(தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி, “இவன் நன்றாகப் பேசுகின்றான்; இங்கே விருந்து பெறுவான்” என்று உணர்த்தியது).
 33.    
அன்னா யிவனோ ரிளமா ணாக்கன் 
    
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ 
    
இரந்தூ ணிரம்பா மேனியொடு 
    
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே. 

என்பது வாயிலாகப் புக்க பாணன் கேட்பத் தோழியை நோக்கித் தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது.

    (வாயில் - தூது; வாயில் நேர்வாள் - தூதிற்கு உடம்படுவாளாகி).

படுமரத்து மோசிகீரன் (பி-ம். படிமத்து மோசிகீரன், படுமத்து மோசிகீரன்).

    (பி-ம்) 1. ‘ரினமாணாக்கன்’ 2. ‘தென்ன கொல்லோ’

    (ப-ரை.) அன்னாய் - தோழியே, இவன் ஓர் இள மாணாக்கன் - இப்பாணன் ஓர் இளைய மாணாக்கன்; தன் ஊர் மன்றத்து - தனது ஊரில் உள்ள பொதுவிடத்து, என்னன் கொல் - எத்தகையவனோ? இரந்தூண் நிரம்பா மேனியொடு - இரந்து பெறும் உணவினால் முற்ற வளராத மேனியொடு, விருந்தின் ஊரும் - புதிதாகப் பெறும் விருந்தின் பொருட்டுச் செல்லும், பெருசெம்மலன் - பெரிய தலைமையை உடையவன்.

    (முடிபு) அன்னாய், இவன் இளமாணாக்கன்; என்னன் கொல்லோ? செம்மலன்.

    (கருத்து) இவன் இங்கும் விருந்தைப் பெறுவான்.

    (வி-ரை.) தோழியைத் தலைவி அன்னை என்றல் மரபு (தொல்.பொருளியல், 52.) பாணன் வாயிலாகப் புக்குத் தலைவன் பெருமையைச் சொல்வன்மை புலப்படப் பாராட்டினனாதலால் அவன் கல்வியைச் சிறப்பிக்க எண்ணி, ‘இளமாணாக்கன்’ என்றாள். அவனைப் புகழ்ந்தமையால் அவன்பாலும் அவனை வாயிலாக விடுத்த தலைவன்பாலும் உள்ள ஆதரவு புலப்பட்டது. மன்றம் - பொதுவிடம்; ஊர்மன்றத்தே பாணர் தங்குவது பண்டை வழக்கம்.

    ‘அயலதாகிய இவ்விடத்திலே இங்ஙனம் சொல் வன்மையுறப் பேசுவோன் தன் ஊரில் தான் தங்கும் மன்றத்தில் இன்னும் சிறந்த சொல் வன்மையை உடையவன் போலும்!’ என்னும் கருத்தால், ‘என்னன் கொல்லோ’ என்றாள்.

    இரந்தூண் - இரந்து பெற்று உண்ணும் உணவு; ‘அட்டூண்டுழனி’ என்றதைப் போன்றது இத்தொடர். மாணாக்கர் இரந்து உண்ணுதல் மரபு. நிரம்பாமை - பொலிவு பெறாமை. விருந்தின் ஊர்தலாவது - விருந்து பெறுதற்குரிய இடங்களுக்கு எல்லாம் செல்லுதல்; ஊர்தல் - செல்லுதல்; ‘ஊர்தல் ஈண்டுப்போதன் மேற்று’ (சீவக.286, ந.).

    விருந்தினூரும் செம்மலன் என்றது, அதனை ஈண்டும் பெறுவான் என்னும் நினைவிற்று. தலைவனை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் உடையா ளாதலின் அவன் வருங்கால் விருந்தயர்தலும் அப்பொழுது அவனுக்கு வாயிலாக வந்த பாணனும் விருந்துணவு பெறுதலும் நேரும். தலைவர் வருங்கால் மகளிர் விருந்தயர்தல், “அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு” (குறுந். 398:6) என்பதனால் விளங்கும்.

    கொல்: ஐயம். ஓவும் ஏயும் அசை நிலை.

    தோழியை நோக்கி இங்ஙனம் தலைவி கூறியவற்றால் அவளது உடம்பாட்டுக் குறிப்பை அறிந்த பாணன் அதனைத் தலைவன்பாற் சென்று உணர்த்த அவன் வந்து தலைவியோடு அளவளாவுதல் இதற்குப் பயன்.

    (மேற்கோளாட்சி) 1. தோழியைத் தலைவி அன்னை என்றது (தொல். பொருளியல், 50, இளம், 52, ந.). ஐகாரவீற்றுப் பொதுப் பெயர் விளிவேற்றுமையில் ஆயென்று வந்தது (நன். 305, மயிலை, 306, சங்.). 2. ஊர்மன்று: வழக்கின்கண் இனமில்லாத அடைமொழி வந்தது (நன்.400, மயிலை.)

    மு. பாணன் வாயிலாக வந்துழித் தலைவி கூறியது (தொல். கற்பு. 6, இளம்.); பாணன் சொல் வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தது (தொல். கற்பு. 6, ந.).

    ஒப்புமைப் பகுதி 1. தோழியை அன்னையென்றது: குறுந்.150:5.

    2. பாணர் மன்றத்திருத்தல்: “மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்” (மலைபடு. 492); “மன்றம் போந்து மறுகுசிறை பாடும், வயிரிய மாக்கள்”, “வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ. மன்ற நண்ணி மறுகுசிறை பாடும்”, “மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக். கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும், அகவலன்” (பதிற். 23:5-6, 29:8-9, 43:26-8); “மன்றுபடு பரிசிலர்” (புறநா. 135:11) 2-3. மன்றத்துப் பாணர் இருத்தலும் ஊண் பெறுதலும்; “இரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக், கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி, அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு” (புறநா.34:12-4).

    4. பாணர் விருந்தை நோக்கிச் செல்லல்; “அறாஅ யாணரகன்றலைப் பேரூர்ச், சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது, வேறுபுல முன்னிய விரகறி பொருந” (பொருந. 1-3)

(33)