(தலைவன் சிறைப்புறத்தானாக, "ஊரினர் கூறும் அலர் பெரிதாயிற்று" என்று தோழிக்குக் கூறுவாளாய், விரைவில் வரைந்து கொள்ள வேண்டு மென்பதை அவனுக்குத் தலைவி புலப்படுத்தியது.)
  320.    
பெருங்கடற் பரதவர் கொண்மீ னுணங்கல்  
    
அருங்கழிக் கொண்ட விறவின் வாடலொடு  
    
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்  
    
எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொரு நாள்  
5
நக்கதோர் பழியு மிலமே போதவிழ்  
    
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்  
    
புன்னையஞ் சேரி யிவ்வூர்  
    
கொன்னலர் தூற்றுந்தன் கொடுமை யானே.  

என்பது அலரஞ்சி யாற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத்தோழிக்குக் கூறியது.

தும்பிசேர் கீரன் (பி-ம். தும்பிசேர்தீரன், தும்பி மோசிகீரன்.)

     (பி-ம்.) 1. ‘கோண்மீனுணங்கலின்’ 2. ‘கழிகொண்ட’ 4. ‘பரிக்குந்’ 6. ‘புள்ளுமிழ்’ 5-6. ‘போதவிழ்’ ‘பொள்ளிணர்’ 8. ‘தூற்றத்தன்’, ‘தூர்த்தன’.

     (ப-ரை.) தோழி, பெரு கடல் - பெரிய கடலினிடத்தே, பரதவர் கொள்மீன் உணங்கல் - பரதவர் கொண்டமீனினது உலர்ந்த வற்றல், அரு கழி கொண்ட - நீந்துதற்குஅரிய கழியினிடத்தே அவர் கைக்கொண்ட, இறவின் வாடலொடு - இறாமீனின் வாடிய வற்றலொடு, நிலவு நிறம்வெள் மணல் புலவ - நிலவினது நிறத்தைக் கொண்டவெள்ளிய மணல் புலால் நாறும்படி, பல உடன் - பலஒருங்கே, எக்கர் தொறும் பரக்கும் துறைவனொடு - மணல்மேடு தோறும் பரவுகின்ற துறையையுடைய தலைவனோடு,ஒரு நாள் நக்கதோர் பழியும் இலம் - ஒரு நாளேனும்மகிழ்ந்து விளையாடிய பழி இல்லேம்; அங்ஙனம் இலமாகவும், போது அவிழ் பொன் இணர் மரீஇய - செவ்விஅரும்பு மலர்ந்த பொன் போன்ற பூங்கொத்துக்கள்பொருந்திய, புள்இமிழ் - வண்டுகள் ஒலிக்கின்ற, பொங்கர்புன்னை அம் சேரி - கிளைகளை யுடைய புன்னைமரங்களையுடைய சேரிகள் உள்ள, இ ஊர் - இவ்வூரார், தன் கொடுமையான் - தம்பாலுள்ள கொடிய தன்மையினால், கொன்அலர் தூற்றும் - வீணே பழிமொழிகளைக் கூறுவர்.

     (முடிபு) துறைவனொடு ஒரு நாள் நக்கதோர் பழியுமிலம்; இவ்வூர்அலர் தூற்றும்.

     (கருத்து) ஊரினர் கூறும் அலர் பெரிதாயிற்று.

     (வி-ரை.) புலவ - புலால் நாற்றம் வீச; இஃது புலாவவெனவும்வரும்; "புலாவ வீர்க்கும் (அகநா. 8:7) ஒரு நாளுமென உம்மையைமாறிக் கூட்டுக; உம் : இழிவு சிறப்பு; ஒரு நாளேனும் நக்கபழியிலமென்றாளேனும் கருதியது சில நாளே மகிழ்ந்தே மென்பது; தன் நெஞ்சத்து நிறைவின்மையின் அது பெற்றும் பெறாததாயிற்று. நக்கது: அவையல் கிளவி. பொன்னிணர் மரீஇய புன்னையெனக் கூட்டுக. புள் - நாரை முதலியனவுமாம், புன்னையஞ்சேரி: அம், சாரியை. ஊர் : ஆகுபெயர். சேரி - தெரு.

     வலையர் கொண்டமீனும் இறவும் மணல் முழுவதும் புலவப்பரக்குமென்றது, தலைவன் என்னோடு கொண்ட நட்பு ஊர் முழுதும்அலர் கூறப் பரவியதென்ற குறிப்பினது.

     ஒப்புமைப் பகுதி 2. இறவின் வாடல்: "முடிவலை முகந்த முடங்கிறாப்பாவைப், படுபுள் ளோப்பலிற் பகன்மாய்ந் தன்றே", "சூழ்கழி யிறவின்,கணங்கொள் குப்பை யுணங்குதிற னோக்கி" (நற். 49:3-4. 101:2-3.)

     கழியில் இறாமீன் உண்மை: "தெண்கழிச் சேயிறாப் படூஉம்"(ஐங். 196:3.)

     1-2. மீனையும் இறாவையும் பரதவர் தொகுத்தல்: "இருங்கழிமுகந்த செங்கோ லவ்வலை, முடங்குபுற விறவோ டினமீன் செறிக்கும்"(அகநா. 220:16-7.)

     3. மணலுக்கு நிலவு: குறுந். 123:2, ஒப்பு.

     4-5. தலைவி தலைவனொடு நகுதல்: குறுந். 169:3, 226:7.

     7. புன்னையஞ் சேரி: (குறுந். 351: 6); புன்னையங் கொழு நிழன்முன்னுய்த்துப் பரப்பும், துறைநணி யிருந்த பாக்கமும்" (நற். 101:4-5.)

     6-7. புன்னைப் பூங்கொத்துக்குப் பொன்: "பொன்னிணர் நறுமலர்ப்புன்னை", "பொன்னென, நன்மலர் நறுவீ தாஅம், புன்னை நறும்பொழில்" (அகநா. 126:15, 360:17-9.)

     7-8. ஊரினரது கொடுமை: குறுந். 24:5-6.

(320)