(தலைவன் பிரிந்த காலத்து வருந்திய தலைவியைத் தோழிவற்புறுத்தினாளாக, "யான் ஆற்றுவேன்; என்கண்கள் துயிலாவாகிஅழுதன" என்று தலைவி கூறியது.)
 329.    
கான விருப்பை வேனல் வெண்பூ 
    
வளிபொரு நெடுஞ்சினை யுகுத்தலி னார்கழல்பு 
    
களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம் 
    
பிறங்குமலை யருஞ்சுர மிறந்தவர்ப் படர்ந்து 
5
பயிலிரு ணடுநாட் டுயிலரி தாகித் 
    
தெண்ணீர் நிகர்மலர் புரையும் 
    
நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே. 

என்பது பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறத்துந் தோழிக்கு யான்ஆற்றுவ லென்பதுபடச் சொல்லியது.

ஓதலாந்தையார்.

     (பி-ம்.) 1. ‘வேனில்’ 2. ‘சினையஞற்றலி’, ‘யுகுத்தலி னானாது’4. ‘வழங்குஞ் சிறுநெறிதாவும்’ 7. ‘மழைக்கணிக்கு’.

     (ப-ரை.) தோழி, கானம் இருப்பை - காட்டிலேவளர்ந்த இருப்பை மரத்தினது, வேனல் வெள்பூ - வேனிற்காலத்திலே மலரும் வெள்ளிய பூக்கள், வளிபொரு நெடுசினை உகுத்தலின் - காற்றால் அலைக்கப்பட்ட நெடியகொம்புகள் உதிர்ப்ப தனால், ஆர்கழல்பு - காம்பினின்றும்கழன்று, களிறு வழங்கு சிறு நெறி புதைய - களிறுகள்செல்லும் சிறிய வழி மறையும்படி, தாஅம் - பரக்கின்ற,பிறங்குமலை அரு சுரம் - விளங்கிய மலைகளையுடையகடத்தற்கு அரிய பாலைநிலத்தை, இறந்தவர் படர்ந்து - கடந்து சென்ற தலைவரை நினைந்து, பயில் இருள் நடுநாள் - பயிலுகின்ற இருளையுடைய அரையிரவில், துயில் அரிதுஆகி - துயிலல் அரியதாகி, தெள் நீர் நிகர் மலர் புரையும் - தெள்ளிய நீரிடத்துள்ள ஒளியையுடைய மலரை ஒக்கும்,நன் மலர் மழைக்கணிற்கு - நல்ல மலர்ந்த குளிர்ச்சியையுடைய கண்ணிற்கு, பனி எளிய - நீர்த்துளிகள் எளிதிலேஉண்டாவன.

     (முடிபு) சுரம் இறந்தவர்ப் படர்ந்து துயில் அரிதாகிக் கண்ணிற்குப்பனி எளிது.

     (கருத்து) யான் ஆற்றியிருப்பவும் என் கண்கள் துயிலுதலொழிந்துஅழுதன.

     (வி-ரை.) தலைவனது பிரிவினால் வருந்திய கிழத்தியை நோக்கி,"நீ ஆற்றுதல் வேண்டும். துயிலாதிருத்தலையும் அழுதலையும் நீங்குதி"என்று தோழி கூற, கிழத்தி, "நான் ஆற்றுவேன்; ஆயினும் என் கண்கள்தாமே துயிலொழிந்து அழுதன. யான் என் செய்கேன்!" என்று கண்களை வேறுபடுத்துக் கூறினாள்.

     கானம் - பாலைநிலம். இருப்பை அந்நிலத்திற்குரியது;

  
"அத்த விருப்பைப்பூ"         (நற். 111:1.)் 

வேனிலென்பது வேனலெனவும் வரும்;

  
"இளவேனல் வந்ததா லென்னாங்கொ லின்று் 
  
 வளவேனற் கண்ணி மனம்"; 
  
"வேனற்பா ணிக்கலந்தாண் மென்பூந் திருமுகத்தைக்  
  
 கானற்பா ணிக்கலந்தாய் காண்"         (சிலப். 8: இறுதி வெண்பாக்கள்); 
  
"வேனல்வேண் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய் 
  
 பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே"    (திருவா. திருச்சதகம், 19.)் 

     வளி பொருதலின் சினை பூவை உகுத்தன. பயில் இருள் நடு நாள் - நானும் தலைவனும் ஒருவரோடொருவர் பயிலுதற்குரிய இருளையுடைய நடுநாளென்பதும் பொருந்தும். நிகர் மலர்புரையுமென்று வைத்தலின் மலர் மழைக்கண்ணென்பதில் மலர் வினையாயிற்று. கண்ணுக்குத் துயில் அரிதாகி அழுதல் எளிதாயிற்று.

     ஒப்புமைப் பகுதி 1-3. இருப்பைமலர் காற்றினால் உகுதல்: "இருப்பை.... ஆலி வானிற் காலொடு பாறி", "அத்த விருப்பையார்கழல் புதுப்பூத், துய்த்த வாய துகணிலம் பரக்க" (அகநா. 9:3-9, 15:13-4.)

     மலர் ஆர் கழல்பு உகுதல்: குறுந். 282:6-7.

     4. அருஞ்சுரம்: குறுந். 77:5, ஒப்பு.

     7. மழைக்கண்: குறுந். 222:6, 259:4.

     6-7. குறுந். 291:5-8; அகநா.11:12-5.

     5-7. தலைவி துயிலாமை: குறுந். 6:4, ஒப்பு.

     தலைவி துயிலாமையும் அழுதலும்: குறுந். 11:2, ஒப்பு; அகநா. 82:16-8.

(329)