(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை நோக்கி,"தலைவன் குறித்த பருவத்தே வருவான்" என்று தோழி கூறி வற்புறுத்தியது.)
 317.    
புரிமட மரையான் கருநரை நல்லேறு  
    
தீம்புளி நெல்லி மாந்தி யயலது  
    
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்  
    
தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்  
5
நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக 
    
வடபுல வாடைக் கழிமழை 
    
தென்புலம் படருத் தண்பனி நாளே.  

என்பது பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

மதுரைக் கண்டரதத்தன் (பி-ம். மதுரைக் கண்டாகததன்.)

     (பி-ம்.) 3. ‘தேம்பிய மாமலர்’.

     (ப-ரை.) புரிமடம் மரையான் - விரும்புகின்ற மடப்பத்தையுடைய மரையானினது, கருநரை நல் ஏறு - கருமையையும் பெருமையையுமுடைய நல்ல ஆண், தீ புளிநெல்லி மாந்தி - இனிய புளிப்பையுடைய நெல்லிக்காயைத்தின்று, அயலது - அருகில் உள்ளதாகிய, தேம்பாய் மாமலர் - தேன் பரவிய அழகிய மலர்கள், நடுங்க வெய்து உயிர்த்து - நடுங்கும்படி வெப்பமாகிய மூச்சை விட்டு, ஓங்கு மலைபசு சுனை - உயர்ந்த மலையினிடத்துள்ள பசிய சுனைநீரை,பருகும் நாடன் - உண்ணுகின்ற நாட்டையுடைய தலைவன், கைம்மிக - மிகும்படி, வடபுலம் வாடைக்கு - வடதிசையினின்றும் வரும் வாடைக்காற்றுக்கு, அழிமழை - அழிந்தமேகம், தென் புலம் படரும் - தென்திசையை நோக்கிச்செல்லும், தண்பனி நாள் - தண்ணிய பனிப்பருவத்தில்,நம்மை விட்டு அமையுமோ - இன்றியமையாத நம்மைப்பிரிந்து பொருந்துவானோ? பொருந்தான்.

     (முடிபு) நாடன், தண்பனி நாளில் நம்மைவிட்டு அமையுமோ?

     (கருத்து) தலைவன் குறித்த பருவத்தில் வந்துவிடுவான்.

     (வி-ரை.) நரை - பெருமை (மதுரைக். 63, ந.); வெண்மையுமாம்.முதலிற் புளிப்பும் அப்பால் இனிமையும் தோற்றுதலின் தீம்புளி நெல்லியென்றாள். நெல்லியைத் தின்று நீர்குடிக்குங்கால் இன்சுவை தோற்றும்.

     காட்டிலுள்ள மரையா முதலியன மலரால் மூடப்பட்ட சுனைநீரைக்குடிக்கையில் அம்மலர்களைத் தம் மூச்சுக் காற்றால் விலகச் செய்து அப்பால் நீரைக்குடித்தல் வழக்கம்;

  
"... ... .. கொழுங்கொடி முல்லை 
  
 ஆர்கழல் புதுப்பூ வுயிர்ப்பி னீக்கித் 
  
 தெள்ளறல் பருகிய திரிமருப் பெழிற்கலை"         (அகநா. 184:9-11.) 

    வாடை - வடகாற்று; அது வீசியதால் மேகம் தென்றிசையிற்படர்ந்தது.

     மற்று, ஏகாரங்கள், கை: அசை நிலைகள்.

     (மேற்கோளாட்சி) 1. நரை யென்பது பெருமை யென்னும் பொருளில் வந்தது(மதுரைக். 63-4, ந.)

     ஒப்புமைப் பகுதி 2. தீம்புளி நெல்லி: குறுந். 201:4, ஒப்பு.

     1-2. மரையா நெல்லிப் புளியை மாந்துதல்: குறுந். 235:3-4, ஒப்பு.

     3-4. சுனைநீரைப் பூ மூடியிருத்தல்: குறுந். 56:2.

     4-5. நாடன் நம்மை விட்டமையுமோ: "அமையே னின்னையானகன்ற ஞான்றே" (தமிழ்நெறி. 1 மேற்.)

     6-7. மழை தென்புலம் படர்தல்: "பெரும்பெயல் பொழிந்த தொழிலவெழிலி, தெற்கேர் பிரங்கு மற்சிரக் காலையும், அரிதே காதலர்ப் பிரிதல்","தன்றொழில் வாய்த்த வின்குர லெழிலி, தென்புல மருங்கிற் சென்றற்றாங்கு" (நற். 5:5-7, 153:4-5); "தெற்கேர்பு, கழிமழை பொழிந்த பொழுதுகொ ளமையத்து", "வாடை வைகறை, விசும்புரிவதுபோல் வியலிடத் தொழுகி, மங்குன் மாமழை தென்புலம் படரும்" (அகநா. 13:12-3, 24:6-8.)

  
(317)