காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார். (பி-ம்) 7. ‘பணிவினை யெனினே’.
(ப-ரை.) கலை கைதொட்ட - ஆண்குரங்கு தன்கையால்தோண்டிய, கமழ் சுளைபெரு பழம் - மணம் கமழ்கின்றசுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தை, காவல் மறந்தகானவன் - காத்தலை மறந்த வேடன், ஞாங்கர் - அதன்பின்,கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும் - பழத்தால்மணமுடைய மரந்தோறும் குரங்குகள் படுதற்குரிய வலையைமாட்டிவைக்கும், குன்றம் நாட - மலையையுடைய நாட,பசு சுனைகுவளை தண் தழை இவள் - பசிய சுனையினிடத்து மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டியதண்ணிய தழையுடையை அணிந்த இத்தலைவி, ஈண்டுவருந்த - இங்கே துன்புற, நயந்தோர் புன்கண் தீர்க்கும்பயம் - நின்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும்நல்வினைப் பயனை, தலைப்படா - அடையாத, பண்பினைஎனின் - இயல்புடையாயென்னின், தகுமோ - அவ்வியல்புநினக்குத் தகுமோ?
(முடிபு) நாட, இவள் வருந்த, பண்பினையெனின் தகுமோ?
(கருத்து) நீ இனி இவளை வரைந்து கொள்ள வேண்டும்.
(வி-ரை.) கலை - ஆண் குரங்கு. சுளைப் பெரும் பழம் என்றமையின் பலாப்பழமாயிற்று. ‘நயந்தோர் புன்கண்டீர்க்கும் பயம்’ என்று பன்மை வாசகம் படக் கூறினும் அவள் கருதியது தலைவியின் வருத்தத்தைத் தீர்க்கும் செயலையே; அச்செயலாவது வரைதல்.
கானவனது சோர்வறிந்து குரங்கு தொட்ட பழம் அவன் படுவலைமாட்டியபின் பெறுதற்கு அரிதாதலைப் போல, காப்போரில்லா நிலையில்நீ கண்டு அளவளாவிய தலைவி இற்செறிக்கப்பட்டபின் நின்னால்அணுகுதற்கு அரியவளாவாளென்பது குறிப்பு; இஃது இரவுக்குறி மறுத்தவாய்பாட்டால் வரைவு கடாயது.
‘நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயந்தலைப் படாப் பண்பினையாதல்தகுமோ?’ என இடித்துரைத்தலின் நெருங்கிச் சொல்லியதாயிற்று.
ஒப்புமைப் பகுதி 1. கலை தொட்ட பழம்: (குறுந். 90:4, 373:4-6); “கலை தொடு பெரும்பழம்” (மலைபடு. 292); “கலையுணக் கிழிந்த முழவு மருள் பெரும்பழம்” (புறநா. 236:1.)
1-3. பலாப்பழத்தைக் கானவன் காத்தல்: குறுந். 385:1-2.
5. குவளைத் தழை: புறநா. 116:1-2.
4-5. சுனைக் குவளை: குறுந். 59:2-3, ஒப்பு.
6. நயந்தோர் புன்கண் தீர்த்தல்: “நயவர் பாணர் புன்கண்டீர்த்தபின்” (சிறுபாண். 248); “தந்நயந் துறைவோர்த் தாங்கி” (அகநா. 151:1.)
(342)