அள்ளூர் நன்முல்லையார். (பி-ம்.) 2.’விடியலுமின்றிப்’ 5. ‘தோற்றெனத்’
(ப-ரை.) காலையும் - காலைப்பொழுதும், பகலும் - உச்சிப் பொழுதும், கை அறு மாலையும் - பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும், ஊர் துஞ்சு யாமமும் - ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியலும் - விடியற்காலமும், என்ற இ பொழுது இடை தெரியின் - என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோற்று மாயின், காமம் பொய் - அத்தகையோருடைய காமம் உண்மை அன்று; பிரிவு தலைவரின் - பிரிவு வருமாயின், அப்போது, மா என - குதிரையெனக் கொண்டு, மடலொடு - பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து, மறுகில் தோன்றி - தெருவில் வெளிப்பட்டு, தெற்றென - யாவரும் இன்னாளால் இவன் இச் செயல் செய்தானென்று தெளியும்படி, தூற்றலும் - தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும், பழி - பழிக்குக் காரணமாகும்; வாழ்தலும் பழி - அது செய்யாது உயிரோடு வாழ்ந்திருத்தலும் பழிக்குக் காரணமாகும்.
(முடிபு) பொழுது இடைதெரியின், காமம் பொய்; பிரிவு தலைவரின் தூற்றலும் பழியே; வாழ்தலும் பழியே.
(கருத்து) தலைவியைப் பிரியின் உயிர் வாழேன்.
(வி-ரை.) “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய்” (குறள்.1227) என்பவாகலின், பிரிந்தார் காம நோய் மிக்குச் செயலறுதற்கு ஏதுவாகும் மாலையை, ‘கையறு மாலை’ என்றான். இரவின் முதல் யாமத்தை ஒழித்து இடை யாமத்தைக் கருதி, ‘ஊர் துஞ்சி யாமமும்’ என்றான்; ஊரினர் துஞ்சும் யாமம் அதுவாதலின். இடை - வேறுபாடுமாம். பொய்யே: ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது.
சிறுபொழுது ஐந்தென்பது ஒரு சாரார் கொள்கை; “மாலை யாமம் வைகறை யெற்படு, காலை வெங்கதிர் காயுநண் பகலெனக், கைவகைச் சிறுபொழு தைவகைத் தாகும்” (நம்பி. 12); “சிறுபொழு தைந்தினும்” (பிரபு.11:4); சிவஞான முனிவர் கொள்கையும் இதுவே. என்றிப்பொழுது; அகரம் தொகுத்தல். காமம் - இங்கே மெய்யுறுபுணர்ச்சி.
தெற்றென - தெளிய; ‘தெற்றெனக் கேண்மின்’ (கலி. 144:11, உரை). தெற்றெனத் தூற்றலாவது, ‘தலைவி என்னைத் துன்புறுத்தினாள்; அவள் என் குறை அறிந்து நிறைவேற்றாமையின் இம்மடல்மாமேல் ஏறி வருவேனாயினேன். நீங்கள் தலைவியை எனக்கு மணம் புரிவித்து இத்துன்பத்தினின்றும் என்னைப் பாதுகாக்க வேண்டும்’ என்று ஊரில் உள்ள சான்றோரை விளித்துக் கூறுதல்; இதனைக் கலித்தொகை, 138-141 ஆம் செய்யுட்களால் உணர்க.
பழியே, வரினே: ஏகாரங்கள் அசை நிலை.
‘நான் தலைவியைப் பிரிந்திருக்க ஆற்றேன். நீ என் குறையை மறுத்தாயாயின் மடலேறித் தலைவியைப் பெறலாகும். ஆயினும் அது தலைவிக்குப் பழி தருவதாதலின் அது செய்யத் துணிந்தேனல்லன்; அது செய்யாது உயிர் வைத்துக் கொண்டு வாழ்தலும் எனக்கு அரிது; ஆதலின் உயிர் நீத்தலே நன்று’ என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படி கூறினான்.
களவொழுக்கத்தின் இலக்கணங்களுள் இறுதியாக சாக்காடு என்பது இதனுள் வந்தது (தொல். களவு. 9.).
(மேற்கோளாட்சி) 1-3. சிறுபொழுது ஐந்து (தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி).
ஒப்புமைப் பகுதி 1. கையறுமாலை: (குறுந்.387:2:ஐங். 183:4.) மாலையில் தனித்தோர் செயலறுதல்: “ஐயறி வகற்றுங் கையறு படரோ, டகலிரு வான மம்மஞ் சீனப், பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை” (அகநா. 71:7-9; குறள். 1221-1230, பார்க்க). 2. ஊர் துஞ்சியாமம்: “துஞ்சூர் யாமத் தானும்” (குறுந். 302:7); “உறைமயக் குற்ற வூர்துஞ் சியாமத்து” (நற்.262: 3); “துஞ்சூர் யாமத்துத் துயிலறியலரே” (ஐங். 13:4) 3. காமத்தாற் பொழுது இடை தெரியாமை: “போழ்திடைப் படாமன் முயங்கியு மமையார்”, “பொழுதிடைப் படநீப்பின் வாழ்வாளோ” (கலி.4:10,24): “நாளிடைப் படினென் றோழி வாழாள்”, “எல்லையு மிரவு மென்னாது கல்லெனக், கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத், தண்பனி யற்சிரந் தமியோர்க் கரிதெனக், கனவினும் பிரிவறி யலனே” (அகநா. 112:9, 178:17-20); “போகப் பெருநுகம் பூட்டிய காலை, மாக விசும்பின் மதியமு ஞாயிறும், எழுதலும் படுதலு மறியா வின்பமொடு”, “மட்டுவிளை கோதையொடு மகிழ்ந்துவிளை யாடிச், செங்கதிர்ச் செல்வ னெழுச்சியும் பாடும், திங்களு நாளுந் தெளிதல் செல்லான்” (பெருங். 2.9:182-5, 4. 2: 86-8); “தூம மேகம ழுந்துகிற் சேக்கைமேற், காம மேநுகர் வார்தம காதலால், யாம மும்பக லும்மறி யாமையாற், பூமி மாநகர் பொன்னுல கொத்ததே” (சீவக. 135); “கங்குலும் பகலும் பிரிவில ராகிக் காதல்வெள்ளத்திடை யழுந்திப், பங்கமில் போக நுகருநாள் வந்துபுகுந்தது பங்குனித் திங்கள்” (உத்தர. சீதை வனம் 11).
4. மடல்மா: குறுந். 17:1, ஒப்பு. மடலேறி மறுகில் தோன்றல்: குறுந். 17:1-3, ஒப்பு.
5. தெற்றென: பொருந. 174; அகநா.48:4; குறள், 581.
6. பிரிவினால் வாழாமை: (குறுந். 57:3-4, 168;7); “பிரியின் வாழா தென்போ தெய்ய” (பழம்பாடல்).
(32)