(தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தன்னை வற்புறுத்துந்தோழியை நோக்கி, “இக்காலத்தில் தம்மைப் பிரிந்து சென்ற தலைவர்வரப்பெறும் பேறுடைய மகளிர் தவஞ்செய்தாராவார்; யான் அதுபெற்றிலேன்” என்று தலைவி கூறியது.)
 344.   
நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத் 
    
தூற்றுந் துவலைப் பனிக்கடுந் திங்கட் 
    
புலம்பயி ரருந்த வண்ண லேற்றொடு 
    
நிலந்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல் 
5
பால்வார்பு குழவி யுள்ளி நிரையிறந் 
    
தூர்வயிற் பெயரும் புன்கண் மாலை 
    
அரும்பெறற் பொருட்பிணிப் போகிப் 
    
பிரிந்துறை காதலர் வரக்காண் போரே. 

என்பது பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் கூறியது.

குறுங்குடி மருதன்.

     (பி-ம்.) 2. ‘திவலைப்’ 3. ‘அண்ணனல்லேறொடு’ 5. ‘பால்வார்’,‘குழவியாளினிரையிறந்’, ‘யானிரையிறந்’, ‘யாநாளிறையிறந்’, ‘யானினிரையிறந்’.

    (ப-ரை.) தோழி--, தண்ணென - குளிர்ச்சி உண்டாகும்படி, தூற்றும் துவலை பனி கடு திங்கள் - வீசுகின்ற துளிகளாகிய பனியையுடைய கடுமையாகிய மாதத்தில், புலம்பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு - மேய்புலத்தின்கண்ணேயுள்ள பயிரை அருந்திய தலைமையையுடையஎருதோடு, நிலம் தூங்கு அணல - நிலத்தளவும் நாலுகின்றஅலைதாடியை யுடையனவாகிய, வீங்கு முலை செருத்தல் -பால் நிரம்புதலாற் பருத்த முலைக்காம்பையுடைய மடியையுடைய பசுக்கள், பால் வார்பு - பாலை ஒழுகவிட்டு,குழவி உள்ளி - தம் கன்றுகளை நினைந்து, நிரை இறந்து -தம்மோடு ஒருங்கு மேயும் ஏனைய நிரைகளை நீங்கி,ஊர்வயின் - ஊரினிடத்தே, பெயரும் - மீண்டு வருகின்ற,புன்கண் மாலை - துன்பத்தைத் தரும் மாலைக்காலத்தில்,அரு பெறல் பொருள் பிணி போகி - அரிதிற் பெறுகின்றபொருள்மேற் சென்ற நெஞ்சப் பிணிப்பினை நிறைவேற்றச்சென்று, பிரிந்து உறை காதலர் - தம்மை முன்பிரிந்துஉறைந்த தலைவர்கள், வர காண்போர் - மீண்டுவரக்காணும்மகளிர், மன்ற - நிச்சயமாக, நோற்றோர் - தவஞ் செய்த வராவர்.

     (முடிபு) தோழி, மாலையில் காதலர் வரக்காண்போர் நோற்றோர் மன்ற.

     (கருத்து) தலைவர் இப்பொழுது வந்திலராதலின் யான் வருந்துவேன்.

     (வி-ரை.) தூற்றுந்துவலைப் பனிக்கடுந்திங்களென்றது பனிக்காலத்தைச் சுட்டியது. அணல் - அலைதாடி யென்பர் (பு. வெ. 12, உரை.) செருத்தல்: ஆகுபெயர். மாலைக் காலத்தில் பசுக்கள் தம்முடைய கன்றுகளை நினைந்து பிரிந்து வந்தன. பொருட்பிணி - பொருள்வேட்கை (இறை. 35, உரை.)

    ஒப்புமைப் பகுதி 1. நோற்றோர் மன்ற: புறநா. 26:16.

    3-4. ஆனேறுடன் பசுக்கூட்டம் இருத்தல்: அகநா. 105: 15, 213:6, 269:3, 291:3.

    6. புன்கண் மாலை: குறுந். 46:6, 330:6.

    4-6. மாலையில் கன்றை நினைந்து பசுக்கள் வருதல்: குறுந். 108:2, ஒப்பு.

     பசுக்கள் கன்றை நினைந்து பாலை வார்த்து வருதல்: "பதவுமேயலருந்து மதவுநடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக்,கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு, மாலை" (அகநா. 14:9-12);"குவளை மேய்ந்த குடக்கட் சேதா, முலைபொழி தீம்பா லெழுதுகளவிப்பக், கன்றுநினை குரல மன்றுவழிப் படர" (மணி. 5:130-32.)

    7. பொருட்பிணி: குறுந். 255:7, ஒப்பு.; இறை. சூ. 35, 39.

(344)