அம்மூவன். (பி-ம்.) 1. ‘எறிதருக்’ 5. ‘றறியார்க்’ ‘யானேவேய்கவிப்’ 8. ‘புனைவனுந்’.
(ப-ரை.) தோழி, எறிசுறா - அடைந்தாரை எறிகின்றசுறாமீன்கள், கலித்த - மிக்க, இலங்கு நீர் பரப்பின் - விளங்கிய கடற்பரப்பினிடத்து, நறு வீ ஞாழலொடு புன்னைதாஅய் - நறிய ஞாழற்பூவோடு புன்னை மலரும் பரவி,வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் - வெறியாடும்இடத்தைப் போலத் தோன்றுகின்ற துறையையுடையதலைவன், குறியான் ஆயினும் - என்னை வரைந்து கொள்ளுதலை நெஞ்சுட் குறிக்கொள்ளானாயினும், குறிப்பினும் - குறிக்கொண்டானாயினும், பிறிது ஒன்று அறியாற்கு - அயலார் வரைவாகிய வேறு ஒன்று நேருமென்பதைஅறியாத அவனுக்கு, யான் உரைப்பலோ - நான் சொல்லுவேனோ? எய்த்த - இப்பொழுது இளைத்த, இ பணைஎழில் மெல்தோள் - இந்த மூங்கிலைப் போன்ற அழகையுடைய மெல்லிய தோள்களை, அணைஇய அ நாள் - அணைந்த அந்த நாளிலே, பிழையா வஞ்சினம் செய்த - தான் நம் திறத்துப் பிழையாமையைப் புலப்படுத்தும் சூளைச்செய்த, கள்வனும் - வஞ்ச நெஞ்சுடையவனும், கடவனும் - அவ்வஞ்சினத்தை நிறைவேற்றும் கடப்பாடுடையவனும்,புணைவனும் - நமக்கோர் புணைபோன்று இருப்பவனும்,தானே - அத்தலைவனே; அன்றிப் பிறரில்லை.
(முடிபு) துறைவன் குறியானாயினும் குறிப்பினும், அறியாற்கு யான்உரைப்பலோ! அணைஇய அந்நாள் வஞ்சினஞ் செய்து கள்வனும் கடவனும்புணைவனும் தானே.
(கருத்து) தலைவன் தன் மொழி தவறாது வரைந்து கொள்ளவேண்டும்.
(வி-ரை.) எறி - வலைஞரால் எறியப்படுகின்ற வென்பதும்பொருந்தும். கலித்த - ஆரவாரஞ் செய்த வெனலும் ஆம். விலங்குநீர் - மாறுபட்ட நீரென்பதும் இயையும். நறுவீஞாழலென்றதை ஞாழல்நறுவீயென மாற்றுக.
பலமலர்கள், பரவிய இடத்திற்கு வெறியாடும் இடத்தை உவமைகூறுவர், அவ்விடம் தெய்வத்தை வழிபடுவோர் சிந்தும் மலர்கள் நிறைந்திருத்தலின்.
பிறிது - களவொழுக்கத்தினையன்றி வரைதலாகிய பிறிது என்பதும்அமையும். அறியானென்றது சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது.
எய்த்த தோளென்றதனால் தலைவனது ஒழுகலாறு தனக்கு உடல்மெலிவை யுண்டாக்கினமையைப் புலப்படுத்தினாள். வஞ்சினம் செய்ததற்கேற்ப ஒழுகாமையின் கள்வனென்றாள். கள்வனாயினும் அவனைஒறுப்பாரிலர், தானே அதனை நிறைவேற்றும் கடப்பாடுடையனென்பாள்கடவனென்றாள். எங்ஙனமாயினும் அவனையன்றிப் புகல் பிறரிலரென்பாள் புணைவனென்றாள்.
வஞ்சின மென்றது, ‘நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன்" என்றுஇயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் செய்த சூளை. பிரியாதிருத்தல்வரைந்துகொண்டாலன்றி நிகழாதாதலின் அவ்வஞ்சினத்தை நிறைவேற்றுலதற்கு வரைதலே தக்கதென்பதைப் புலப்படுத்தினாள்.
ஒப்புமைப் பகுதி 1. சுறா எறிதல்: "வயச்சுறா வெறிந்த புண்டணிந்து" (குறுந். 269:3.)
2. நறுவீ ஞாழல்: "நறுமலர் ஞாழல்", "ஞாழல், மணங்கமழ் நறுவீவரிக்குந் துறைவன்" (நற். 106:6-7, 267:4-5); "எக்கர் ஞாழனறுமலர்"(ஐங். 150:1.)
ஞாழலும் புன்னையும்: "நறுவீ ஞாழன் மாமலர் தாஅய்ப், புன்னைததைந்த வெண்மண லொருசிறை," "புதுவீ, ஞாழலொடு புன்னை தாஅம்,மணங்கமழ் கானல்’’, "சிறுவீ, ஞாழலொடு கெழீஇய புன்னையங்கொழுநிழல்" (நற். 96:1-2, 167:8-9, 315:6-7); "புன்னையொடு ஞாழல்பூக்குந் தண்ணந் துறைவன்", "பொன்னிணர் ஞாழன் முனையிற்பொதியவிழ், புன்னையம், பூஞ்சினைச் சேக்குந் துறைவன்", (ஐங். 103:1-2, 169:2-3); "எக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇ.... ஞாழலோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித், தாழை வீழ்கயிற் றூச றூங்கி","பொன்வீ ஞாழ லொடு புன்னை வரிக்கும், கானலம் பெருந்துறை","ஞாழலொடு கெழீஇப், படப்பை நின்ற முடத்தாட் புன்னைப், பொன்னேர்நுண்டாது நோக்கி" (அகநா. 20:3-6, 70:9-10, 180: 12-4.)
3. வெறியயர் களம்: குறுந். 53:3, ஒப்பு.
2-3. பல மலர்கள் பரந்த இடத்திற்கு வெறியயர் களம்: குறுந். 53:2-3; மதுரைக். 279-84; மலைபடு. 149-50; அகநா. 114: 1-3, 182: 15-7; பெருங். 2. 2:104-5.
6. பணைத் தோள்: குறுந். 268:6, ஒப்பு.
மென்றோள்: குறுந். 90:7, 268:6.
தோளை அணைதல்: குறுந். 193:5, ஒப்பு.
5-6. தோள் மெலிதல்: குறுந். 87:5, ஒப்பு.
7. பிழையா வஞ்சினம்: குறுந். 36:5; அகநா. 267:2, 378:18.
8. தலைவனைக் கள்வனென்றல்: குறுந். 25:1, ஒப்பு; குறள். 1258;கம்ப. மிதிலைக். 55. கடவன்- புறநா. 106:5.
7-8. தலைவன் வஞ்சினம் பொய்த்தல்: குறுந். 25:1-2, ஒப்பு.
6-8. தலைவன் தலைவியின் தோளை அணைந்தபோது வஞ்சினம்கூறுதல்: குறுந். 36:4-5.
(318)