(தலைவியின் நோய் மிகுதியைக் கண்ட தோழி, “அறத்தொடு நின்றுதலைவனது வரவை நமர் ஏற்றுக் கொள்ளச் செய்வேன்” என்றது.)
  333.    
குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன் 
    
புனமுண்டு கடிந்த பைங்கண் யானை 
    
நறுந்தழை மகளி ரோப்புங் கிள்ளையொடு 
    
குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன் 
5
பணிக்குறை வருத்தம் வீடத் 
    
துணியி னெவனோ தோழிநம் மறையே. 

என்பது அறத்தொடு நிற்பலெனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது.

உழுந்தினைம் புலவன் (பி-ம். உழுந்தினைம் புல்லன்).

    (பி-ம்) 2. ‘கழிந்த’, ‘படிந்த’ 6. ‘துணியி லெவனோ’.

    (ப-ரை.) தோழி--, குறுபடை பகழி - குறிய படையாகிய அம்பையும், கொடு வில் கானவன் - வளைந்தவில்லையும் உடைய வேட்டுவனது, புனம் உண்டு கடிந்தபசு கண் யானை - தினைப்புனத்தை உண்டதனாற் கடியப்பட்ட பசிய கண்ணையுடைய யானை, நறு தழை மகளிர் -நறிய தழையுடையை அணிந்த மகளிர், ஓப்பும் கிள்ளையொடு - ஓட்டுகின்ற கிளிகளோடு, குறுபொறைக்குஅணவும் - குறிய பொற்றைக்கல்லினிடத்துச் செல்ல மேல்நோக்கும், குன்றம் நாடன் - மலையையுடைய நாட்டினனாகிய தலைவன், பணி குறை வருத்தம் - வினை நிறைவேறாமற் குறையாக நிற்றலினால் உண்டாகிய வருத்தம்,வீட - நீங்கும்படி, நம் மறை - நம்முடைய இரகசியத்தை,துணியின் எவன் - தாய்க்குத் தெரிவித்தால் என்ன குற்றம்உளதாகும்?

     (முடிபு) தோழி, நாடன் வருத்தம் வீட நம்மறை துணியின் எவன்?

     (கருத்து) யான் அறத்தொடு நிற்பேன்.

     (வி-ரை.) கானவன் புனங்காத்து நிற்ப யானை அவனாற் கடியுண்டது. மகளிராற் கிளிகள் கடியுண்டன. அவ்விரண்டும் குறும்பொறைக்குச் செல்ல அவாவின. பணிக்குறை வருத்தமென்றது தலைவன் வரைவொடு புகும் பொழுது அது நிறைவேறாதிருப்பதனால் நேரும் வருத்தம். அறத்தொடு நின்றால் உண்மையுணர்ந்து தமர் ஏற்றுக் கொள்வராதலால் தலைவனது குறைதீரும். துணியின் - தெளியச் செய்யின்; தன்வினை பிறவினைப் பொருளில் வந்தது. மறை - மந்தணம்; என்றது தலைவி தலைவன்பாற் காதலுடையா ளென்பது. இம்மறை தோழியாலும் அறியப்பட்டதாதலின் தன்னையும் உளப்படுத்தி நம்மறையென்றாள். எவனோ: ஓ, அசை நிலை. மறையே: ஏ. அசை நிலை.

     தினைகாப்பவரால் யானையும் கிளியும் கடியப்படும் நாடனென்றது செவிலியர் முதலியோரது காவலால் தலைவன் தான் விரும்பிய இன்பத்தைப் பெறாது வருந்தும்படி கடியப்பட்டானென்ற குறிப்பை யுணர்த்தியது.

    ஒப்புமைப் பகுதி 2. யானை தினைப் புனத்தில் மேய்தல்: குறிஞ்சிப். 157- 65; கலி. 41:7.

    4. குறும்பொறை: குறுந். 134:3, 215:5.

     அணவுதல்: பொருந. 13; குறிஞ்சிப். 35; பரி. 1:2.

    5. பணிக்குறை: குறள், 674.

    6. மறை: குறுந். 97 :4, 321:8.

(333)