(தலைவியை வரைந்து கொள்ள வந்துள்ளவனே அவளால் விரும்பப்பட்டவனாதலின், இனி அவன் வரைவானென்னும் செய்தியைக் கேட்டு இதுகாறும் உண்டான பலவகைத் துன்பங்களும் இன்றி இவ்வூரினர் மகிழ்வாராக என்று தோழி தலைவன் வரைவொடு வந்தமையைத் தலைவிக்கு உணர்த்தியது.)
 34.   
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்  
    
தமிய ருறங்குங் கௌவை யின்றாய் 
    
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே  
    
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ 
5
டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம்  
    
குட்டுவன் மரந்தை யன்னவெம்  
    
குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே. 

என்பது வரைவுமலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் (பி-ம். தோழிக்குக் கிழத்தி) சொல்லியது.

கொல்லிக் கண்ணன்.

    (பி-ம்) 1. ‘ஒறுப்ப வொல்லார்’ 4. ‘முனாஅது’, ‘யானை’, ‘யானையுண் குருகின்’ 4-5. ‘பெருந்தொட்ட மள்ளர்’ 6. ‘மாந்தை யன்னவென்’ 7. ‘குழை விளங்’.

    (ப-ரை.) முனாஅது - முன்னிடத்தில் உள்ளதாகிய, கானல் - கடற்கரையில் உள்ள, யானையங்குருகின் பெருதோடு - வண்டாழ்ங் குருகின் பெரிய தொகுதியானது, அட்ட மள்ளர் - பகைவரைக் கொன்ற வீரரது, ஆர்ப்பு இசை வெரூஉம் - வென்று முழங்கும் முழக்கத்தினை அஞ்சுதற்கு இடமாகிய, குட்டுவன் மரந்தை அன்ன - குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரைப் போன்ற, எம் - எமது, குழல் விளங்கு - பனிச்சை விளங்குகின்ற, ஆய் நுதல் கிழவனும் - அழகிய நெற்றிக்கு உரிமை உடையோனும், அவனே - வரைவொடு வரும் அத்தலைவனே யாவான்; ஆதலின், ஒறுப்ப - தமர் ஒறுக்கவும், ஓவலர் - வருத்தத்தினின்றும் நீங்காராகி, மறுப்ப - தோழியர் பல காரணங்கள் கூறி இங்ஙனம் வருந்துதல் தகாதென்று மறுத்துக் கூறவும், தேறலர் - தெளியாராகி, தமியர் - தலைவரைப் பிரிந்து தனியராய், உறங்கும் கௌவை இன்றாய் - உறங்குகின்ற வருத்தம் இல்லாதவராகி, இ ஊர் - இவ்வூரில் உள்ளார், இனியது கேட்டு இன்பு உறுக - அவன் வரைந்து கொள்வான் என்ற இனிய செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைக.

    (முடிபு) நுதற்கிழவனும் அவனே; கௌவை இன்றாய் இவ்வூர் இனியது கேட்டு இன்புறுக.

    (கருத்து) தலைவன் இனி விரைவில் மணந்து கொள்வான்.

    (வி-ரை.) ஒறுத்தல்: ‘நீ ஏன் இத்தகைய வேறுபாடு உடையையாயினாய்?’ என்றும், ‘நீ புறத்தே செல்லற்க’ என்றும் கூறிச் செவிலி முதலியோர் அலைத்தல். மறுத்தல் - தலைவன் விரைவில் வந்து மணம் புரிவான் என்று காரணங்காட்டி, அவன் வாரானோ என்று ஐயுற்ற தலைவியின் கருத்தை மறுத்து உரைத்தல். தமியர் - தலைவரைப் பிரிந்த தனிமையை உடையர். உறங்கும் கௌவை - உறங்குவதனால் உண்டாகும் வருத்தம்; என்றது துயில் வாராவிடினும் பிறர் தம் நோய் அறியாவாறு உறங்குவதுபோலப் படுத்துக் கிடக்கும் வருத்தம்; உறங்குதல் காரணமாக எழுந்த பழிமொழி எனலுமாம். தலைவிக்கும் பிறர்க்கும் இன்பம் பயப்பதாதலின் தலைவன் மணம் புரியும் செய்தியை இனியதென்றாள்; “நன்றுபுரி கொள்கை” (374) என்று பின்னும் வந்துள்ளது; “இனிதுசெய் தனையா னுந்தை வாழியர், நன்மனை வதுவை யயரவிவள், பின்னிருங் கூந்தன் மலரணிந் தோயே” (ஐங். 294:3-5) இவ்வூர் என்று ஊரார்மேல் வைத்துக் கூறினளாயினும் அது தலைவியைக் கருதியது என்று கொள்க. ஊரே: ஏ அசை நிலை.

    யானையங்குருகு: இதனை வண்டாழ்ங்குருகு என்பர் நச்சினார்ககினியர் (மதுரைக். 674, உரை); திருவோண நட்சத்திரத்திற்குரிய புள்ளாகச் சோதிட நூலார் கூறுவர்; “குஞ்சரக் குரல குருகு” என ஒரு பறவை அகநானூற்றிற் (145:15) கூறப்படுகிறது. அக்குருகே யானையங் குருகாயின் யானையைப் போன்ற குரல் உடைமை பற்றி இப்பெயர் பெற்றதென்று கொள்வதற்கு இடம் உண்டு. ஆனைச் சாத்தன் என்னும் பறவை (திருப்பாவை) இதுபோலும்.

