அம்மூவன். (பி-ம்.) 2. ‘நாமவற் புலப்பின்’ 4. ‘அழுவி’, ‘அழிவினின்ற’, ‘வலர்வேர்க் கண்டல்’ 7. ‘அவரருந்த’, ‘அவர் வருந்த’.
(ப-ரை.) தோழி--, அவர் இருந்த என் நெஞ்சு - அத்தலைவர் இருந்த என் நெஞ்சம், காமம் கடையின் - காமமானது மிக்கதாயின், காதலர் படர்ந்து - தலைவரைநினைந்து சென்று, நாம் அவர் புலம்பின் - நாம் அவர்திறத்தே வருந்தினேமாயின், நம்மோடு ஆகி - நம்முடன்இருப்பதாகி, ஒரு பால் படுதல் செல்லாது - ஒரு கூற்றிலேஅமையாமல், ஆயிடை - அவ்விரண்டினிடையிலும்,அழுவம் நின்ற அலர் வேய் கண்டல் - கடற்கரைப் பரப்பிலேநின்ற மலரைப் பொருந்திய தாழை, கழி பெயர் மருங்கின்ஒல்கி - கழி பெயருகின்ற இடத்தில் தளர்ந்து, ஓதம் - வெள்ளம், பெயர்தர பெயர் தந்தாங்கு - பெயரும்பொழுதுதானும் பெயர்ந்தது போல, வருந்தும் - வருந்தா நிற்கும்.
(முடிபு) தோழி, நெஞ்சு காமம் கடையிற் படர்ந்து, நாம் புலம்பின்நம்மோடு ஆகி, ஒருபாற் படாதாகி வருந்தும்.
(கருத்து) தலைவன் இரவுக்குறி வரின் யான் வருந்துவேன்.
(வி-ரை.) காமம் கடைதல் - காமம் மிகுதிப் படுதல்;
| “காத லாற்கடை கின்றது காமமே”, |
| காய்த்தியிட் டுள்ளம் வெம்பிக் கடைந்திடு கின்ற காமம்” |
| (சீவக. 1308, 2804) |
கடையின் - செலுத்தினெனலுமாம். காதலர்ப் படர்ந்தும், நம் மோடாகியுமென்னும் உம்மைகள் தொக்கன. அழுவம் - நீர்ப்பரப்பு (மலைபடு. 528.)
‘தலைவர்பாற் காமம்மிகின் என் நெஞ்சம் அவர்பாற் சென்று அவரது வரவை விரும்புகின்றது. ஆயினும் அவர் வரும் வழியின் ஏதங் குறித்து நாம் வருந்தினேமாயின் அந் நெஞ்சமும் நம்முடன் சேர்ந்து வருந்துகின்றது. அவர் வருதலிலும் வாராமையிலும் விருப்பம் மாறி மாறிக் கொண்டது’ என்றாள்.
தாழை கழியில் ஓதம் மிகும்பொழுது உயர்ந்தும் தாழ்ந்த பொழுது தாழ்ந்தும் அலைதலைப் போல என் நெஞ்சு காமம் மிக்கபொழுது அவர்பாற் படர்ந்தும், மிகாதபொழுது அவர்க்கு வரும் ஏதம் நினைந்து வருந்தியும் கலங்குவதாயிற்றென உவமையை விரித்துக் கொள்க.
என் நெஞ்சு ஒருபாற் படாது வருந்துமென்றமையால் இரவுக்குறி மறுத்தாளாயிற்று.
ஒப்புமைப் பகுதி 3. ஆயிடை: குறுந். 43:3.
7. தலைவன் தலைவியின் நெஞ்சத்து இருத்தல்: குறுந். 36:3, ஒப்பு.
(340)