் நீக்கற்குரியவன் தலைவனென்னும் குறிப்பைஉணர்த்தியது.

     சொல்-இத்துணைக் காலத்துள் வருவேனென்ற சொல். பிற மாறுபட்ட பொருளுடையன. தலைவன் சொல் பிறவாயின - தலைவன் சொற்கள் பொய்பட்டன. அவன் தான் குறித்த காலத்தே வந்திலனென்றபடி (ஐங். 162:4, உரை.) பிரிந்திரேனென்றும். விரைவில் வருவேனென்றும், நீட்டிப்பின் ஆற்றேனென்றும் பல படியாகக் கூறியவையாதலின் சொல்லைப் பன்மையாற் கூறினாள்.

     சொல்லோ: ஓ அசை நிலை; ஏ அசை நிலை.

     ஒப்புமைப் பகுதி 1. தலைவன் பிரிவினால் வளை நெகிழ்தல்: குறுந். 11:1,ஒப்பு.

     2. நோய்மலி வருத்தம்: நற். 64:13; அகநா. 205:6.

     3. பி-ம். உளெனே வாழி தோழி: நற். 199:5.

     வாழி தோழி: குறுந். 260:4, ஒப்பு.

     4. "உரவுத்திரை பொருத திணிமண லடைகரை" (குறுந். 175: 2);"உரவுத்திரை, அடுங்கரை" (குறிஞ்சிப். 178-9.)

     மணலடைகரை: "மோட்டுமண லடைகரை" (அகநா. 10:11.)

     5. ஓரை மகளிர்: குறுந். 48:3, ஒப்பு; நற். 155:1, 398:5; கலி. 75:4.

     ஓராங்கு: குறுந்.38:5, 257:1.

     5-6. மகளிர் அலவனாட்டுதல்: குறுந். 303:7, ஒப்பு.

     4-6. மணலடைகரையில் அலவன் ஆட்டுதல்: "பன்மலர் வேய்ந்தநலம்பெறு கோதையள், திணிமண லடைகரை யலவ னாட்டி" (அகநா.280:2-3.)

     8. மு. ஐங். 162:4.

(316)