    கானலம் பெருந்தோடு: அம், சாரியை. பறவைக் கூட்டத்தைத் தோடென்னும் வழக்கு இந்நூலுள், “இருந்தோட்டுப் புள்ளினம்”, “அன்னத்து, வெண்டோடு”, “காக்கைச் செவ்வாய்ப் பைந்தோடு” (191:2, 304:5-6, 334:1) என்று பின்னும் காணப்படும்.

    வீரர்கள் பகைவரைக் கொன்று அவ்வெற்றிக் களிப்பினால் நகைத்து ஆரவாரித்தல் இயல்பு: இது வீராட்டஹாசம் என்று வடமொழியாளரால் வழங்கப்படும்.

    போர் நெய்தல் நிலத்தில் நடைபெறுதலின் வீரர்களது ஆர்ப்பிசைக்குக் கடற்கரையில் உள்ள பறவைகள் அஞ்சின; “தும்பை தானே நெய்தலது புறனே” (தொல்.புறத்.12) என்பதன் உரையில், ‘இருபெருவேந்தரும் ஒரு களத்துப் பொருதலின், அதற்கு இடம் காடும் மலையும்கழனியும் ஆகாமையானும்’ களரும் மணலும் பரந்த வெளிநிலத்துப் பொருதல் வேண்டுதலானும், அந்நிலம் கடல் சார்ந்த வழியல்லது இன்மையானும்” என்று இளம்பூரணர் எழுதிய பகுதியைக் காண்க.

    குட்டுவன் - குட்ட நாட்டை உடையோன் (மதுரைக். 105, ந.); இந்நாடு மலைநாட்டின் ஒரு பகுதி. குட்டுவன் என்னும் பெயர் சேரர்களுக்கு உரியதாக வழங்குகின்றது; செங்குட்டுவன், பல் யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் சேரவரசர்கள் பெயர் அமைப்பு இதனைத் தெளிவுறுத்தும்.

    மரந்தை: இது மேலைக் கடற்கரைக்கண் உள்ள ஒரு நகர் (குறுந். 166).

    எம் நுதற்கிழவன் என்று தோழி கூறினாளேனும் அவள் கருதியது தலைவியின் நுதலையே என்று கொள்க. தலைவியின் உறுப்புக்களைத் தோழி தன்னுடையனவாகக் கூறுவது புலனெறி வழக்கு;இது,

  
“தாயத்தி னடையா வீயச் செல்லா 
  
 வினைவயிற் றங்கா வீற்றுக் கொளப்படா 
  
 எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் 
  
 அல்லா வாயினும் புல்லுவ வுளவே”         (தொல். பொருளியல், 27)  

என்பதனாலும் அதன் உரையாலும் உணரப்படும்.

    குழல் விளங்கு ஆய்நுதல் என்றது, மகளிர் குழலை வகுக்கும் ஐந்து வகைகளில் ஒன்றாகிய பனிச்சையைத் தன்மேலே பெற்று விளங்கும் நெற்றி என்றவாறு. அது முன்னுச்சியிலே அமைக்கப்படுவது; அளகம் என்பதும் அது; “ஓதி யொண்ணுதல்” (ஐங். 67:5); “அளக வாணுதல்” (கம்ப. மந்தரை. 86), “நுதலளகபாரம்” (தக்க.25) என்று அது நுதலோடு சார்த்தி வழங்கப்படுதல் காண்க. குழலை நுதலுக்கு அடையாக்கினமையின், குழலுக்கும் கிழவர் என்பது கொள்க. இங்ஙனமே தலைவியின் உறுப்புகளுக்கு உரிமை உடையவனாகத் தலைவனைக் கூறும் வழக்கு, “தோட்கிழவன்” (கலி. 41:42) என்பது முதலியவற்றால் அறியப்படுகின்றது. முன்பு வரைபொருளுக்குத் தலைவன் பிரிந்த காலத்தில் குழலையும், நுதலையும் நீவிச் சென்றானாதலின் அவ்வுரிமையை நினைந்து, ‘குழல்விளங்காய் நுதற் கிழவன்’ என்றாள் (கலி. 4:19). அவனே: ஏகாரம் தேற்றம்.

    (மேற்கோளாட்சி)     மு.தலைவனுக்குத் தலைவியின் தமர் வரைவுடம்பட்டதனைத் தலைவி விரும்பியது; ‘தமரான் ஒறுக்கப்பட்டு ஓவாராய்த் துயருழத்தல் ஆகாதென ஆற்றுவிக்குஞ் சொற்களால் மறுத்துரைப்பவுந் தேறாராய்த் தனித்திருப்பார் உறக்கங் காரணமாக எழுந்த கௌவையைக் கேளாது வரைந்தெய்திய மாற்றத்தைக் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம்’ (தொல். களவு.16, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. “ஒறுப்ப வோவலை நிறுப்ப நில்லலை” (அகநா.342:1).

    5. அட்ட மள்ளர் ஆர்த்தல்: (குறுந்.328:5-8, 393:4-6); “ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்து” (பெரும்பாண்.419; மலைபடு.386); “வென்றிகொள் வீர ரார்ப்பு”, “நேரா வெழுவ ரடிப்படக் கடந்த, ஆலங்கானத் தார்ப்பு”, “பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, மொய் வலியறுத்த ஞான்றைத், தொய்யா வழுந்தூ ரார்ப்பு” (அகநா.36:23, 209:5-6, 246:12-4): “வம்ப மள்ளரை ... அழுந்தப் பற்றி யகல் விசும்பார்ப்பெழக், கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை” (புறநா.77:9-12). 6.குட்டுவன்: நற்.105:7; அகநா.212:16. மரந்தை: நற். 35:7; பதிற்.90:28; அகநா.127:6, 376:18; முத்.82,105

(34)