(பி-ம்.) 3. ‘தெடுஞ்சுவர்’, ‘தஞ்சுவா’. (ப-ரை.) பாணர் படுமலை பண்ணிய - பாணர்கள்படுமலைப் பாலையென்னும் பண்ணை வாசித்த, எழாலின் - இசையினது, வானத்து எழும் நல் சுவர் இசை வீழ - வானத்தின்கண் எழுகின்ற நல்ல உச்ச ஒலியை ஒப்ப ஒலி யுண்டாக,பெய்த புலத்து - மழை பெய்த கொல்லையின் கண், பூத்தமுல்லை - மலர்ந்த முல்லையினது, பசு முகை தாது நாறும்நறுநுதல் - பசிய அரும்பினது தாதின் மணம் போன்றமணம் வீசுகின்ற நல்ல நெற்றியையுடைய, அரிவை தோள்இணை துஞ்சி - தலைவியின் இரண்டு தோள்களிலேதுயின்று, கழிந்த நாள் இவண் வாழும் நாள் - சென்றநாட்களே இவ்வுலகத்தில் வாழும் நாட்களாகும்; எல்லாம் - ஏனைய நாட்களெல்லாம், எவன் - என்ன பயனை உடையன? பதடி வைகல் - அவை உள்ளீடில்லாத கருக்காயைப்போன்ற நாட்கள்.
(முடிபு) அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாள் வாழும் நாள்;எல்லாம் எவனோ? பதடிவைகல்.
(கருத்து) விரைவில் தலைவிபாற் போய்ச் சேர்தல் வேண்டும்.
(வி-ரை.) இவண் வாழுநாளெனத் தனியே பிரித்துக் கூறுதலின்,எல்லாமென்றது தலைவியோடு அளவளாவாத ஏனைய நாட்களைக் குறித்தது. எவனோ: ஓ. அசை நிலை.
இன்பமாகிய உள்ளீடின்மையின் பதடிவைகலென்றான். மேட்டுநிலத்திற் பெய்த மழையின் ஓசைக்குப் படுமலைப் பாலையிசை உவமை;
| "பலவயி னிலைஇய குன்றிற் கோடுதோ |
| றேயினை யுரைஇயரோ பெருங்கலி யெழிலி |
| படுமலை நின்ற நல்யாழ் வடிநரம் |
| பெழீஇ யன்ன வுறையினை" (நற். 139:2-5) |
என்று பிறரும் கூறுதல் காண்க.
படுமலை - படுமலைப் பாலை; பாலைப்பண் பன்னிரண்டனுள்ஒன்று (சிலப். 3:70-71, அடியார்.) எழால் - இசையோசை.
சுவலென்பது சுவரென வந்தது; சுவல் - மேலிடம்; என்றது மந்தம்,உச்சம், சமமென்ற மூன்றில் உச்ச நிலையைக் குறித்தது போலும். வீழ:உவமவுருபு. பசுமுகை - செவ்வி யரும்பு. நாறுமென வைத்தலின் நறுமை,நன்மையாயிற்று. அரிவை: பருவங்குறையாது தலைவியென்னுந் துணையாய் நின்றது. நாளே: ஏ அசை நிலை.
தலைவியோடிருக்கும் நாட்களே சிறந்தனவெனச் சிறப்பிக்கும்வாயிலாக அவளை விரைவில் அடையவேண்டு மென்ற தன் ஆர்வத்தைப் புலப்படுத்தினான். அது கேட்ட பாகன் தேர் பண்ணி விரைவில் தலைவிபாற் சேர்த்தல் பயன்.
தலைவியோடு இன்புறாத நாட்களைப் பதடி வைகலெனத் தலைவன்கூறியதாக அமைத்த சிறப்பால் இச்செய்யுளின் ஆசிரியர், "பதடிவைகலார்" என்னும் பெயர் பெற்றார்.
ஒப்புமைப் பகுதி 2. படுமலைப்பாலை: புறநா. 135:7.
4-5. முல்லை நாறும் நுதல்: "நின், நன்னுத னாறு முல்லை மலர" (ஐங். 492:1-2) "முல்லை காலொடு மயங்கி, மையிருங் கான நாறுநறுநுதல்" (அகநா. 43:9-10.)
நுதல் மணத்தல்: குறுந். 22:5, ஒப்பு.
6. தலைவியின் தோளில் தலைவன் துஞ்சுதல்: "வேய்புரை மென்றோ ளின்றுயில்" (குறிஞ்சிப். 242); "வேயுறழ் மென்றோட் டுயில் பெறும்" (கலி. 104:24); "தோள்புலம் பகலத் துஞ்சி", "முருந்தேர் முறுவலிளையோள், பெருந்தோ ளின்றுயில் கைவிடு கலனே" (அகநா. 187:1,193:13-4); "தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்" (குறள். 1103.)
(323)