(தலைவனிடம் தலைவி இற்செறிக்கப்படுவாளென் பதனைக் கூறியதோழியை நோக்கி, "யான் ஆண்டு வந்து இரவுக் குறியில் தலைவியைக்கண்டு செல்வேன்; அப்பால் வரைந்து கொள்வேன்" என்று தலைவன்கூற, அது கேட்ட தோழி, "நீ நின் அன்பின் மிகுதியால் வழியின் ஏதம்பாராது வருகின்றாய்; இவள் அதற்கு அஞ்சுவாள்" என்று கூறி வரைவுகடாயது.)
     324.    
கொடுங்கான் முதலைக் கோள்வ லேற்றை  
    
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை  
    
இனமீ னிருங்கழி நீந்தி நீநின்  
    
நயனுடை மையின் வருதி யிவடன்  
5.
மடனுடை மையி னுயங்கும் யானது  
    
கவைமக நஞ்சுண் டாஅங்  
    
கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே.  

என்பது செறிப்பறிவுறுக்கப்பட்டு, "இராவாரா வரைவல்" என்றாற்கு

(பி-ம். என்றார்க்கு)த் தோழி அது மறுத்து வரைவு கடாயது.

     (செறிப்பறிவு.... என்றாற்கு - தலைவி இற்செறிக்கப் படுவாளென்பதைத் தோழியால் உணர்த்தப் பெற்று, இரவுக்குறி வந்து தலைவியோடு அளவளாவி அப்பால் வரைந்து கொள்வேனென்ற தலைமகனுக்கு)

கவைமகன். (பி-ம்.) 1. ‘கொடுந்தாண்’ 5. ‘னுயக்கும்’.

     (ப-ரை.) பெரும - தலைவ, நீ நின் நயன் உடைமையின் - நீ நினது அன்புடைமையால், கொடு கால் முதலை கோள் வல் ஏற்றை - வளைந்த கால்களையுடைய முதலையினது கொல்லுதல் வல்ல ஆணானது, வழி வழக்கு அறுக்கும் - வழியினிடத்தே பிறர் செல்லுவதை நீக்கும், கானல்பெரு துறை - கானலையுடைய பெரிய கடற்றுறையின்கண்,இனம் மீன் இரு கழி நீந்தி - திரளாகிய மீன்களை யுடையகரிய கழியை நீந்திக்கடந்து, வருதி - வருகின்றாய்; இவள்தன் மடன் உடைமையின் உயங்கும் - இத்தலைவி தன்அறியாமையையுடைமையினால் வருந்துவாள்; யான்--,என் நெஞ்சத்தான் - என் மனத்தினுள்ளே, கவை மக நஞ்சுஉண்டாங்கு - இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர்திறத்தும் ஒரு தாய் வருந்துவது போல, அது அஞ்சுவல் - நீ அங்ஙனம் வருதலை அஞ்சுவேன்.

     (முடிபு) பெரும, நீ நயனுடைமையின் நீந்தி வருதி; இவள் தன்மடனுடைமையின் உயங்கும்; யான் அஞ்சுவல்.

     (கருத்து) நீ இரவில் வருதல் நன்றன்று.

     (வி-ரை.) இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு ஆற்றின் ஏதம் கூறிஅது மறுத்த வாய்பாட்டால் வரைவுகடாயது இது.

     நீர்வழியிற் போவாரைக் கொல்லுந் தொழிலுடைமையின்,வழிவழக்கறுக்கும் பெருந்துறை யென்றாள்; இதனால், ‘நீ அக்கழியின்கண்நீந்தி வருங்கால் நினக்கு ஏதம் நேருங்கொலோவென அஞ்சினேம்' என்னும் குறிப்பை அறிவித்தாளாயிற்று.

     கானலம் பெருந்துறை: அம் சாரியை. நயன் - அன்பு. மடன் - நின் அன்பையும், வழியில் நிகழும் ஏதத்திற்கு அஞ்சாத நின் ஆண்மையையும்அறியாமை. அது வென்றது இரவுக்குறியை.

     "நீ நின் அன்பினால் வருதலின் நீ வருதலைத் தடுத்தலும் தக்கதன்று; நினக்கு ஏதம் வருமோவென இவள் உயங்குதலின் இரவுக்குறி நேர்தலும் தக்கதன்று. நும்மிருவருக்கும் துன்பமுண்டாகும் இந்நிலையில் இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர் திறத்திலும் இரங்கும் தாயைப் போல, யான் இருவர் திறத்தும் இரக்கமுடையேன்' என்றாள்.

     இவ்வுவமையினால், இரண்டு மகவினுக்கும் ஒருங்கே நஞ்சு தீர்க்கும்மருந்து தருதலே தக்கதாதல் போல, இருவருக்கும் நன்மை தரும் வரைவே ஏற்புடைத்தென்ற வரைவுகடாதற் பொருளும் பெறப்படும்.

     கவைமகவின் செய்தியை உவமையாக எடுத்தாண்ட சிறப்பால்இப்பாட்டை இயற்றிய புலவர் கவைமகனென்னும் பெயர் பெற்றார்.

     மேற்கோளாட்சி 1. ஏற்றைக்கிளவி ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாலுக்கெல்லாம் உரித்து (தொல். மரபு. 49, பேர்.)

     ஒப்புமைப் பகுதி 1. கொடுங்கால் முதலை: குறிஞ்சிப். 257; மலைபடு. 90.

     2. வழக்கறுத்தல்: புறநா. 368:9; சீவக. 461, 907.

     3. இனமீனிருங்கழி: குறுந். 9:5; திணைமொழி. 44.

     6-7. ஒருவாறு ஒப்பு: "இரண்டு கன்றினுக் கிரங்குமோ ராவெனவிருந்தார்" (கம்ப. அயோத்தியா. மந்திரப். 32.)

(324)