(தலைவன் பிரிந்தகாலத்து ஆற்றாளென எண்ணிக் கவலையுற்றதோழியை நோக்கி, "அவர் செல்லாரென நினைந்து போவீராக வெனச்சொன்னேன். இப்போது அவர் யாண்டுள்ளாரோ!" என்று தலைவிவருந்திக் கூறியது.)
 325.    
சேறுஞ் சேறு மென்றலிற் பண்டைத்தன்  
    
மாயச் செலவாச் செத்து மருங்கற்று  
    
மன்னிக் கழிகென் றேனே யன்னோ  
    
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ  
5
கருங்கால் வெண்குருகு மேயும்  
    
பெருங்குள மாயிற்றென் னிடைமுலை நிறைந்தே.  

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்துஉரைத்தது.

     (மெலிந்து - வருந்தி)

நன்னாகையார்.

     (பி-ம்.) 1. ‘பண்டைத்தம்’ 2. ‘செலவாசெத்து’ 6. ‘நனைந்தே’.

     (ப-ரை.) தோழி--, சேறும் சேறும் என்றலின் - செல்வேம் செல்வேமென்று தலைவன் பலகாற் சொல்லியதனால், பண்டைதன்மாயம் செலவா செத்து - முன்புஅவன் கூறிய பொய்ச் செலவாக எண்ணி, மருங்கு அற்று - என் பக்கத்தி னின்றும் நீங்கி, மன்னி கழிக என்றேன் - நிலைபெற்று நீங்குக என்றேன்; அன்னோ - ஐயோ! ஆசுஆகு எந்தை யாண்டுளன் கொல்லோ - நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் எங்கே இருக்கின்றானோ! என் இடைமுலை நிறைந்து - என் நகில்களின் இடையிலுள்ள இடம்அவனது பிரிவால் அழுத என் கண்ணீரால் நிறைந்து, கருகால்வெள்குருகு மேயும் - கரிய காலையுடைய வெள்ளியநாரை உணவை உண்ணும், பெரு குளம் ஆயிற்று - பெரியகுளம் போல ஆயிற்று.

     (முடிபு) என்றலின், செத்து, கழிக என்றேன்; எந்தை யாண்டுளன்கொல்லோ! என் இடைமுலை குளமாயிற்று.

     (கருத்து) தலைவன் பிரிவை யான் ஆற்றேனாயினேன்.

     (வி-ரை.) தலைவன் பலகால், யான் பிரிவேன் பிரிவேன் எனச்சொல்லியும் பிரியாதிருந்தான். ஒருநாள் அவன் பன்முறை அங்ஙனம் கூறக்கேட்டுச் சிறிது வெறுப்படைந்த தலைவி சினத்தால், ‘என்னை விட்டுப் போக' என்று கூறினாள். அதுவே தலைக்கீடாகத் தலைவன் பிரிந்தான். அவன் பிரிவால் வருந்திய தலைவி கூறியது இது.

    மருங்கு - கண்ணோட்டமுமாம். கழிந்து மன்னுகவென்க. என்றேனே: ஏ அசை நிலை எந்தையென்றது முறை குறித்ததன்று; உறவின் மிகுதியைக் குறித்தது. கொல்லோ: இரங்கற் பொருட்டு (நன். 420, மயிலை.) முலை யிடை யென்றது இடைமுலையெனமாறி நின்றது.

     மேற்கோளாட்சி 4. கொல்லோ வென்பது இரக்கம் குறித்து வந்தது (நன். 420,மயிலை.)

     5-6. ‘தன் முலையிடை தடமாம்படி தன் இரு கண்ணினீரும் வடிந்து வீழ அழுமோ வென்க; கருங்கால் .... .... .... நிறைந்தே யென்றார் பிறரும்' (சீவக. 1629, ந.)

     ஒப்புமைப் பகுதி 2. மாயச்செலவு: தஞ்சை. 29.

     1-3. "சேறுஞ் சேறு மென்றலிற் பலபுலந்து, சென்மி னென்றல் யானஞ் சுவலே" (நற். 229:1-2.)

     4. மு. குறுந். 176:5, ஒப்பு.

     5. கருங்கால் வெண்குருகு: குறுந். 303:1, ஒப்பு.

     6. அழுதலால் முலையிடை குளமாதல்: "அறுகுள நிறைக்குநபோல வல்கலும், அழுதன் மேவல வாகிப், பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே" (அகநா. 11:13-5); "அழுதா டடமா கவணங் கிழையே", கண்ணீர் நிழன்மணிப்பூட், பரப்பி னிடைப்பாய்ந்து குளமாய்ப் பாலார் படாமுலையை, வருத்தி மணிநெடுங்கோட் டருவி போல வீழ்ந்தனவே" (சீவக. 1523,2944.)

     கண்ணீர் நகிலில் வீழ்தல்: குறுந். 348:4-5, ஒப்பு.

 5-6. 
"உருகி வாடியென் னுற்றது கொல்லெனக்  
  
 கருகி வாடிய காமரு கோதைதன் 
  
 இருக ணீரு மிடைமுலை பாய்ந்துகக் 
  
 குருகு பாய்தட மாக வழுங்கொலோ"     (சீவக. 1629)  
(325)