பரணர். (பி-ம்.) 7. ‘புலிநேர்குறழனிலை’ 8. ‘குறும்பரார்ப்பினும்’.
(ப-ரை.) சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி - சிறியமலரையுடைய ஞாழல் மரத்தின் வேரின்கண் அமைக்கப்பட்ட வளையிடத்திலுள்ள, அலவன் சிறுமனை சிதைய - நண்டினது சிறிய வீடு அழியும்படி, புணரி - அலைகள்,குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் - குறுந்தடிவாய்த்த முரசைப் போல வீசி முழங்கும் கடற்றுறையையுடைய தலைவன், நல்கிய நாள் தவசிலவே - தண்ணளிசெய்த நாட்கள் மிகவும் சிலவேயாகும்; அலர் - பழிமொழியோ, வில் கெழு தானை விச்சியர் பெருமகன் - விற்படையைக் கொண்ட படைகளையுடைய விச்சியர்களுக்குத் தலைவன், வேந்தரொடு பொருத ஞான்றை - அரசர்களோடு போர் செய்த காலத்தில், பாணர் புலி நோக்குஉறழ்நிலை கண்ட - பாணர்களது புலியினது பார்வையைஒத்த நிலையினாற் காணப்பட்ட, கலி கெழு குறும்பூர் - ஆரவாரமிக்க குறும்பூரினிடத்திலுள்ளார் செய்த, ஆர்ப்பினும்பெரிது - முழக்கத்தினும் பெரிய முழக்கத்தையுடையதாயிற்று.
(முடிபு) துறைவன் நல்கிய நாள் தவச்சிலவே; அலர் ஆர்ப்பினும்பெரிது.
(கருத்து) அலர் மிகுதியாயிற்று.
(வி-ரை.) குணில்வாய் - குறுந்தடியால் அடித்தல் வாய்க்கப் பெற்ற.இரங்குதல் - ஒலித்தல். நல்குதல் - தலையளி செய்தல்; கலி. 4:22.
விச்சியர் பெருமகன்: புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் விச்சிக்கோன் என்ற ஓர் உபகாரி சொல்லப்படுகிறான்; இவன் அவன் போலும்.
பாணர் போர்க்களத்தில் களவழிப்பா, பரணி முதலியன பாடுதல்மரபாதலின் அங்கே சென்றார். புலியென்றது இங்கே சிங்கத்தை. புலிநோக்கு - அரிமா நோக்கு; ஸிஹ்மாவலோகனம்; இருபுறமும் பார்த்தல்.பொருவார் இருசாராராதலின் இடைநின்ற பாணர் சிங்க நோக்காற் பார்த்தனர். குறும்பூர்: ஓரூர் போலும்.
சிலவே: ஏ பிரிநிலை; ஏனை ஏகாரங்கள் அசை நிலை.
‘அலர் பெரிதாதலின் அவ்வலரால் தமர் தலைவனை யறிந்து அவன் வரைவினை ஏற்றுக்கொள்வர்; ஆதலின் அலரை அஞ்சற்க' என்று தோழி கூறினாளாயிற்று.
ஒப்புமைப் பகுதி 1. சிறுவீ ஞாழல்: குறுந். 50:1; நற். 191:1.
1-2. நண்டின் வேரளை: குறுந். 117:2-3, ஒப்பு.
3. கடலொலிக்கு முரசொலி: பெருங். 1. 38:130.
3-4. தலைவன் நல்குதல்: குறுந். 37:1, ஒப்பு, 327:1.
8. வீரர் ஆர்த்தல்: குறுந். 34:5, ஒப்பு.
4-8. அலர் ஆர்ப்பினும் பெரிது: குறுந். 393:2-6; அகநா. 36:12-23, 209:2-6, 253:3-7, 256:13-21.
(328)